பல்டி- விமர்சனம்

ஷாட் பை ஷாட் ரத்தம் தெறிக்கும் ஆக்‌ஷன் கபடியே இந்த பல்டி

ஹீரோ ஷேன்நிகம் கறிக்கடையில் வேலை செய்பவர். அவருக்கு சாந்தனு உள்பட மூன்று நண்பர்கள். பஞ்சமி என்ற கபடி டீமை வைத்து நிறைய டீம்களுக்கு தண்ணி காட்டுபவர்கள். அதே ஏரியாவில் பொற்றாமரை எனும் பெயரில் கபடி டீமும், பெரிய பைனான்ஸ் கம்பெனியும் நடத்தி வருகிறார் செல்வராகவன். பெரும் கொடுங்கோலனான செல்வராகவன் செய்யும் தந்திரத்திற்குள் மாட்டுகிறார்கள் ஷேன்நிகம் சாந்தனு உள்ளிட்டோர். செல்வராகவன் இவர்களை வைத்து செய்யும் எல்லாத் தீமைகளும் ஒரு கட்டத்தில் பெரிதாக வெடிக்க, ஹீரோவும் நண்பர்களும் எப்படி மீள்கிறார்கள் என்பதே படத்தின் மீதிக்கதை

கதாநாயகன் ஷேன்நிகம் தனது 25-ஆவது படமான இப்படத்தில் ஆக்‌ஷன் முகம் காட்டியுள்ளார். ரத்தம் தெறிக்க தெறிக்க படத்தில் ஆக்‌ஷன் தாண்டவம் ஆடியுள்ளார். அவருக்கு இணையாக ஆக்‌ஷன் எமோஷ்னல் உள்ளிட்ட எல்லாக் காட்சிகளிலும் ஸ்கோர் செய்துள்ளார் சாந்தனு. மேலும் இவர்களின் நண்பர்களாக வரும் இரு இளைஞர்களும் நன்றாக நடித்துள்ளனர். செல்வராகவனின் வில்லத்தனம் ஓரளவு எடுபடவே செய்கிறது. அல்போன்ஸ் புத்ரன் கிடைத்த வேடத்தில் கச்சிதமாக பொருந்தியுள்ளார். ப்ரீத்தி அஸ்ராணி சில காட்சிகளே வந்தாலும் தனித்துவமாக நடித்துள்ளார்.

படத்தில் சாய் அபயங்கார் வாசித்து தள்ளியுள்ளார். பின்னணி இசை பல இடங்களில் கடும் இரைச்சல் தான். ஒளிப்பதிவாளர் அலெக்ஸ் ஜே.புல்லிக்கல் ஆகத்தரமான ஒளிப்பதிவை வழங்கியுள்ளார். சண்டைக்காட்சிகளை மிக மிக அற்புதமாக படம் பிடித்துள்ளார்

கேமரா டீம், எடிட்டர், ஆர்ட் டைரக்டர் உள்ளிட்ட எல்லா டெக்னிக்கல் டீமையும் சிறப்பாக ஒருங்கிணைத்துள்ளார் இயக்குநர் உன்னி சிவலிங்கம். ரைட்டிங்கில் எல்லாக் கேரக்டர்களுக்கும் நல்ல அழுத்தம் சேர்த்துள்ளார். அதனால் தான் படத்தில் எல்லா கேரக்டர்களும் கவனம் பெறுகிறார்கள். முன்பாதியில் அசரடித்த படம் பின்பாதியில் சற்று டல்லடிக்கவே செய்கிறது. அதிக வன்முறையைத் தவிர்த்திருந்தால் பல்டிக்கு பலத்த கிளாப்ஸ் கொடுத்திருக்கலாம்
2.75/5

Actor santhanuBalti movie