ஜெயம் ரவிக்கு அவசியத் தேவையாக இருக்கும் வெற்றியை இந்தச் சைரன் ஈட்டித்தருமா?
காஞ்சிபுரத்தில் நடக்கிறது கதை. சிறைக்கைதியான ஜெயம் ரவி பரோலில் வருகிறார். அவர் வெளிவந்த உடன் தன் மகளைக் காண ஆவலோடு இருக்கிறார். ஆனால் மகள் அப்பாவான ஜெயம் ரவியை கன்சிடர் செய்யவே இல்லை. அதற்கான காரணத்தை இயக்குநர் அந்தோணி பாக்கியராஜ் கதையில் வைத்துள்ளார். மேலும் ஜெயம் ரவியின் பரோல் டைமில் சில கொலைகள் நடக்கின்றன. அந்தக் கொலைகளுக்கும் ஜெயம் ரவிக்கும் உள்ள தொடர்பை கண்டுபுடிக்கும் இன்ஸ்பெக்டராக கீர்த்தி சுரேஷ் வருகிறார். கீர்த்தி சுரேஷின் கழுகுப்பார்வையில் ஜெயம் ரவி சிக்கினாரா..இல்லையா? என்பதே படத்தின் கதை
அளவாக நடிக்க வேண்டும் என்ற மூட்-லே ஜெயம் ரவி நடித்துள்ளார். சில எமோஷ்னல் காட்சிகள் தவிர்த்து நல்ல நடிப்பையே கொடுத்துள்ளார். கீர்த்தி சுரேஷ் பல இடங்களில் பொருந்தாத நாயகியாகவே தெரிகிறார். என்னதான் அவர் மிடுக்காக பேசினாலும் நமக்கு அவருக்குள் இருக்கும் குழந்தைமை வெளிப்படுகிறது. சமுத்திரக்கனி, அழகம்பெருமாள், யோகிபாபு, அனுபாமா பரமேஸ்வரன் ஆகியோர் நன்றாக நடித்துள்ளனர்
ஜிவி பிரகாஷ் இசையால் பாடல்களை நன்றாக கொடுத்துள்ளார்.தாமரை, பா.விஜய், சினேகன் என பாடலாசிரியர்கள் நல்ல முத்திரைப்பதித்திருந்தாலும், ஒரே ஒரு பாடலில் பெண்களுக்கு தேவையான சுதந்திரத்தை எழுதி அசரடித்துள்ளார் பாடலாசிரியர் முருகன் மந்திரம். சாம்.சி.எஸ் பின்னணி இசையால் படம் பேசும் உணர்வை நமக்குச் சரியாக கடத்தியுள்ளார். கேமராமேன் தன் சிறப்பான பங்களிப்பை படத்தில் வழங்கியுள்ளார்
ஒரு பரோல் கைதி, அவருக்குத் துணையாக ஒரு சேடோவ் போலீஸ், அதைமீறி கைதி செய்யும் சில செயல்கள், அந்தச் செயல்களை முன் வைத்து நடைபெறும் விசாரணை என படம் முன்பாதியில் மின்னல் வேகத்தில் நகர்கிறது. நல்ல திரில்லர் இன்வெஸ்டிகேஷன் மூட்-க்குச் சென்ற படம் இரண்டாம் பாதியில் லாஜிக் குளறுபடிகளால் சிக்னலில் மாட்டிய ஆம்புலன்ஸாக கதறுகிறது. இன்னும் சீற்றத்தோடும் லாஜிக்கோடும் இரண்டாம் பாதியை அணுகியிருந்தால் ஜெயம் ரவிக்கு ஒரு மாஸ் ஹிட் கிடைத்திருக்கும்..
சைரன்- ஜஸ்ட் பாஸ்
3/5