‘கட்-அவுட்’ வைப்பவர்களை மறக்காதீங்க… : ஹீரோக்களுக்கு பி.வாசு அட்வைஸ்

Get real time updates directly on you device, subscribe now.

asura

பிரபல ஸ்டண்ட் மாஸ்டரும் ‘பெப்ஸி’ யின் தலைவராக இருந்தவருமான பெப்ஸி விஜயனின் மகன் சபரிஷ் நாயகனாக நடிக்கும் படம் ‘அசுரகுலம்’.

பழம்பெரும் இயக்குநர் கே.விஜயனின் பேரன் விக்னேஷ்மேனன் இப்படத்தை இயக்கியுள்ளார். சி.சத்யா இசையமைத்துள்ளார். ஆப்கன் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் ஆடியோ ரிலீஸ் பங்ஷன் நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது.

ட்ரெய்லரை பிரபு வெளியிட்டார். பாடல்களைத் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தலைவர் கலைப்புலி எஸ்.தாணு வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இயக்குநர் பி.வாசு பேசும்போது “விஜயன் மாஸ்டரை பரபரப்பான மாஸ்டராக, ஒரு பலசாலியாகத் தான் தெரியும். இன்று இங்கே அவரை பொறுப்புள்ள ஒரு தந்தையாகப் பார்க்கிறேன். ஒருஅப்பாவாக உங்கள் பயம், பிரபுவின் பயம், என் பயம் எல்லாமும் ஒன்று தான். மகன் நன்றாக வர வேண்டுமே என்கிற ஒரு தந்தையின் பயம்தான் அது.

இந்தப் படக்குழு நாளை சாதனையாளர்களாக மாறி இதுமாதிரி மேடையில் அமரவேண்டும். வாழ்த்துக்கள். சத்யாவின் இசையில் ராஜா சாரின் டச்சை உணர முடிந்தது.

இன்று ஒரு படத்துக்கு கதாநாயகன் யார் என்றால் அது கதைதான். படம்தான் நட்சத்திரம். உலகம் முழுக்க ரசிகர்கள் இருக்கிற சல்மான்கான் இந்த விஜயன் மாஸ்டரின் ரசிகர்.

கதாநாயக நடிகர்களுக்கு பெரிய பெரிய கட்-அவுட் எல்லாம் வைப்பார்கள். அதன் உயரம் அதிகமாக இருக்கும். அதற்கு அழகுபடுத்தி மாலை எல்லாம் போடுவார்கள். பாலாபிஷேகம் செய்வார்கள். அந்தக் கட்அவுட்டின் பின்னால் போய்ப் பார்த்தால் ஆயிரம் கட்டைகள் இருக்கும் ; நிறைய ஆணிகள் இருக்கும்; கயிறுகள் இருக்கும். அவர்கள் தான் தொழில் நுட்பக் கலைஞர்கள். நட்சத்திரங்களைத் தாங்கிப் பிடிப்பவர்கள் இந்தத் தொழில் நுட்பக் கலைஞர்கள் தான் அதை மறந்து விடக் கூடாது” என்றார்.

நடிகர் பிரபு பேசும்போது “நான் 1978-ல் ‘திரிசூலம்’ படத்தில் தயாரிப்பு நிர்வாகப் பணியைக் கவனித்து வந்தேன். அப்போதெல்லாம் அப்பா, பெரியப்பா எம்.ஜி.ஆர் ஆகியோருக்கு சாஹுல், ஜெயமணி இருவரும்தான் டூப் போடுவார்கள். இவர்களிடயே உயரமாக இன்னொருவர் இருப்பார் அவர் தான் பெப்ஸி விஜயன். அப்போது அப்பாகூட இவர் வேலை செய்வதைப் பார்த்து ‘இவன் பெரிய ரவுண்ட் வருவான்’ என்று பாராட்டுவார்.

மாஸ்டராக இவருக்கும் எனக்கும் ‘சங்கிலி’ முதல்படம். அந்தப் படத்தில் நான் அப்பாவை எதிர்த்து வசனம் பேசுவேன். அப்போது அப்பா என்னை அடிக்க வேண்டும். நான்கு ஷாட்கள்தான் இருக்கும். ஆனால் 25 போடு போட்டார். இது பற்றிக் கேட்ட போது அப்பா சொன்னார் ‘இவன் படுத்திய பாடு தாங்காமல் போட்டேன் இதுதான் சமயம் போடுவதற்கு’ என்றார்.

அப்பாக்களின் அவஸ்தைகள் யாருக்குத் தெரியும்? பிள்ளைகள் என்று வரும் போது தகப்பன்கள் படும்பாடு எங்களை மாதிரி தகப்பன்களுக்குத்தான் தெரியும்.

இந்த சபரிஷின் அப்பா கஷ்டப்பட வைக்க மாட்டார். ஆனாலும் சபரிஷ் கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும். வாரிசுகள் இணைந்து உள்ள இப்படத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் ” என்றார்.

நடிகர் சந்தானம் பேசும் போது ”இந்த சபரிஷுடன் நான் ஏற்கெனவே ‘மார்க்கண்டேயன்’ படத்தில் நடித்திருக்கிறேன். இதில் நான் நடிக்கவில்லை. இருந்தாலும் அன்புக்காக வந்திருக்கிறேன். ‘மார்க்கண்டேயன்’ படத்தை ஒரு காட்டில் எடுத்தோம். வீரப்பன் கூட நுழைய முடியாத காடு அது. அங்கு டாய்லட் கட்டி மின்சாரம், ஏசி என்று எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தார் மாஸ்டர்.

பத்துமாதம் சுமந்து அம்மா பெற்றாலும் எல்லாருக்கும் ரோல்மாடல் அப்பா தான். எங்கள் அப்பா குடிக்க மாட்டார். புகை பிடிக்க மாட்டார். அவர் ஒரு பில்டிங் காண்ட்ராக்டர். இருந்தாலும் தன்னிடம் வேலை பார்ப்பவர்களிடம் ஜாலியாக அரட்டை அடிப்பார். அவர்தான் என் முதல் ஹீரோ. சபரிஷுக்கு நல்ல அப்பா, கிடைத்து இருக்கிறார். சபரிஷுக்குத் துணை நிற்போம். என்னை ரசிக்கும் ரசிகர்கள் என் தம்பி சபரிஷ் படத்தையும் பார்க்க வேண்டுகிறேன்”. என்றார்.