விஸ்வரூபம் – விமர்சனம் #Vishwaroopam2

RATING 2.5/5

நடித்தவர்கள் – கமல்ஹாசன், பூஜா குமார், ஆண்ட்ரியா, ராகுல் போஸ் மற்றும் பலர்

இசை – ஜிப்ரான்

ஒளிப்பதிவு – ஷனு வர்கீஸ், ஷாம்தத் சைனுதீன்

இயக்கம் – கமல்ஹாசன்

வகை – ஆக்‌ஷன், த்ரில்லர்

சென்சார் பரிந்துரை – ‘U/A’

கால அளவு – 2 மணி நேரம் 21 நிமிடங்கள்

மலின் அரசியல் எண்ட்ரிக்குப் பிறகு ரிலீசாகியிருக்கும் படம் என்பதால் ‘விஸ்வரூபம் 2’ படத்துக்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது.

அந்த எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறதா?

முதல் பாகத்தில் அமெரிக்காவை காப்பாற்றப் போராடிய கையோடு எண்டு கார்டு போட்ட கமல் இதில் விட்ட இடத்திலிருந்து ஆரம்பிக்கிறார்.

நியூயார்க்கில் ஓமர், சலீமால் திட்டமிடப்பட்டிருந்த குண்டுவெடிப்பை தகர்த்த கையோடு அடுத்து பூஜாவையும், ஆண்ட்ரியாவையும் கூட்டிக் கொண்டு இங்கிலாந்து செல்கிறார். அங்கு லண்டனையும், அடுத்து இந்தியாவையும் குறி வைத்திருக்கும் திட்டம் தெரிய வருகிறது.

அதை எப்படி தனது படை வீரர்களோடு கமல் முறியடிக்கிறார் எம்பதே மீதிக்கதை.

முதல் பாகத்தை எடுத்த போதே மிஞ்சிப் போன காட்சிகளை ஒட்ட வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம் என்பதால் காட்சிக்கு காட்சி பெருங்குழப்பம். அதுபோல ஆங்கிலம், தமிழ் என்று மாறி மாறி பேசிக் கொள்வதால் நாம் பார்ப்பது ஆங்கிலப் படமா? அல்லது தமிழ்ப்படமா? என்கிற சந்தேகமும், எரிச்சலும் வருகிறது.

முதல் பாகத்தில் துப்பாக்கிச் சண்டை, எவுகணைகள், ஹெலிகாப்டர் சண்டை, விறுவிறுப்பான சண்டைக்காட்சிகள் என ஒரு ஆங்கிலப் படத்துக்கு நிகராக கொண்டு சென்ற கமல் இதில் சண்டைக் காட்சிகள் தவிர்த்து ஏனைய காட்சிகளில் கொஞ்சம் ஏமாற்றம் தருகிறார்.

ஆனால் காட்சிக்கு காட்சி அலுப்பு தட்டாத அவருடைய உடல் மொழிகள் ரொம்பவே ரசிக்க வைக்கின்றன. இவ்வளவு சீரியசான கதையிலும் இங்கிலாந்து காட்சிகளில் தனக்கே உரிய உடல்மொழிகளால் காமெடியில் கலக்குகிறார்.

திரையில் தோன்றும் போதெல்லாம் மிரள வைக்கிறார் வித்தியாசமான கரகர குரலில் வரும் வில்லன் ராகுல் போஸ்.

ஈஸ்வர அய்யர் என்கிற கேரக்டரை வைத்து படத்தில் அவர் சார்ந்த சமூகத்தினரின் அதிகாரப் போக்கை கிழிகிழியென்று கிழித்து தொங்க விட்டிருக்கிறார்.

அதிலும் ஈஸ்வர அய்யருக்கு “வெள்ளக்காரன் 200 வருசமா அடிச்ச கொள்ளைய 65 வருசமா இங்க உக்காந்துக்கிட்டு அடிச்சிட்டிருக்கீங்களே!” என்று பதிலடி கொடுக்கிற காட்சியிலும், ”நீ பேசுறதைப் பார்த்தா நம்மாளு மாதிரியே தெரியலையே, ஆமாம், நான் உங்காளு கிடையாது” என்று ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவா கும்பலுக்கு எதிராக பேசுகிற காட்சியிலும் தியேட்டரில் கைதட்டல்களை அள்ளுகிறார் கமல்.

ஆண்ட்ரியா ஆக்‌ஷன் காட்சிகளிலும், பூஜா குமார் ரொமான்ஸ் காட்சிகளிலும் பிண்ணிப் பிணைந்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு, ஜிப்ரானின் பின்னணி இசை இரண்டுமே ஹாலிவுட் பட தரத்தில் மிரட்டுகின்றன.

எல்லாம் சரி, முதல் பாகத்தில் இருந்த விறுவிறுப்பு, இந்த இரண்டாம் பாகத்தில் மிஸ் ஆகியிருக்கிறது.

எக்ஸ்பரிமெண்ட் படம் எடுப்பது கமலுக்கு வேண்டுமானால் சந்தோஷமாக இருக்கலாம். ஆனால் படம் பார்க்கும் ரசிகனுக்கு?

கொஞ்சம் யோசிச்சு செய்யுங்க உலக நாயகரே…

Andrea JeremiahGhibranKamal HaasanMovie ReviewPooja kumarRahul BoseSanu VargheseShekhar KapurVishwaroopam IIVishwaroopam II Review
Comments (0)
Add Comment