பாய்மரப்படகு போட்டியை முன்வைத்து பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளனர்
ராமநாதபுரம் மாவட்ட கடற்கரையில் நடக்கும் கதை. படகுப்போட்டியின் வெற்றிவீரனான சூரி, ஒரு பெரும் பிரச்சனையின் காரணமாக சென்னையில் வாழ்கிறார். ஆனால் அவர் விட்டு வைத்த பகையும் விட்டுச்சென்ற உறவும் அவரை மீண்டும் ஊருக்குள் அழைக்கிறது. 20 ஆண்டுகள் கழித்து ஊருக்குள் செல்லும் சூரிக்கு காத்திருக்கும் அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் என்னென்ன என்பதே படத்தின் கதை
கதையின் நாயகனாக இருந்து கதாநாயகனாக உயர்ந்துள்ளார் சூரி. அபாரமான நடிப்பால் நம் கண்களை நிறைக்கிறார். மஹிமா நம்பியார் படத்தில் நிறைய இடங்களில் ஸ்கோர் செய்கிறார். வில்லனாக நடித்துள்ள தெலுங்கு நடிகர் சுஹாஸ் ஆகத்தரமாக நடித்துள்ளார். சத்யராஜ் கெஸ்ட்ரோல் போல வந்து தனது பெஸ்டை கொடுத்துள்ளார். மிதுன் நடிப்பு படத்தில் ஒரு முக்கிய அம்சம். பாலசரவணன் அடிக்கும் சில பன்ச்கள் சிரிப்பை வரவழைக்கின்றன
ஒளிப்பதிவாளர் S.R.கதிரின் உழைப்பால் மண்டாடி நம்மை கொண்டாட வைக்கிறது. அவரின் விஷுவல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஜிவி பிரகாஷ் ஊனை உருக்கி உயிரைத் திருக்கி இசைத்துள்ளார்.
மேக்கிங்கில் கூடிவந்த அழகு திரைக்கதையில் சற்று குறைந்துள்ளது. கேரக்டர்களுக்கு நிகழும் சிக்கல் நமக்குள் முழுதாக இறங்கவில்லை. அதைச் சமன் படுத்தும் விதமாக ஒருசில காட்சிகள் நச் என்று அமைந்து அசத்தியுள்ளது. நல்ல விஷுவல் எக்ஸ்பிரீயன்ஸை அனுபவிக்க நிச்சயமாக தியேட்டர்க்குச் சென்று மண்டாடியைப் பார்க்கலாம்
3.25/5