சிலுக்குவார்பட்டி சிங்கம் – விமர்சனம் #SilukkuvarupattiSingam

RATING 2.5/5

நடித்தவர்கள் – விஷ்ணு விஷால், ரெஜினா, ஓவியா, யோகிபாபு, ஆனந்த ராஜ், மன்சூர் அலிகான் மற்றும் பலர்

இசை – லியோன் ஜேம்ஸ்

ஒளிப்பதிவு – லக்‌ஷ்மண்

வகை – ஆக்‌ஷன், நாடகம்

சென்சார் பரிந்துரை – ‘U’

கால அளவு – 2 மணி நேரம் 14 நிமிடங்கள்

‘ராட்சசன்’ படத்தின் அசூரத்தனமான வெற்றியைத் தொடர்ந்து ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ பட டைப்பில் கமர்ஷுயல், காமெடியாக வந்திருக்கும் படம் தான் இந்த ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’.

அதிகப்பட்சம் ஆம்லேட்டுக்காக மட்டுமே கோபப்படும் கான்ஸ்டபிள் ஹீரோ விஷ்ணு விஷால், தனிப்படைகள் அமைத்து போலீஸ் தேடும் ஒரு ரெளடி மீது கை வைத்து விடுகிறார்.

இதனால் அவமானப்பட்டு விட்டதாக நினைக்கும் அந்த ரெளடி தனக்கு கொடுக்கப்படும் இன்னொரு வேலையையும் தள்ளி வைத்து விட்டு விஷ்ணு விஷாலை தீர்த்துக் கட்டுவது என்று முடிவுக்கு வருகிறார்.

அவரிடமிருந்து விஷ்ணு விஷால் தப்பித்தாரா? அல்லது போலீஸ் வலையில் ரெளடி சிக்கினாரா? என்பதே மீதிக்கதை.

போலீசாக விஷ்ணு விஷால். மிடுக்கான நடையும், உடையும் போலீசுக்கே உரிய கம்பீரத்தை வெளிக்காட்டினாலும், கான்ஸ்டபிள் என்பதால் காமெடி கலந்த கேரக்டருக்காக கொஞ்சம் அடக்கியே வாசித்திருக்கிறார். அதையும் ரசிக்க முடிகிறது.

விஷ்ணு விஷாலின் முறைப்பெண்ணாக வருகிறார் ரெஜினா. குறையாத அழகுடன் அவ்வப்போது வந்து செல்கிறவருக்கு ஹீரோவுடன் ரொமான்ஸ், டூயட் போன்ற வழக்கமான சமாச்சாரங்களைத் தாண்டி ஒன்றுமில்லை.

ஆட்டக்காரியாக வருகிறார் பிக்பாஸ் புகழ் ஓவியா. கொஞ்ச நேரமே வந்தாலும் அவர் வருகிற நேரங்களில் தியேட்டரில் விசில் சத்தமும், கைத்தட்டலும் காதைப் பிளக்கிறது.

காமெடி தான் மெயின் என்று இயக்குனர் முடிவு செய்தாரோ என்னவோ, படத்தின் ஆரம்பத்தில் பயங்கர வில்லன் பில்டப்போடு அறிமுகம் செய்யப்படும் சாய் காட்சிகள் நகர நகர காமெடியன் ஆக்கப்படுகிறார். அதிலும் அவர் பெரிய ரெளடி என்று தெரியாமலேயே போலீஸ் ஸ்டேஷனில் அவரிடம் உரண்டை இழுக்கும் விஷ்ணு விஷால் சம்பந்தப்பட்ட காட்சிகள் அல்டிமேட் ரகம்!

போதாக்குறைக்கு டோனியாக வரும் யோகிபாபுவும் தன் பங்குக்கு போகிற போக்கில் அடிக்கிற டைமிங் டயலாக்குகள் செம! செம!!

மன்சூர் அலிகான், கருணாகரன், ஆனந்தராஜ் என படத்தில் வருகிற மற்ற கேரக்டர்களும் தன் பங்கை சரியாகச் செய்திருக்கிறார்கள்.

கமர்ஷியல் படங்களில் இருக்கும் சில லாஜிக் மீறல்கள் இந்தப்படத்திலும் உண்டு.

ஆனாலும் குத்துப்பாட்டு, சரக்கடிக்கும் காட்சிகள் என மசாலாப் படங்களுக்குரிய சில ரெகுலர் சமாச்சாரங்கள் இருந்தும் ஆபாசம், அருவறுப்பில்லாத ஒரு காமெடிப்படத்தை குடும்பத்தோடு பார்த்து ரசிக்கும் படமாகக் கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் செல்லா அய்யாவு.

Chella AyyavuMovie ReviewOviyaRegina CassandraSilukkuvarupatti SingamSilukkuvarupatti Singam ReviewVishnu Vishal
Comments (0)
Add Comment