தமிழில் சமீப காலங்களில் தென்படாமல் போன நேர்த்தியான சினிமாவை மாரி செல்வராஜ் தன் வாழை படல் மூலம் தந்துள்ளார். நல்ல சவுண்ட் அமைப்பு உள்ள தியேட்டருக்குச் சென்று முதலில் படத்தைப் பார்த்து விடுங்கள்
திருநெல்வேலி மாவட்டம் புளியங்குளத்தைச் சேர்ந்த சிறுவன் சிவணைந்தான். அம்மா, அக்கா, அவன் உள்ள வீட்டில் அடுத்ததாக வறுமை சொந்தமாக இருக்கிறது. வறுமை விரட்ட, அம்மா, அக்கா இருவரும் வாழைத்தார் சுமக்கச் செல்கிறார்கள். பள்ளி விடுமுறை நாட்களில் சிவணைந்தானும் செல்வான். விருப்பம் இல்லாவிட்டாலும் அவன் உழைக்க வேண்டிய கட்டாயத்தை அவனது அம்மா உணர்த்திக் கொண்டே இருப்பார். இந்த வாழைத்தார் சுமக்கும் படலத்தின் நடுவே ஒரு ஆழமான நட்பும், குழந்தைத் தனமான காதலும், புரிதலுள்ள காதலும் படத்தில் காட்டப்படுகிறது. இந்த எளிய மக்களின் வாழ்வில் நடக்கும் ஒரு வலி நிறைந்த சம்பவத்தை பதிவு செய்வதே படத்தின் கதையாக விரிகிறது
படத்தில் சிவணைந்தான் கதாப்பாத்திரம் தான் லீட் ரோல். அந்தச் சிறுவன் அநியாயத்திற்கு நடித்துள்ளான். அவனை நடிகனாக திரையில் காணவே முடியவில்லை அவன் சிவணைந்தான் தான். இதே வார்த்தைகளை சிறுவன் சேகருக்கும் பொருத்தலாம். கலையரசன், திவ்யா துரைசாமி, நிகிலா விமல், சிவணைந்தானின் அம்மாவாக நடித்துள்ள ஜானகி என வாழையில் அனைவரும் வாழ்ந்துள்ளனர்
சந்தோஷ் நாராயணன் தன் இசையால் படத்திற்கு பெரிய வாழைத்தோரணமே கட்டியுள்ளார். க்ளைமாக்ஸில் வரும் ஒரு பாடலுக்கு தியேட்டரே அடிமையாகி கிடக்கிறது. தேனீஸ்வரர் தனது கேமராவால் செய்திருக்கும் மாயம் அசாத்தியமானவை. ஒளிப்பதிவால் அவர் படத்தை பலபடி உயர்த்தியுள்ளார். தரமான எடிட்டிங்கும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது
எளிய மக்களின் வாழ்வை தன் வரலாற்றோடு சேர்த்து எடுத்துள்ளார் மாரி செல்வராஜ். ஒரு தேர்ந்த திரைக்கலைஞனால் மட்டுமே அச்சு அசலான சினிமாவை கொடுக்க முடியும். ரஜினி கமல் ரசிகர்கள் சம்பந்தப் பட்ட காட்சிகள் எல்லாம் க்ளாசிக் ரகம். நிகிலா விமல் சிவணைந்தான் காம்போ நிகழ்த்தும் உளவியல் எல்லாம் வேறலெவல் அழகியல்
வாழை- தவற விடக்கூடாத சினிமா
4/5