ஜல்லிக்கட்டு விளையாட்டில் வீரம் மட்டுமல்ல ஜாதியும் ரோல்ப்ளே செய்யும் என்பதை நான்கு எபிசோட்களில் சொல்லியிருக்கிறது ஆஹா ஓடிடியில் வெளியாகியிருக்கும் பேட்டைக்காளி வெப்சீரிஸ். அடுத்தடுத்த எபிசோட்ஸ் வெளிவரவிருக்கும் நிலையில் இந்த நான்கு எபிசோட்ஸ் எப்படி இருக்கிறது எனப்பார்த்து விடலாம்
கலையரசன் ஓர் ஜல்லிக்கட்டு வீரன். ஊரின் ஒதுக்கப்புறமாக வாழும் வம்சம் அவருடையது. அவருக்கு ஆதரவாக அவரது தாய்மாமா கிஷோர் இருக்கிறார். வேல ராமமூர்த்தி மிகப்பெரிய சுய கெளரவம் மற்றும் சாதி வெறி பிடித்தவர். இளம் பெண் ஒருவரை வலுக்கட்டாயமாக திருமணம் முடித்த அவருக்கு அவரின் முதல் தாரத்து மகனே வில்லனாக இருக்கிறார். ஜல்லிக்கட்டு விளையாட்டில் வேல ராமமூர்த்தி விடும் காளையை மட்டும் யாரும் பிடித்துவிட முடியாது. கலையரசனால் அது முடியும் என்றாலும் ஜாதிவெறியால் அவரை பக்கத்தில் அண்டவிடாமல் வைக்கிறார் வேல ராமமூர்த்தி. ஆனால் அதையும் மீறி கலையரசன் வேல ராமமூர்த்தியின் காளையை அடக்க, பெரும் கலவரம் வெடிக்கிறது. அதன்பின் யார் யாரை அடக்குகிறார்கள் முடக்குகிறார்கள் என்பதே நான்கு எபிசோட்களில் விரியும் கதை
கலையரசன் கிஷோர் இருவரும் மதுரையின் மைந்தர்களாக தனித்துத் தெரிகிறார்கள். அற்புதமான நடிப்பு. சுய மரியாதையைச் சீண்டும் போது வெளிப்படும் அவர்களின் போர்க்குணம் நன்றாக வெளிப்பட்டிருக்கிறது இருவரின் நடிப்பிலும் துளி குறையுமில்லை. வேல ராமமூர்த்திக்குள் இருக்கும் ஓவர் ஆக்டர் சில இடங்களில் வெளிப்படுகிறார். ஷீலா வந்த வரைக்கும் நன்றாகவே நடித்துள்ளார்
சிறிய பட்ஜெட் சீரிஸை..தன் சீரிய உழைப்பால் பிரம்மாண்டமாக காட்டியிருக்கிறார் கேமராமேன். க்ரவுடை கவர் பண்ணும் போதும், வைட் ஷாட் வைக்கும் போதும் மிக கவனமாக வேலை செய்துள்ளார் அவர்
இசை அமைப்பில் தனிக்கவனம் செலுத்தியிருக்கிறார் இசைஞர். அது அவரது பின்னணி இசையில் தெரிகிறது
மூன்றாம் எபிசோடில் பிடித்த வேகம் முதல் இரண்டு எபிசோட்களில் இல்லாதது பெரும்குறையே. நிறைய காட்சிகளில் ட்ராமாட்டிக் வெளிப்படுவதும் மைனஸ். இருப்பினும் ஜாதிவெறியின் கோரமுகத்தை நம் பண்பாட்டு விளையாட்டோடு முடிச்சுப் போட்டு பேசியிருக்கும் இயக்குநரின் திறன் பாராட்டுக்குரியது.
பேட்டைக்காளி- சோடையில்லை
3/5
#PettaiKaali WebSeries