Rating : 3.3/5
இலங்கையில் சிங்கள அரசால் ஈழத்தமிழர்கள் படும் இன்னல்களையும், கொடுமைகளையும் பிரதிபலிக்கும் படங்கள் அவ்வப்போது வரத்தான் செய்கின்றன.
அவற்றிலிருந்து மாறுபட்டு இந்தியாவுக்கு அகதிகளாக வரும் ஈழத்தமிழர்களின் வாழ்க்கை இங்கே எத்தகைய வலிகளையும், வேதனைகளையும் கொண்டதாக இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டும் படம் தான் இந்த ‘சிவப்பு’.
ஈழத்தமிழர்களின் இந்திய அகதி வாழ்க்கையை ஆழமான வசனங்களுடன் மிக யதார்த்தமாக பிரதிபலிக்கிறது படம். சவாலே சமாளி என்ற முழுநீள காமெடிப்படத்தை தந்த சத்யசிவாவின் இயக்கமா இது என்கிற ஆச்சரிய அதிர்வையும் படம் முழுக்க காண முடிகிறது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதியான செல்வா ரியல் எஸ்டேட் தொழிலையும் செய்து வருகிறார். அவரது நிறுவனத்தின் சார்பில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்று கட்டப்பட்டு வரும் நிலையில் அதன் கட்டுமானப்பணிகளை அருகில் இருந்து பார்த்துக் கொள்கிறார் ராஜ்கிரண்.
ஒருநாள் கட்டிடத்தில் நடைபெறும் விபத்து ஒன்றில் தொழிலாளி ஒருவர் இறந்து போக தன் பொறுப்பில் கூட்டி வந்த அத்தனை தொழிலாளர்களையும் திரும்ப கூட்டிச்சென்று விடுகிறார் மேஸ்திரி.
இதனால் பாதியில் நிற்கும் கட்டிட வேலைக்கு ஆட்கள் பற்றாக்குறை வருகிறது. ராஜ்கிரண் ஆட்களைத் தேடி அலையும் போதுதான் செல்வாவுக்கு சொந்தமான லாரி ஒன்றில் 80 இலங்கைத் தமிழர்கள் தமிழகத்தின் அகதி முகாமின் கொடுமை தாங்காமல் ஆஸ்திரேலியாவுக்கு தப்பித்துப் போக முயற்சிக்கிறார்கள்.
அவர்கள் அத்தனை பேரையும் கட்டிட வேலைக்கு பயன்படுத்தும் ராஜ்கிரண் தேர்தல் முடியும் வரை பொறுமையாக இருங்கள், நானே உங்களை பத்திரமாக ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைக்கிறேன் என்று உத்திரவாதம் தருகிறார்.
இதற்கிடையே தப்பி வந்த அகதிகளில் கதாநாயகி ரூபா மஞ்சரிக்கும் ராஜ்கிரணிடம் வேலை செய்யும் நாயகன் நவீன் சந்திராவுக்கும் காதல் வருகிறது. இந்தக் காதலை ரகசியமாக தெரிந்து கொள்ளும் என்ஜினீயர் ஒருவர் போலி சிமெண்ட் மூட்டைகளை கட்டிட வேலைக்கு பயன்படுத்த அனுமதிக்குமாறு நவீன் சந்திராவை நிர்பந்திக்கிறார்.
அந்த மோதலில் விவகாரம் ஈழ அகதிகளை வைத்து வேலை வாங்கும் விஷயம் லேபர் கமிஷன் வரை போய் விட அத்தனை பேரையும் போலீஸ் அள்ளிப்போட்டு கொண்டு போகிறது. அதில் ரூபா மஞ்சரியை மட்டும் நவீன் சந்திரா காப்பாற்ற இருவரும் போலீஸ் காவலில் இருந்து தப்பிக்கிறார்கள். தப்பிக்கும் அவர்களை ராஜ்கிரண் சொன்னதன் பேரில் அரசியல்வாதி செல்வாவிடம் தஞ்சமடைகிறார்கள்.
அவரோ நாளை காலையில உங்க ரெண்டு பேருக்கும் திருமணம் என்று சொல்லி விட அரசியல்வாதியை நம்பிப் போன அந்தக் காதல் ஜோடிகள் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதே கிளைமாக்ஸ்.
