RATING : 3/5
மலேசியாவில் தோட்டத் தொழிலாளர்களாக இருக்கும் தமிழர்களுக்கும், அவர்களுக்கு சம்பளம் கொடுக்கும் மலாய் முதலாளிகளுக்குமான பஞ்சாயத்துகள் தான் இந்த ‘கபாலி.’
25 வருடங்கள் சிறை வாசத்துக்குப் பிறகு ஜெயிலிலிருந்து வெளியே வருகிறார் ரஜினிகாந்த்.
அவரை வரவேற்க வாசலில் காத்திருக்கும் ஜான் விஜய் காரில் போகும்போதே இடைப்பட்ட காலங்களில் மலேசியாவில் ஏற்பட்ட மாற்றங்களை ஒவ்வொன்றாக எடுத்து சொல்லிக் கொண்டு வருகிறார்.
அதோடு இந்த கால கட்டத்தில் அங்கு போதை மருந்து, கொலை, கொள்ளை போன்ற வேலைகளைச் செய்யும் சீன வில்லன் கும்பல் ஒன்று பெரிய அளவில் வளர்ந்து நிற்கிறார்கள்.
தன் வீட்டுக்கு வரும் ரஜினி சிறைக்கு செல்லும் போது நிறைமாத கர்ப்பிணியாக விட்டுப்போன மனைவி ராதிகா ஆப்தேவையும், மகள் தன்ஷிகாவையும் தேடுகிறார்.
ப்ளாஷ்பேக் விரிகிறது…
தமிழ்நாட்டில் திண்டிவனத்திலிருந்து அடிமை கூலியாக மலேசியாவுக்கு வரும் ரஜினி அங்குள்ள மலாய் முதலாளிகள் சீனர்களுக்கு அதிக சம்பளமும், தமிழர்களுக்கு குறைந்த சம்பளமும் கொடுப்பதை எதிர்த்து போராடுகிறார்.
அவரது போராட்டக் குணத்தைப் பார்க்கும் தமிழர்களின் நேர்மையான தலைவரான நாசர் ரஜினியை தன்னோடு சேர்த்துக் கொள்கிறார். அதே சமயத்தில் தமிழர்கள் வசிக்கும் அந்தப் பகுதிகளில் போதை மருந்துகளை நாசரின் அடியாளான கிஷோரின் உதவியுடன் விற்பனை செய்ய முயற்சிக்கிறார்கள் அந்த போதைக்கும்பல். இதற்கு இடைஞ்சலாக இருக்கும் நாசரை கிஷோரை வைத்தே கொலையும் செய்கிறார்கள்.
நாசர் இறந்த பிறகு அவர் இடத்தில் தமிழர்கள் எல்லோரும் ரஜினியை தலைவனாக்கிப் பார்ப்பது கிஷோருக்குப் பிடிக்காமல் போகிறது. இதனால் வரும் மோதலில் தான் 25 ஆண்டுகள் சிறைக்கு சென்று விட்டு ஜெயிலிருந்து ஆரம்பக் காட்சியில் வெளியே வருகிறார் ரஜினி.
வந்த இடத்தில் மகள் தன்ஷிகாவை பார்த்த பிறகு தன் ஆசை மனைவி ராதிகா ஆப்தே இறந்தே போய் விட்டார் என்று முடிவுக்கு வருகிற ரஜினிக்கு மனைவி உயிரோடு இருக்கிற விஷயம் தெரிய வருகிறது?
ரஜினி தன் அன்பு மனைவியை சந்தித்தாரா? கிஷோரின் உதவியுடன் தமிழ் மக்களுக்கு எதிராக வளர்ந்து நிற்கும் அந்த சீன வில்லன் கும்பலை எப்படி வீழ்த்தினார்? என்பதே கிளைமாக்ஸ்.
டைட்டிலைப் போலவே இந்தப்படம் முழுவதும் ரஜினி என்கிற ஒற்றை ஆளுமையின் கீழ் வியாபித்து நிற்கிறது!
இந்த வயதிலும் ரஜினி முகத்தில் கொடுக்கிற எக்ஸ்பிரஷன்களை ரசித்துக் கொண்டே இருக்கலாம். அதிலும் ஜெயிலிருந்து வந்தவுடன் அண்ணே இவரு நம்ம ஆளு தான். உங்களை பார்க்கணும்னு ஆசைப்பட்டார்… என்று ஜான் விஜய் கலையரசனை கை காட்டும் போது ரஜினி ஒரு ஸ்டைல் காட்டுவாரே..? 15 ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த அதே பிரமிக்க வைக்கு ஸ்டைல் அது!
