இந்துக் கடவுளை அவமதிக்கிறதா ‘அருவி’?
இந்தப் படம் எப்போது ரிலீசாகும்? பார்த்தே ஆக வேண்டும் என்கிற எதிர்பார்ப்பை கடந்த சில வாரங்களாகவே அதிகப்படுத்தியிருக்கிறது பல திரைப்பட விழாக்களில் ரசிகர்களை சிலாகித்து பேச வைத்த ‘அருவி.’
‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அப்பட நிறுவனமான ட்ரீம் வாரீயர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர். பிரகாஷ் பாபு , எஸ்.ஆர். பிரபு தயாரித்திருக்கும் இப்படத்தை இயக்குநர் அருண் பிரபு இயக்கியிருக்கிறார்.
அதீதி பாலன் கதையின் நாயகியாக நடிக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. ஒரு இந்துக் கடவுள் கையில் துப்பாக்கி வைத்திருப்பது போலவும், ஒரு பெண் கையில் பீர்பாட்டில் வைத்திருப்பது போலவும், சிகரெட் பிடிப்பது போலவும் இருந்தது தான் அந்த சர்ச்சைகளுக்கு முக்கிய காரணம்.
முன்னதாக படத்தைப் பற்றிப் பேசிய தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு ”இதுவரை நாங்கள் தயாரித்த திரைப்படங்களில் மிகச்சிறந்த படம் இது தான்.
உலகளவில் நடைபெற கூடிய திரைப்பட விழாக்களில் நீங்கள் தயாரித்த படங்களை பற்றி கூறுங்கள் என்று கேட்கும் போது சில படங்களின் பெயர்களை மட்டும் தான் என்னால் கூற முடிந்தது. ஏன்? என்னுடைய எல்லா படங்களின் பெயர்களையும் என்னால் கூற முடியவில்லை என்ற சிந்தனை என்னுள் இருந்து வந்தது.
அப்போதிலிருந்து கண்டிப்பாக இனி பெயர் சொல்லும் வகையில் படங்களை தயாரிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். இயக்குநர் சக்திசரவணன் தான் நான் பிரியாணி படத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போது இப்படத்தின் கதையை கேட்குமாறு என்னிடம் கூறினார். இரவு 9 மணிக்கு மேல் தான் அருவி படத்தின் கதையை இயக்குநர் அருண் பிரபு என்னிடம் கூறினார். கதை சொன்ன விதமே புதுமையாக இருந்தது. கதை சொல்லும் போது அந்த அந்த கதாபாத்திரமாகவே மாறி, இசையோடு அவர் கதையை கூறினார்.
நாங்கள் படத்தின் கதையை பெரிதாக நம்பினோம். மக்கள் அதை எப்படி ஏற்றுக் கொள்ள போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எங்களுக்குள் இருந்து கொண்டே இருந்தது. அருவியை பொறுத்தவரை படத்தை நாங்கள் இந்த பட்ஜெட்டில் தான் தயாரிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். எங்கள் தயாரிப்பு குழுவும், இயக்குநர் குழுவும் கடுமையாக உழைத்து படத்தை தரமான படமாக உருவாக்கியுள்ளனர்.
இயக்குநர் மற்றும் படக்குழுவினர் அனைவரும் கடுமையாக உழைத்தனர். இயக்குநர் ஷங்கர் அவருடைய படங்களை எடுக்க எந்த அளவுக்கு மெனக்கெடுவாரோ அதே அளவுக்கு அருணும் அவருடைய குழுவினரும் அருவிக்காக கடுமையாக உழைத்தனர். அருவி கதாபாத்திரத்தில் முதலில் இரண்டு முன்னணி கதாநாயகிகளிடம் பேச்சு வார்த்தை நடந்தது. அதன் பின்னர் புதுமுகத்துக்கே செல்லலாம் என்று முடிவெடுத்தோம்.
அருவி கதாபாத்திரத்துக்காக 5௦௦ பெண்களை இயக்குநர் ஆடிஷன் செய்தார். நான் அவரிடம் கேட்டேன் நீங்கள் நிஜமாகவே கதாநாயகிக்காக ஆடிஷன் செய்கிறீர்களா? அல்லது 5௦௦ பெண்களை சந்திக்க வேண்டும் என்று ஆடிஷன் செய்கிறீர்களா? என்று கேட்டேன்.
சென்சார் குழு இந்த படத்தை எப்படி எடுத்து கொள்வார்கள் என்ற பயம் என்னுள் இருந்து கொண்டே இருந்தது. ஆனால் அவர்களுக்கு இந்த படம் பிடித்திருந்தது. நல்ல படம் என்றார்கள். படத்தை பார்த்துவிட்டு நன்றாக இருக்கிறது என்று பாராட்டினார்கள். சில படம் எளிதாக சென்சார் ஆகிவிடும் என்று நினைப்போம் ஆனால் எதிர்பாராத ஒன்று நடைபெறும். அந்த வகையில் இது புதுமையாக இருந்தது என்றார்.
பின்னர் ”அருவி மனிதத்தை பற்றி பேசும் படமாக இருக்கும்” என்று சுருக்கமாகப் பேசிய இயக்குனர் அருண்பிரபுவிடன் இந்த படத்தின் போஸ்டர்களில் இந்து பெண் கடவுள் கைகளில் துப்பாக்கி வைத்திருப்பது போன்ற போஸ்டரை டிசைன் செய்திருக்கிறீர்கள்? இதுபோல மற்ற மதங்களில் உள்ள கடவுள்களை சித்தரிக்க முடியுமா? அது ஏன் இந்துக் கடவுள்கள் மட்டும் என்றால் எல்லோருக்கும் அவ்வளவு இளக்காரமா? என்ற கேள்வியை கோபத்துடனே முன் வைத்தார் நிருபர்.
அதற்கு பதிலளித்த அருண் பிரபு கண்டிப்பாக இந்தப் படத்தில் நாங்கள் எந்த மதத்தையும் புண்படுத்தவில்லை. அதே போல அது ஒரு பெண் கடவுளும் இல்லை. எந்த ஒரு விஷயமும் பார்ப்பவர்களின் பார்வையில் தான் அப்படியிருக்கும். இந்தப்படம் மதத்தைப் பற்றியும் பேசவில்லை. இதேபோல இன்னொரு விளம்பர டிசைனை ரசிகர்கள் பார்த்து விட்டு இந்த டிசைனில் நடுவில் ஒரு சிலுவை தெரியுது. கிறிஸ்துவ மதம் என்றால் அவ்வளவு அலட்சியமா என்று சிலர் என்னிடம் கேட்டார்கள்.
இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களில் உங்களுக்கு வந்த சந்தேகங்களுக்கு எல்லாம் இந்தப் படத்தில் பதில் கிடைக்கும்” என்றார் அருண் பிரபு.