பகடி ஆட்டம் – விமர்சனம்

RATING : 2.3/5

காக்கி உடுப்பா கூப்பிடுப்பா அவரை என்று சட்டென்று ஞாபகத்தில் வருகிற அளவுக்கு காக்கிக்கு நேர்ந்து விட்ட நடிகராகவே ஆகி விட்டார் ரகுமான்.

சில வாரங்களுக்கு முன்பு ரிலீசான ‘துருவங்கள் 16’ படத்தில் கூட காக்கி உடுப்பில் கவனம் ஈர்த்த ரகுமானின் மற்றுமொரு காக்கி கேரக்டர் படம் தான் இந்த பகடி ஆட்டம்.

கேட்கும் போதெல்லாம் காசு கொடுப்பதோடு வேலை முடிந்து விட்டது என்று பெற்ற ஆண் பிள்ளைகளின் நடவடிக்கைகளை கண்டு கொள்ளாமல் சம்பாத்யம் மட்டுமே குறியாக இருக்கும் கோடீஸ்வர பெற்றோர்களுக்கு பாடமாகவும் வந்திருக்கிறது இந்தப்படம்.

கண்ணில் படுகிற அழகான இளம் பெண்களுக்கெல்லாம் காதல் வலை விரித்து அவர்களின் கற்பை சூறையாடுவது தான் கோடீஸ்வர குடும்பத்தில் மகனாகப் பிறந்த ஹீரோ சுரேந்தரின் தினசரி டூட்டி.

அப்படித்தான் அன்றும் தன் காதலி ஒருத்தியை பார்க்க கிளம்பிப் போகும் போது முகம் தெரியாத ஒருவரால் கடத்தப்படுகிறார். திடீரென்று முழித்துப் பார்த்தால் தான் மரப்பெட்டி ஒன்றுக்குள் அடைத்து வைக்கப்பட்டிருப்பது தெரிய வருகிறது. தன்னை கடத்தியது யார் என்று தெரியாமல் அந்தப் பெட்டிக்குள் முடங்கிக் கிடக்கிறார்.

இந்த நேரத்தில் தன் மகனைக் காணவில்லை என்று போலீசில் புகார் கொடுக்கிறார் சுரேந்தரின் அப்பா நிழல்கள் ரவி. அதன் பேரில் அந்த கடத்தல் வழக்கை விசாரிக்க வரும் போலீஸ் உயர் அதிகாரி ரகுமானுக்கு சுரேந்தர் செய்த அத்தனை ஆபாசச் சமாச்சாரங்களும் தெரிய வருகிறது. பின்னர் குற்றவாளியைத் பின் தொடர்ந்து அவர் யார் என்று தெரிய வந்து பிறகு, நியாயத்தின் பக்கம் நின்று முடிவொன்றை எடுக்கிறார்.

அவரின் அந்த முடிவால் பெட்டிக்குள் முடங்கிய ஹீரோ வெளியில் வந்தாரா? அவரை அடைத்து வைத்திருந்தது யார்? என்பதை காட்சிகளாக விவரிப்பதே கிளைமாக்ஸ்.

2010 ஆம் ஆண்டு ஸ்பெயினில் ரிலீசான Buried என்ற ஆங்கிலப்படத்தின் தழுவல் தான் இந்தப்படம். படத்தின் டைட்டிலில் அதை ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். அந்த நேர்மையை பாராட்டலாம். அதேபோல இதே போன்ற கதையமைப்புடன் நாம் ஏற்கனவே ஒன்றிரெண்டு படங்களை தமிழில் பார்த்திருக்கிறோம். என்றாலும் திரைக்கதையில் சில மாற்றங்களைச் செய்து இயக்கியிருக்கிறார் இயக்குநர் ராம் கே. சந்திரன்.

