பொன்னியின் செல்வன்-2- விமர்சனம்

சோழ சாம்ராஜ்ஜியத்தின் வேரை அழிக்க வந்த பாண்டியர் குலத்துச் சதி எவ்வாறு ஒடுக்கப்பட்டது என்பதற்கான விடையே PS-2

பொன்னியின் செல்வன் கடலில் மூழ்குவது போலவும் நந்தினி உருவில் ஒருவர் வந்து பொன்னியின் செல்வனை காப்பாற்றுவது போலவும் முதல்பாகம் முடிந்திருக்கும். இந்தப்பாகம் நந்தினியின் உருவ ஒற்றுமையுள்ள பெண் யார்? நந்தினி அழிக்க நினைக்கும் சோழ குலத்தை அவர் உருவில் உள்ளவர் ஏன் காப்பாற்ற வேண்டும்? என்ற முக்கியமான கேள்விகள் உள்பட, ஆதித்ய கரிகாலனின் முடிவு, வந்தியத்தேவன் குந்தவையின் இணைவு என பல கேள்விகளுக்கு விடையளிக்கிறது படம்

கார்த்தி வந்தியத்தேவனாக வழக்கம் போல கலகலப்பூட்டுகிறார். ஜெயம்ரவி முதலில் பெரிய ஸ்கோப் இல்லாதவராக தெரிந்தாலும் முடிவில் நச்சென நெஞ்சில் பதிகிறார். நந்தினியாக ஐஸ்வர்யா ராய் காட்டியிருப்பது வெறித்தன பெர்பாமன்ஸ். குந்தவையான திரிஷா மிகச்சிறப்பாக நடித்துள்ளார். பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஜெயராம், பிரபு, விக்ரம் பிரபு, பார்த்திபன், உள்பட அனைவரும் நல்ல நடிப்பைக் கொடுத்துள்ளார்கள். ஆனால் அத்தனை பேரின் நடிப்பையும் ஒற்றைப் பார்வையில் வீழ்த்தி விடுகிறார் ஆதித்ய கரிகாலனாக நடித்துள்ள விக்ரம். ஐஸ்வர்யா ராய்க்கும் அவருக்குமான ஒரு மீட்டிங் பாய்ண்ட் உண்டு படத்தில். அந்தக் காட்சியில் அதகளம் செய்துள்ளார் விக்ரம்

இசைப்புயல் எங்கு தென்றலாக வேண்டும், எங்கு புயலாக வேண்டும் என்று அறிந்து தன் இசையை வழங்கியுள்ளார். ரவிவர்மனின் கேமரா அக்காலத்திய பழையாறு, கடம்பூர், தஞ்சை என அத்தனையையும் தத்ரூபமாக காட்டியுள்ளது.

PS-2வில் கல்கியின் மூலக்கதையில் இருந்து சில விசயங்கள் விலகியிருக்கிறது. அது ஏற்றுக்கொள்ளும் படியே இருக்கிறது. மல்டி ஸ்டார்கள் படத்தில் அனைவருக்கும் சம பங்கு அளிப்பது சவால் நிறைந்தது. அதைச் சரியாக கையாண்டுள்ளார் மணிரத்னம். ஒவ்வொரு கேரக்டருக்கும் மிகச்சரியான முடிவினைக் கொடுத்து ரசிகனுக்கு முழுச் சாப்பாடு கொடுத்துள்ளார். முன்பாதியில் உள்ள அழுத்தம் பின்பாதியில் மிஸ் ஆனாலும் டோட்டலாக யாரும் மிஸ் பண்ணக்கூடாத படம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி விடுகிறது PS-2

3.5/

#PonniyinSelvan2 #பொன்னியின்செல்வன்2

Actor jeyamraviactor karthiActor vikramDirector ManiratnamPonniyinSelvan2 movie