சர்ச்சையைக் கிளப்புற பஞ்ச் வசனங்கள் அதிகம் இல்லை என்றாலும் உண்மையைப் பேசுகிற வசனங்கள் படத்தில் ஆங்காங்கே உண்டு. அப்படிப்பட்ட காட்சிகளிலும், சண்டைக் காட்சிகளிலும் அதே இளமை மாறாத ரஜினியை பார்க்க முடிகிறது. குறிப்பாக 80களில் வரும் ரஜினி கெட்டப் செம… செம…
ரஜினியின் மனைவியாக வரும் ராதிகா ஆப்தேவின் செண்டிமெண்ட் காட்சிகள் மனதை உருக்கும்! ஒரு கணவனும், மனைவியும் 25 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்துக் கொள்கிற அந்த நெகிழ்வான தருணத்தை மிக அழகாக இருவரும் திரையில் பிரதிபலித்திருக்கிறார்கள். நல்லவனுக்கு நல்லவன் படத்தில் ரஜினி – ராதிகாவை பார்த்திருப்போமே அப்படி ஒரு நெகிழ்வு. ”உன் கருப்பு கலரை எடுத்து அப்படியே என் உடம்பு முழுக்க பூசிக்கணும்” என்று சொல்கிற காட்சியில் தான் என்ன ஒரு எளிமையான காதல்!
ரஜினியின் மகளாக வரும் தன்ஷிகா சீன ஆக்ஷன் படங்களில் பறந்து பறந்து சண்டை போடும் துடிப்பான பெண்ணாக வருகிறவர் ரஜினியின் மகளாவும் செண்டிமெண்ட் காட்சிகளில் கவர்கிறார்.
எந்தப் படத்தில் தலை காட்டினாலும் தன் நாக்கு நீளத்துக்கு வசனங்களைப் பேசி கடுப்பேற்றும் ஜான் விஜய் இதில் கொஞ்சமல்ல ரொம்பவே அடக்கி வாசித்திருக்கிறார். அதைத்தான் அவரிடமும் ரசிக்க முடிகிறது ( தேங்க்ஸ் டூ டைரக்டர் ரஞ்சித்!)
போதைக்கும்பல் கோஷ்டியின் தலைவனாக வரும் சீன வில்லன் மிரட்டல் எல்லாம் ரஜினியின் ஸ்டைல்களுக்கு முன்னால் எடுபடாமல் போகிறது! இன்னொரு வில்லனாக வரும் கிஷோர் வழக்கமான கமர்ஷியல் படங்களில் பார்க்கும் ஒரு சாதாரண வில்லன் தான்.
தினேஷ், ரித்விகா, மைம் கோபி, கலையரசன் என ‘அட்டகத்தி’, ‘மெட்ராஸ்’ படங்களில் நாம் பார்த்த முகங்கள் அத்தனை பேரும் இந்தப் படத்திலும் இருக்கிறார்கள். ஆரம்பத்திலிருந்து எதுவும் பேசாமல் அமைதியாகவே வந்து போகும் தினேஷைப் பார்த்ததும் அவ்ளோ தானா இவரோட கேரக்டர்? என்று யோசிப்பதற்குள் ஒரு சண்டைக்காட்சியில் வாங்குகிற அடிகள் அவ்வளவு இயல்பு. நல்ல வேளையாக கைகொடுத்தது அந்த ஒரு சண்டைக் காட்சி! ஆனால் தினேஷ் அளவு முக்கியத்துவம் கலையரசனுக்கு இல்லாதது பரிதாபம்!
இது போன்ற கேங் ஸ்டார் படமென்றால் அதற்கு பின்னணி இசை ரொம்பவும் முக்கியம். அந்த வேலையை மட்டும் முழுமையாகச் செய்திருக்கிறார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். அதைத்தாண்டி பாடல்களை எல்லாம் காது கொண்டு ரசிப்பது என்பது நமக்கு நாமே கொடுத்துக் கொள்ளும் வேதனை தான். ( ரஜினிக்குன்னு பாடல்கள்ல கூட ஒரு ஸ்டைல் இருக்கு சந்தோஷ்! அது கூடத் தெரியாம…)
முரளியின் ஒளிப்பதிவில் கிளைமாக்ஸ் மலேசியாவின் அந்த பிரம்மாண்ட கட்டிடத்தை அப்படியே தனது கேமராவுக்குள் விழுங்கி அசத்தியிருப்பார். முழுப்படத்திலும் அது தொடர்கிறது.
‘மலையாகக் கிடந்த மலேசியாவை சீராக்கி பொன் விளையும் பூமியா மாத்தினவன் தமிழன். அவன் முன்னேறினா உங்களுக்கு பிடிக்காதா… ஒரு தமிழன் ஆளக் கூடாதா… நான் ஆளப் பிறந்தவன்டா..’ காந்தி சட்டை போடாததற்கும் அம்பேத்கர் கோட் போட்டதற்கும் அரசியல் இருக்கு.’ என இப்படிப்பட்ட நிஜத்தை பேசும் வசனங்கள் படத்துக்கு பக்கா பலம்!
காலம் காலமாக ரஜினியிடம் கமர்ஷியலை மட்டுமே எதிர்பார்த்து வரும் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தையும் கொடுத்திருக்கிறார் என்பதையும் மறுப்பதற்கில்லை. அதே சமயத்தில் பல கோடிகளுக்கு வொர்த்தான ஒரு கமர்ஷியல் ஆளுமையை முதல் முறையாக அவர் வயசுக்கு ஏத்த கேரக்டரில் இயக்கியிருக்கிறார் இயக்குநர் ரஞ்சித்.
எந்த இயக்குநருக்கும் அவ்வளவு சீக்கிரத்தில் வராத அந்த துணிச்சலுக்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டு!
கபாலி – கொஞ்சூண்டு மகிழ்ச்சி!