வைகை எக்ஸ்பிரஸ் – விமர்சனம்

RATING 3/5

இன்றைக்கும் சேனல்களைத் திறந்தால் வடிவேலுவின் காமெடிக் காட்சிகளில் ‘எல்லாம் அவன் செயல்’ படத்தின் காமெடிக் காட்சிகள் இல்லாமல் இருக்காது. அந்தளவுக்கு த்ரில்லர் படத்தில் கூட செமக் காமெடியையும் கலந்து வெற்றிக் கூட்டணியாக வலம் வந்த நடிகர் ஆர்.கே டைரக்டர் ஷாஜி கைலாஸ் இருவரின் கூட்டணியில் வந்திருக்கும் மற்றுமொரு தடக் தடக் த்ரில்லர் எக்ஸ்பிரஸ் தான் இந்த ‘வைகை எக்ஸ்பிரஸ்’.

சென்னையிலிருந்து மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்யும் எம்.பி சுமனின் மச்சினிச்சி ஸ்வப்னா மேனன், டிவி நிருபர் கோமல் சர்மா மற்றும் துப்பாக்கி சுடும் வீராங்கனை நீது சந்திரா என மூன்று இளம் பெண்கள் அடுத்தடுத்து கொலை செய்யப்படுகிறார்கள்.

இதில் நீது சந்திரா மட்டும் உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார்.

இந்தக் கொலைகளை விசாரிக்கும் உயர் போலீஸ் அதிகாரியாக வரும் ஆர்.கே ரயிலில் பயணம் செய்யும் தீவிரவாதி ஆர்.கே செல்வமணியிடம் விசாரணையைத் தொடங்கி பல கோணங்களில் முடுக்கி விடுகிறார்.

அதே ரயில்பெட்டியில் பயணிக்கும் அத்தனை பேரையும் தனது விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரும் அவர் கொலைகாரனை கண்டுபிடிக்கவே முடியாது என்று சவால் விடுகிற அளவுக்கு நுணுக்கமாக நடந்திருக்கும் அந்தக் கொலைகளின் பின்னணியில் இருப்பவர்களை எப்படி சாதூர்யமாக கண்டுபிடிக்கிறார் என்பதே கிளைமாக்ஸ்.

‘எல்லாம் அவன் செயல்’ வெற்றிக்குப் பிறகு மீண்டும் அதே இயக்குநர் ஷாஜிகைலாஜ் உடன் கூட்டணி வைத்து களமிறங்கியிருக்கிறார் ஆர்.கே.

ஒரு கொலையை எந்தெந்த கோணங்களில் எல்லாம் காவல்துறை அதிகாரிகள் விசாரிப்பார்கள் என்பதை தனது அடுத்தடுத்த விசாரணை நகர்வுகளில் ஆர்.கே கொண்டு போகிற போது படம் சூடு பிடிக்கிறது. அந்தக் கேரக்டருக்கு மிடுக்காக செட்டாகியிருக்கிறார் அவர். குறிப்பாக சண்டைக்காட்சிகளில் பறந்து பறந்து அடித்து ஆக்‌ஷன் பிரியர்களை ஒன்ஸ்மோர் கேட்க வைக்கிறார். அதுக்காக எந்த நேரமும் முகத்தை விறைப்பாகவே வைத்துக் கொண்டிருக்க வேண்டுமா சார்!

ஜோதிகா, ராதிகா என (இரட்டை பிறவிகள்) அக்கா தங்கையாக வருகிறார் நீத்து சந்திரா. இரண்டு கேரக்டர்களுக்குமிடையேயான நடிப்பை வித்தியாசப்படுத்திக் காட்டியிருப்பது அருமை. அதிலும் கிளைமாக்ஸில் தெரிய வரும் அவர் மீதான பிம்பம் ரசிகர்கள் எதிர்பார்க்காத ட்விஸ்ட்.

ஒரு நடிகையாக வரும் இனியாவுக்கு இனி உனக்கு இங்கே வேலையில்லை என்கிற தொணியில் தான் வருகிறார். படத்தில் அவரது கேரக்டர் அவ்வளவே.

நாசர், ஆர்.கே செல்வமணி, ரமேஷ் கண்ணா, எம்.எஸ் பாஸ்கர், ஜான் விஜய்,அர்ச்சனா, கோமல்ஷர்மா, சிங்கமுத்து, மனோபாலா, மதன்பாபு என சீரியஸ் கதையில் சிரிப்புக்கு ஒரு நட்சத்திரப் பட்டாளமே படத்தில் உண்டு.

ஓடும் ரயிலை பல கோணங்களில் காட்டி போரடிக்காமல் கொண்டு சென்றதில் சஞ்சீவ் குமாரின் ஒளிப்பதிவும், விறுவிறுப்புக்கு பிரபாகரின் தீப்பொறி வசனங்களும் பக்க பலம். தமன்னின் பின்னணி இசையில் போட்டதையே படம் முடியும் வரை போட்டிருக்காமல் வாங்கிய காசுக்கு கொஞ்சமாவது பின்னணி இசையை மாற்றி போட்டிருக்கலாம்.

இதுபோன்ற கிரைம் த்ரில்லர் கதையில் முடிச்சுகளை சிக்கல் இல்லாமல் அவிழ்ப்பது தான் திரைக்கதையின் சாமர்த்தியம். அந்த வேலையை மிகச் சரியாகச் செய்திருக்கிறார் இயக்குநர் ஷாஜி கைலாஷ்.

வைகை எக்ஸ்பிரஸ் – விறுவிறுப்பான த்ரில்லர் எக்ஸ்பிரஸ்!

IniyaNeetu ChandraRKS.ThamanShaji KailasVaigai ExpressVaigai Express Movie ReviewVaigai Express Review
Comments (0)
Add Comment