கடைசி விவசாயி- விமர்சனம்

ஒரு நல்ல கலைப்படைப்பு நம்மை உலுக்கி எடுத்துதான் தியேட்டரை விட்டு வெளியே அனுப்பும். அப்படிச் செய்திருக்கிறது கடைசி விவசாயி படம்

உசிலம்பட்டி அருகில் ஓர் கிராமத்தில் கடைசி விவசாயியாக இருக்கிறார் 83 வயது நல்லாண்டி. அந்த ஊரின் பெரியவர்கள் ஊரில் மழைத்தண்ணி வந்து ஊர் பழையபடி செழிக்க வேண்டுமானால் கருப்பனுக்கு கொடை கொடுக்க வேண்டும். அதற்கு நெல்வேண்டும் என்று நல்லாண்டியிடம் கேட்கிறார்கள். நல்லாண்டி நெல் தர சம்மதித்து தன் நிலத்தில் சாமிக்கு என்று நாற்று பாவி கதிர் வளர்க்கிறார். அதற்குள் நல்லாண்டிக்கு ஜெயில் தண்டனை பெறும் ஓர் துயரம் நடக்கிறது. நெல் வளர்ந்ததா? திருவிழா நடந்ததா? நல்லாண்டி ஜெயிலில் இருந்து வந்தாரா? என்பதற்கான பதில்தான் கடைசி விவசாயி

83 வயது முதியவரை இத்தனை காத்திரமாக மணிகண்டனைத் தவிர வேறு எந்த இயக்குநரும் திரையில் கையாளவில்லை என்று சத்தியம் செய்து சொல்லலாம். அந்தப்பெரியவரின் வாழ்வியல் காட்சிகளை அவ்வளவு அழகாக கோர்த்திருக்கிறார் மணிகண்டன். நல்லாண்டியாக இப்படத்தில் வாழ்ந்துள்ள அந்தப்பெரியவர் இன்று நம்மோடு இல்லை என்பது பெரும் வருத்தம். நான்கு ஐந்து காட்சிகளில் மட்டுமே வந்தாலும் விஜய்சேதுபதி தனித்த முத்திரையைப் பதித்துச் செல்கிறார். போகிற போக்கில் யோகிபாபு பேசும் அரசியல் எதார்த்தங்கள் நச் நச்

இப்படத்தின் ஒளிப்பதிவிற்காக இயக்குநர் மணிகண்டன் அவ்வளவு மெனக்மெட்டு கண்களுக்கு விருந்தளித்துள்ளார். படத்தில் பின்னணி இசைக்கு நிச்சயமாக தேசியவிருது வழங்கலாம்.

நிலம் என்பதை தாயாகவும் நிலத்தில் வளரும் பயிர்களை பிள்ளைகளாகவும் பார்க்கும் ஒரு பெரியவர், அவரின் விவசாயமே மூச்சு என்ற பயணம், போலீஸ், கோர்ட் போன்றவற்றின் இயங்குதல்கள் பற்றி துளியும் தெரியாத ஒரு வெள்ளந்தி மனிதரின் உணர்ச்சி வெளிப்பாடு என நல்லாண்டியோடு நாமும் வாழ்ந்து வரும் அனுபவத்தை தருகிறது கடைசி விவசாயி

4/5

actor vijaysethupathiactor yogibabuDirector M. ManikandanKadaisi Vivasayi movie