அங்கீகாரம்- விமர்சனம்

ஒடுக்கப்பட்ட ஒரு இளைஞன், காமன்வெல்த் கமிட்டியில் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக நீதிமன்றம் செல்கிறான். நீதி கிடைத்ததா? என்பதே அங்கீகாரம் படத்தின் ஒன்லைன்
நாயகம் KJR தன் அம்மா மற்றும் தங்கையோடு குப்பத்தில் வசிக்கிறார். அவரது கனவு அத்லெட்டில் ஒரு சாதனையாளனாக வரவேண்டும் என்பதே. அதற்காக கடும் பயிற்சியை மேற்கொள்கிறார். ஆனால் அதிகாரமிக்க வர்க்கம், KJR ஏழ்மையுயைம் பிறப்பையும் வைத்து அவரை நிராகரிக்கிறார்கள். ஒரு மனிதனுக்கு வாய்ப்பு அவனின் திறமையின் அடிப்படையில் தான் வழங்கவேண்டும் என்ற கோசத்தோடு நீதிமன்றப்படியேறுகிறார் ஹீரோ! அதன்பின் நடக்கும் கோர்ட் ட்ராமாவில் யார் வென்றது? என்பது மீதிக்கதை
ஒரு விளையாட்டு வீரருக்குண்டான எல்லா அம்சங்களையும் தனக்குள் கொண்டுள்ளார் ஹீரோ KJR. ஆனால் எமோஷ்னல் காட்சிகளில் நடிப்பதற்கு ரொம்பவே சிரமப்படுகிறார். விஜி வெங்கடேஷ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இசபெல்லா, வசுந்தரா, சிந்தூரி, அஜித் கோஷி, ரமா உள்ளிட்ட சின்னச் சின்ன கேரக்டர்களும் கவனம் ஈர்க்கின்றனர்
ஜிப்ரானின் பின்னணி இசை கதைக்கு கனம் சேர்த்துள்ளது. பாடல்கள் ஒகே ரகம். ஒளிப்பதிவாளர் ஏ விஸ்வநாத் தரமான ஒளிப்பதிவை கொடுத்துள்ளார்.
இயக்குநர் தென்பாதியன் நமது நாட்டில் நிகழும் அரசியல் அசிங்கத்தையும் எந்தச் சமரசமும் இல்லாமல் பதிவு செய்திருக்கிறார். அதற்காகவே அவருக்கு நமது பாராட்டுக்கள். ஆனால் படத்தில் கமர்சியல் அம்சங்களோடு அவற்றை அணுகவில்லை. ஒரு பாடமெடுத்தால் கூட அதிலொரு கமர்சியலை இன்றைய ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். படத்தின் நீளமும், அதி நீளமுள்ள க்ளைமாக்ஸும் மைனஸ்.
திறமை தான் வாய்ப்பை தீர்மானிக்க வேண்டும். பிறப்பு அல்ல என்பதைச் சொன்ன ஒற்றைக் காரணத்திற்காக அங்கீகாரத்திற்கு நாம் அங்கீகாரம் கொடுக்கலாம்
3/5