பிறக்கும் போதே அதிர்ஷ்டமில்லாதவன் என்கிற பெயரெடுத்த ஒருவன். அப்படிப்பட்டவனிடம் ”இது உங்கூடவே இருந்தா ரொம்ப அதிர்ஷ்டம்” என்று வந்து சேர்கிற வாஸ்து மீனால் அவனுடைய வாழ்க்கை எப்படி மாறுகிறது? என்பது தான் இந்த ‘கட்டப்பாவ காணோம்’.
‘பேட் லக் பாண்டி’ என்று பெயரெடுத்த சிபிராஜ் கிளப்பில் மப்பில் இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷைப் பார்த்ததும் காதலில் விழுகிறார்.
வீட்டின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்யும் அவர்கள் குடும்பம் நடத்த பணமில்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கையில், கட்டப்பா என்கிற வாஸ்து மீன் சிபிராஜின் தோழியான சாந்தினி மூலமாக அவர்கள் வீட்டுக்கு வந்து சேர்கிறது.
அதே சமயம் வட சென்னையின் பிரபல ரெளடியான மைம் கோபி ஆசை ஆசையாக வளர்த்து வந்த அதிர்ஷ்ட மீன் கட்டப்பாவைக் காணவில்லையே என்று தேடித் தேடி அலையோ அலை என்று அலைந்து கொண்டிருக்கிறார்.
மீன் வந்த நேரம் தங்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கும் என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள் சிபிராஜூம், ஐஸ்வர்யா ராஜேஷூம். ஆனால் வருவதோ ஒரு ரெளடிக்கூட்டம். வீட்டுக்குள் நுழைந்து அவர்களை ஹவுஸ் அரெஸ்ட்டில் வைக்கிறது.
அதிர்ஷ்ட மீன் வருகை உண்மையிலேயே சிபிராஜூக்கு அதிர்ஷ்டத்தை கொண்டு வந்ததா? அவருடைய ‘பேட் லக் பாண்டி’ என்கிற கெட்ட இமேஜை மாற்றியதா? இல்லையா? என்பதே கிளைமாக்ஸ்.
ஆக்ஷனுக்கான ஆஜானுபாகுவான உடல்வாகு என்றாலும் காமெடிக்கான உடல் மொழி சிபிராஜூக்கு நன்றாகவே ஒர்க்-அவுட் ஆகியிருக்கிறது இந்தப் படத்தில். நெருக்கமான சீன்களில் ஐஸ்வர்யா கொடுத்த மச்சம் சைஸ் இடத்தைக் கூட மிச்சம் வைக்காமல் ரொமான்ஸை இட்டு நிரப்புகிறார். அதைத் தாண்டி சிபிராஜிடம் சிலாகித்துச் சொல்ல ஏதுமில்லை. அதற்கான வாய்ப்புமில்லை.
‘காக்கா முட்டை’ நாயகியா இது? என்று கேட்க வைக்கிறது ரொமான்ஸ் காட்சிகளின் ஐஸ்வர்யா ராஜேஷ் செய்திருக்கும் அதகளம். சிபியிடம் தெரிகிற கூச்சம் கூட ஐஸ்வர்யாவிடம் எந்த சீனிலும் இல்லை. அந்தளவுக்கு ஈடுபாடு. மற்றபடி லைட்டான மேக்கப், கொள்ளைக் கொள்ளுகிற சிரிப்புமாக மாடர்ன் கேர்ள் ஆக மப்பும், மந்தாரமுமாக வருகிறார்.
சிபிராஜின் தோழியாக எண்ட்ரி கொடுக்கும் சாந்தினி போடுகிற துணிகளின் அளவைக் குறைத்துக் கொண்டு மேக்கப்பை ஹெவியாக்கியிருக்கிறார். சில ஆங்கிள்களில் ”என்னமோ மாதிரி”.
சிரிப்புக்கு கேரண்டியாக யோகி பாபு வந்தாலும் அவரை சில சீன்களிலேயே சுபம் போட்டு கடுப்பேத்துகிறார்கள். நல்ல வேளையாக காளி வெங்கட் அடிக்கிற டபுள் மீனிங் சீன்களை கொஞ்சம் ரசிக்க முடிகிறது.
வாஸ்து மீன் என்கிற சமாச்சாரத்தை வைத்து குழந்தைகள், பெரியவர்கள் என குடும்பத்தோடு ரசிக்கும்படி படத்தை எடுத்திருக்கலாம். ஆனால் இளவட்டங்கள் தான் என்னோட டார்க்கெட் என்கிற முடிவோடு படத்தை ‘A’ கிளாஸ் ரகத்தில் கிண்டியிருக்கிறார் இயக்குநர் மணி சேயோன். மனுஷன் யாரைப் பற்றியும் யோசிக்கவில்லை. படம் முழுக்க பச்சைப் பச்சையாக டபுள் மீனிங் வசனங்கள் கொண்ட இந்தப் படத்துக்கு யு சர்ட்டிபிகேட் கொடுத்த சென்ஸார் போர்டின் நடுநிலை பல்லிளிக்கிறது.
இந்த மீனிடம் எது கேட்டாலும் கிடைக்கும் என்று சொல்வதை நம்பி அதனிடம் உண்மையாகவே வேண்டுவதும், அன்பும், பாசமும் காட்டுகிற குழந்தை மோனிகாவின் நடிப்பு செம அழகு, சோ க்யூட் பேபி. இப்படிப்பட்ட காட்சிகளையெல்லாம் வைத்த இயக்குநர் திரைக்கதையின் போக்கை ஷகிலா பட ரேஞ்சில் நகர்த்தியதைத் தான் மனசு ஏற்றுக் கொள்ளவில்லை.
சந்தோஷ் தயாநிதியின் இசை அளந்து வைத்தாற்போல அளவாக ஒலிக்கிறது; ஆனந்த ஜீவாவின் ஒளிப்பதிவு இதம்.
வஞ்சிரம், சங்கரா, அய்ர ,எறா , சுறா என படத்தில் வருகிற அத்தனை கேரக்டர்கள் பெயர்களும் மீன்களின் பெயர்கள் தான். இப்படி படத்தில் சின்னச் சின்னதாய் சில விஷயங்களும், வாய் விட்டுச் சிரிக்க நிறைய காட்சிகளும் இருக்கின்றன. ஆனால் அதையெல்லாம் குடும்பத்தோடு பார்த்து ரசித்துச் சிரிக்க முடியுமா என்பது தான் நமக்குள் எழுகிற கேள்வி.
ஒருவேளை அந்த மாதிரி கேள்விக்கெல்லாம் உங்களிடம் இடமில்லை என்றால் ‘ஏ’ கிளாஸாக கவருவான் இந்த ‘கட்டப்பா’.