ஜித்தன் 2 – விமர்சனம்

 

RATING : 1.5/5

முதல் பாகம் தந்த வெற்றியை வைத்துக் கொண்டு அடுத்த பாகம் எடுப்பது தமிழ்சினிமாவில் ஃபேஸனாகி விட்டது.  ஆனால் ‘ஜித்தன்’ ரமேஷூக்கு மீண்டும் ஒரு ரீ-எண்ட்ரிக்காகவே இந்த இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டிருக்கிறது.

‘ஜித்தன்’ முதல் பாகத்தை வின்சென்ட் செல்வா இயக்கியிருந்தார். இதில் கதை, திரைக்கதை, வசனம் மட்டுமே அவருடைய பங்களிப்பு, இயக்கம் அவருடைய உதவியாளர் ராகுல்.

முதல் பாகம் ‘ஜித்தன்’ கிளைமாக்ஸில் இருந்து ரமேஷ் உயிர்த்தெழுகிற மாதிரி ஆரம்பிக்கிறது படம்.

தனது அப்பா ஆசைப்பட்டது போல ஒரு பெரிய பங்களாவை கொடைக்கானலில் சீப்பாக வாங்கிப் போடுகிறார் ரமேஷ். வாங்கிப் போட்ட பங்களாவில் குடி வந்தால், வந்தவரை அங்கேயே தங்கியிருக்கும் ஒரு பேய் ”இது என்னோட பங்களா இங்க இருந்து போயிடு…” என்று மிரட்டுகிறது, பயமுறுத்துகிறது. சரி இதற்கு மேலும் அந்த பங்களாவில் இருப்பது சரியில்லை என்று அதை விற்க முடிவெடுக்கிற போது தான் பயமுறுத்திக் கொண்டிருந்த அந்த பேய் அவருடைய கண்ணுக்கு காட்சி தருகிறது.

அந்த அழகான பேய் வேறு யாருமில்லை. சிருஷ்டி டாங்கே தான்.

அழகான பெண் பேயாக இருந்தாலும் ஆணின் மனசு இளகாதா என்ன? அதன்படியே சிருஷ்டியின் ப்ளாஷ்பேக்கை கேட்டு மனசு மாறும் ரமேஷ் பங்களாவை விற்கும் முடிவை கை விடுகிறார். ஆனால் ஏற்கனவே பங்களாவை வாங்கும் மூடுக்கு வந்து விட்ட அந்த ஏரியா பெரிய மனுஷன் பங்களாவை நீ எனக்கு கொடுத்தே ஆக வேண்டுமென்று இல்லையென்றால் பங்களாவை இடித்து விடுவேன் என்று ஆட்களை திரட்டிக் கொண்டு வருகிறார்.

அவரிடமிருந்து ரமேஷ் பங்களாவை கைப்பற்றினாரா? இல்லையா? என்பதே கிளைமாக்ஸ்.

இனிமே பேய்க்கதைகள்ல புதுசா யோசிக்கிறதுக்கு ஒன்னுமே இல்லை என்பதை இந்த படத்தின் இயக்குநர் ராகுல் காட்சிக்கு காட்சி வெளிப்படுத்தியிருக்கிறார். கோர்வையில்லாத காட்சிகள் ஒரு பக்கம் நம்மை இம்சிக்க, இன்னொரு புறம் பின்னணி இசை என்ற பெயரில் ஸ்ரீகாந்த் தேவா போட்டிருக்கும் இசையை எந்த ராகங்கள், தாளங்கள் லிஸ்ட்டில் சேர்ப்பது என்றே தெரியவில்லை.

ஜித்தன் ரமேஷுக்கு போதாத காலம் இன்னும் முடியவில்லை போலிருக்கிறது. ‘லாங் கேப்’புக்கப்புறம் கமிட் பண்ணுகிற படம் கூட தயாரிப்பாளரின் கல்லாவை கரைக்கிற படமாகவே அமைந்து தொலைந்திருக்கிறது!

முதல் பாதிவரை கருப்பு பேயாக வரும் சிருஷ்டி டாங்கே இடைவேளைக்குப் பிறகு மேக்கப் போட்டமாதிரியே வெள்ளுடை வேந்தியாக வருகிறார். நல்லவேலை அவரை அந்தளவுக்காகவாவது விட்டாரே இயக்குநர்?

என்ன நம்ம நிழல் நம்மளை விட சிறுசாத் தெரியுது என்று ரோபோ ஷங்கரும் காமெடி என்ற பெயரில் வசனம் பேசித்தான் பார்க்கிறார். ஆனால் வரவேண்டுமே சிரிப்பு..???

அப்பாவின் ஆசையை நிறைவேற்ற விரும்பும் ஒரு மகனின் கதை என்று கொஞ்சம் ரசிகர்களை சீட்டிலிருந்து நிமிர வைக்கும் ஆரம்பக் காட்சிகளுடன் வரும் படம் அடுத்தடுத்த உப்பு சப்பில்லாத காட்சிகளால் கிழிந்து நார் நாராய் தொங்குகிறது.

யோகி பாபு அன்கோ பங்களாவில் தங்கியிருக்கும் போது பேயுடன் படும் பாடுகளை ரசிக்கலாம் என்றால் அதிலும் கூட ரெட்டி, கூடவே ஒரு குட்டி என்று தெலுங்கு பாஷையைக் பேசக் கொடுத்து கெடுத்திருக்கிறார்கள். யோகிபாபு அவர் மோடில் நார்மலாக டயலாக் டெலிவரி செய்திருந்தாலே அது சிறந்த காமெடி போர்ஸனாக வந்திருக்கும்.

கருணாஸ் எல்லாம் சிருஷ்டி டாங்கேவை காதலிக்க துரத்துவதும், லிப் டூ லிப் கிஸ்சுக்காக் அவருடைய லிப்பை திரையில் காட்டுவதும் காமெடி என்றால் அதையெல்லாம் பார்த்து ரசிக்க வேண்டுமென்பது ரசிகர்களுக்கு எவ்வளவு பெரிய தண்டனை!

சொந்தக் காசைப் போட்டு படமெடுத்ததாலோ என்னவோ? ஒரு படத்துக்காக அடிப்படை சுவாரஷ்யங்களைக் கூட யோசிக்காமல் மனம் போன போக்கில் எடுத்திருக்கிறார் இயக்குநர் ராகுல்.

இது ‘ஜித்தன்’ இரண்டாம் பாகமா? அல்லது ‘ஜித்தன்’ ரமேஷின் ரீ-எண்ட்ரி படமா?  இரண்டுமே இல்லை என்பதே நிஜம்.

ஜித்தன் 2 – போதும் இத்தோட நிறுத்திக்கங்க…

JithanJithan 2 Movie ReviewJithan RameshRahulSrikanth Devasrushti dangeVincent Selvaசிருஷ்டி டாங்கேஜித்தன் 2ஜித்தன் 2 விமர்சனம்ஜித்தன் ரமேஷ்ராகுல்வின்சென்ட் செல்வாஸ்ரீகாந்த்
Comments (0)
Add Comment