கதாநாயகன், கதாநாயகி என இருவர் இருந்தாலும் படத்தில் அதிகம் கவனத்தைப் பெறுவது ராஜ்கிரணின் கோனார் கேரக்டர் தான். உண்மையான விசுவாசியான அவர் ஈழத்தமிழர்கள் மீதான பாசத்தை பேசும் ஒவ்வொரு வசனத்திலும் பிரதிபலிக்கிறார்.
ஏற்கனவே சிங்கள அரசாங்கம் விரட்டி விரட்டி அடிக்கிறதுனால தான் நம்மை நம்பி தமிழ்நாட்டுக்கு வர்றாங்க அவங்களை நாமும் விரட்டி விட்டா அவங்க எங்க போவாங்க..? என்று கேட்கும் இடங்கள் நெகிழ வைக்கும் நிஜம்.
ஹீரோ நவீன் சந்திரா ஒரு கட்டிடத் தொழிலாளியின் கேரக்டரை அப்படியே உள்வாங்கி நடித்திருக்கிறார். முதலில் ரூபா மஞ்சரியை கலாய்ப்பதும், பின்னர் அவர் மீதான இரக்கம் காதலாக மாறும்போது நடிப்பின் உச்சம் தொடுகிறார்.
ஒரு ஈழத்தமிழ் பெண்ணின் பயம், கோபம், சந்தோஷம், துக்கம், அழுகை, இயலாமை என அத்தனை உணர்ச்சிகளை ஒருசேர கொட்டியிருக்கிறார் கதாநாயகி ரூபா மஞ்சரி! நல்ல நடிப்பு வருகிறது. இன்னும் கொஞ்சம் மேனியில் பட்டி, டிங்கரிங் பார்த்தால் கண்டிப்பாக தமிழ்சினிமாவில் ஒரு ரவுண்டு வரலாம்.
கட்டிட மேஸ்திரியாக வரும் தம்பி ராமைய்யா காமெடிக்காக இறங்கி விடப்பட்டிருக்கிறார். படம் முழுக்க வந்தாலும் சில இடங்களில் மட்டுமே சிரிக்க வைக்கிறார். இன்னும் கொஞ்சம் காமெடி காட்சிகளை சிரிக்கும்படி யோசித்திருக்கலாம்.
இலங்கை அகதிகளில் ஒருவராக வரும் ‘பூ’ ராம் பேசும் ஈழத்தமிழ் அழகு.
மதுஅம்பாட்டின் ஒளிப்பதிவு படம் முழுக்க வறட்சியான கலர் டோனை காட்டியிருக்கிறது. என்.ஆர்.ரகுநந்தனின் இசையில் பாடல்கள் அத்தனையுமே மனதை வருடுபவை.
திருமணத்துக்காக சேலை வாங்கப் போகும் நவீன் சந்திரா ஒரு சிவப்பு கலர் சேலையை எடுத்து அதை கட்டிக்கொள்கிறாயா என்று ரூபாமஞ்சரியிடம் போனில் கேட்பார். அதற்கு ”நாங்க பொறந்ததிலிருந்தே எங்களோட மண்ணுல ‘சிவப்பு’ கலரைத் தான் பார்த்துக்கிட்டிருக்கோம். நீங்களும் அதே கலர் சேலையை வாங்கித் தர்றேன்னு சொல்றீங்களே..? என்று சொல்லி கண் கலங்கும் காட்சியில் படத்தின் டைட்டிலுக்காக காரணத்தையும் நெகிழ்வோடு சொல்லி விடுகிறார் இயக்குநர்.
‘ஈழத்தமிழர்களுக்கு உதவி செய்யணும். இல்லேன்னா கை விட்டுடணும், அவங்களை வெச்சு அரசியல் பண்ண வேண்டாம். அது ரொம்ப கேவலம்’ என்கிற நெத்தியடி வசனத்தோடு படத்தை முடிக்கிறார் இயக்குநர் சத்யசிவா. அந்த ஒற்றை வசனம் படத்தின் தரத்தை உறுதி செய்கிறது.