‘ஸ்டூடியோ 9′ புரொடக்ஷன் சார்பில் விஜய் சேதுபதியை வைத்து ‘வசந்தகுமாரன்’ என்ற படத்தை தயாரிப்பதாக இருந்தார் தயாரிப்பாளர் சுரேஷ்.
ஆனால் பலமுறை கால்ஷூட் கொடுத்தும் அந்த தேதிகளை பயன்படுத்தவில்லை. இதற்கிடையே விஜய் சேதுபதி முன்னணி ஹீரோக்களில் ஒருவராகி விட்டதால் வசந்தகுமாரன் படப்பிடிப்பு நடந்தபாடில்லை. அதோடு அவருக்கும் தயாரிப்பாளர் சுரேஷுக்கும் ஏற்பட்ட மனக்கசப்பின் காரணமாக அப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படாமலே இருந்து வந்தது.
இந்நிலையில் இன்று அதே ‘ஸ்டூடியோ 9’ புரொடக்ஷன் சார்பில் ‘தர்மதுரை’ என்ற படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார் என்கிற விளம்பர அறிவிப்பு வெளியானது.
சீனு ராமசாமி இயக்கும் இப்படம் ஆரம்பிக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் ‘வசந்தகுமாரன்’ பட இயக்குநர் ஆனந்த் குமரேசன் மூன்று வருடங்கள் காத்திருந்த எனக்கு என் சினிமா வாழ்க்கையே கேள்விக்குறியாகியிருக்கிறது என்று கண்ணீர் விட்டிருக்கிறார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது :
”வசந்தகுமாரன்” திரைப்படத்தை எழுதி இயக்குவதற்காக கடந்த டிசம்பர் 2012-ல் நான் ஒப்பந்தமானேன். பணிகளும் நடந்தன. பிரச்சினைகள் பேச்சு வார்த்தைகள் என்று வருடங்கள் நகர்ந்தன. தற்போது அத்திரைப்படம் கைவிடப்பட்டதாக ஊடகங்களின் மூலம் அறிகிறேன்.
”வசந்தகுமாரன்” திரைப்படத்திற்குப் பதிலாக ”தர்மதுரை” என்கிற திரைப்படம் இன்று (டிசம்பர் 14 – 2015) படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளதாக மீண்டும் ஊடகங்களின் மூலமே அறிகிறேன். பல்வேறு குழப்பங்களுக்கு ஆட்பட்டு, இதை நான் பதிவிட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளேன்…
1. வசந்தகுமாரன் திரைப்படம் நடைபெறாமல் இருப்பதற்குக் காரணம் கதாநாயகருக்கும் தயாரிப்பாளருக்கும் ஏற்பட்டபிரச்சினை என்றே அறியப்படுகிறது. அது என்ன பிரச்சினை?
2. அந்த பிரச்சினை எப்படி முடிவுக்கு வந்தது?
3. பிரச்சினை முடிவுக்கு வந்திருந்தால், சம்மந்தப்பட்ட படம்தானே ஆரம்பிக்கப்பட்டிருக்க வேண்டும். மாறாக ஏன் ”வசந்தகுமாரன்” கைவிடப்பட்டது?
4. அதற்குப் பதிலாக ”தர்மதுரை” என்கிற திரைப்படம் எப்படி ஆரம்பிக்கப்பட்டது?
5. இவை எதுவுமே தொழில் அடிப்படையிலோ அல்லது குறைந்தபட்சம் மனிதாபிமான அடிப்படையிலோ கூட தயாரிப்பாளரோ அல்லது கதாநாயகரோ, தகவலாகவோ அல்லது என்னை அழைத்து நேரிலோ ஏன் என்னிடம் இதுவரை தெரிவிக்கவில்லை.?
நான் பலமுறைத் தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் அவர்களிடம் சரியான பதில்கள் கிடைக்கவில்லை. பதில்களே இல்லை என்பதுதான் உண்மை.
இப்பொழுது என்னுடைய எதிர்பார்ப்பு ஒன்றே ஒன்று தான்.
மூன்று வருடங்களாகக் காத்திருந்த எனக்கு அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை. சுமார் பன்னிரெண்டு வருட சினிமா வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது.
ஒரு திரைப்படம் கைவிடப்பட்டு அதற்குப் பதிலாக இன்னொரு திரைப்படம் நடக்கும் பொழுது அது ஏன் என்று விளக்கமளித்து துறை சார்ந்தவர்களுக்கும், ஊடகங்களுக்கும் ”அறிவிக்க” வேண்டியது அவசியம். குறைந்த பட்சம் எனக்காவது விளக்கமளிக்க வேண்டியது தார்மீக அடிப்படையில் உங்களது கடமை என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.
நான் உங்களிடம் படமோ, பணமோ அல்லது பரிதாபமோ வேண்டி நிற்கவில்லை. தயாரிப்பாளருக்கும் கதாநாயகருக்கும் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சினையில், ஒரு முதல்பட இயக்குனராகிய நான் ஏன் சம்மந்தமே இல்லாமல் பலியாக்கப்பட்டேன் என்பது குறித்த ஒரு முறையான விளக்கம் மட்டுமே…
நன்றி
‘தர்மதுரை’ வெற்றி பெற வாழ்த்துக்கள்.
இவ்வாறு இயக்குநர் ஆனந்த் குமரேசன் தனது முகநூல் பக்கத்தில் புலம்பியிருக்கிறார்.