என் படத்தை எப்படி வேணாலும் கிழிங்க! – அசராத அறிமுக இயக்குனர்!

Get real time updates directly on you device, subscribe now.

மொக்கை படத்தை மொக்கை என்று எழுதினால் ”உங்களுக்கு விமர்சனமே எழுதத் தெரியல..” என்று விமர்சகர்கள் மீது பாய்கிற கோடம்பாக்கத்தில், என் படத்தை எப்படி வேண்டுமானாலும் எழுதி கிழியுங்கள் என்று துணிச்சலாக திருவாய் மலர்ந்திருக்கிறார் அறிமுக இயக்குனர் ஜெய்.

சினிமாவிற்கு இதுவரை பரீட்சயமில்லாத கோணத்தில் கதை சொல்லப்பட்டிருக்கும் படம் ”ஆந்திரா மெஸ்” படத்தின் இயக்குனர் தான் இவர்.

நான்கு திருடர்கள், ஒரு முன்னாள் ஜமீன்தார், அவருடைய இளம் மனைவி இவர்களின் வாழ்வில் அடுத்தடுத்து நடக்கிற சம்பவங்களின் தொகுப்பை மாறுபட்ட கோணத்தில் சொல்லியிருக்கும் இப்படத்தை ஷோ போட் ஸ்டுடியோஸ் சார்பில் நிர்மல் கே.பாலா தயாரித்திருத்திருக்கிறார்.

படத்தில் கதாநாயகனாக ”ஓநாயும் ஆட்டுக்குட்டியும்”, ”ரிச்சி” போன்ற படங்களில் நடித்த ராஜ் பரத், கதாநாயகிகளாக தேஜஸ்வினி, பூஜா தேவரியா நடித்திருக்கின்றனர். இவர்களுடன் புகழ்பெற்ற ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

படத்தைப் பற்றி பேசிய இயக்குநர் ஜெய், தமிழ்சினிமா சூழலில் இருக்கிற வியாபார சிக்கல்களை கொஞ்சம் கடுமையாகவே சாடினார்… “ஒரே படத்தைப் பற்றி இரண்டாவது முறையாக உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். இருந்தாலும் பேசித்தான் ஆக வேண்டும். இந்தப் படத்திற்காக நிறைய மெனக்கெட்டிருக்கிறோம்.

ஒரு முதல்பட இயக்குநரான நான் சொன்ன இந்தக் கதையை நம்பி, நான் நினைத்த மாதிரி எடுத்து முடிக்கிற வரை எனக்கு பலமாக இருந்த தயாரிப்பாளர் நிர்மல் கே.பாலாவிற்கு முதலில் என் நன்றிகள். அதேபோல் இத்தனை இடர்களிலும் என்னோடு நிற்கிற என் படக்குழுவினர் அத்தனை பேருக்கும் எனது நன்றிகள். தமிழ்சினிமா சூழல் என்பது வியாபாரத்தின் மீது கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அதைத்தாண்டி படங்கள் எடுப்பது என்பது மிகவும் சவாலானதாக இருக்கிறது.

நாம் எப்படிப்பட்ட சினிமா எடுக்க வேண்டுமென்பதை யாரோ தீர்மானிக்கிறார்கள். இந்த சூழல் நிச்சயம் தமிழ்சினிமாவை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தாது. இந்தப் படம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது திரைக்கு வருகிறது என்றவர் இப்படத்திற்கான விமர்சனங்கள் எப்படி இருந்தாலும், யார் எப்படி கிழித்தாலும் ஏற்றுக் கொள்கிறேன். எது எப்படியாக இருந்தாலும் அத்தனைக்கும் நான் மட்டும் தான் பொறுப்பு”என்றார் அசராமல்..!