இன்னும் அரை டஜன் படங்களில் காக்கி உடுப்பைக் கொடுத்து நடிக்க விட்டாலும் அசத்துவார் போலிருக்கிறது ரகுமான். அந்தளவுக்கு காக்கிச்சட்டையின் எல்லா அளவுகளும் ரகுமானுக்கு கனக்கச்சிதமாகப் பொருந்துகிறது. போலீஸ் என்றால் சட்டத்தின் பக்கம் தான் நிற்க வேண்டும் என்கிற சூழல் இருந்தும் நியாயத்தின் பக்கத்தையும் பார்த்து அதற்கேற்ப விசாரணையை மேற்கொள்வது அவரது மனிதாபமானத்தை வெளிப்படுத்துகிறது.

பெண்கள் என்றாலே போகப்பொருள் தான் என்கிற முடிவோடு படத்தில் ப்ளேபாய் கேரக்டரில் வருகிறார் ஹீரோ சுரேந்தர். கேரக்டர் அப்படி இருந்தாலும் அதற்கான காட்சிகள் படத்தில் அவருக்கு இல்லை.

ஹீரோயின் மோனிகா ஆள் பார்ப்பதற்கு முந்தாநாள் வயசுக்கு வந்த பெண் போல இருக்கிறார். வட்ட வடிவ அழகு முகமாகவும், கொஞ்சம் பூசினாற் போலவும் வருகிறார். மற்ற காட்சிகளில் பயத்தை வெளிப்படுத்தினாலும் ஹீரோவின் கை பட்டதும் மெய் மறந்து ரொமான்ஸ் காட்சிகளில் நெருக்கம் காட்டுவது செம ஹாட் மச்சி ரகம்.

ஹீரோயினை விட அவரது அக்காவாக வரும் கெளரி நந்தா தான் நடிப்பில் நம்மை நிமிர்ந்து பார்க்க வைக்கிறார். பெண் ஆட்டோ டிரைவராக வரும் இவர் தங்கையை படிக்க வைப்பதற்காக நேரம், காலம் பார்க்காமல் ஆட்டோ ஓட்டி உழைக்கிற காட்சிகளில் பாஸ் மார்க் கொடுக்கலாம். தங்கை தவறான வழியில் செல்கிறாள் என்று தெரிய வரும் போது கோபத்தில் குதிக்காமல் குடும்பச் சூழலை எடுத்துச் சொல்லி புரிய வைப்பது அருமை.

நிழல்கள் ரவி, சுதா, ராஜ ஸ்ரீ என படத்தில் வருகிற மற்ற நட்சத்திரங்களும் தங்கள் கேரக்டரை உணர்ந்து நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

கார்த்திக் ராஜாவின் இசையில் சட்டிப் பானைகளை ஒன்றாகக் குவித்துப் போட்டு உருட்டியது போல சில இடங்களில் எரிச்சலைத் தந்தாலும், இளைமையெனும் பூங்காற்று உள்ளிட்ட அப்பா இசைஞானி இளையராஜாவின் 80களின் ஹிட் பாடல்களை காட்சிகளுக்கு ஏற்ப ஆங்காங்கே பயன்படுத்தியிருப்பது புதுமை.

கதைக்காக படத்தில் ஆங்காங்கே காம நெடியை பரவ விட்ட இயக்குநர் படத்தில் தேவையில்லாமல் ஒட்டிக் கொண்டிருக்கும் சுவாரஷ்யமே இல்லாத சில காட்சிகளை நீக்கி விட்டு அந்த இடங்களில் கொஞ்சம் காமெடியை சேர்த்திருக்கலாம்.

என்றாலும் காதல் என்கிற வார்த்தையைச் சொல்லி இளம் பெண்களுக்கு ஆசை காட்டி அவர்களின் வாழ்க்கையைச் சீரழிக்க நினைக்கிற அத்தனை இளவட்டங்களுக்கும் பாடமாக இந்தப் படத்தை தந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம்.

Gawrri NandhaNizhalgal RaviPagadi AattamPagadi Aattam Movie ReviewPagadi Aattam ReviewRahmanRam K Chandrran
Comments (0)
Add Comment