அதிபர் – விமர்சனம்
‘நான் அவனில்லை 2′ படத்தை முடித்த கையோடு காணாமல் போன ஜீவன் மீண்டும் ‘அதிபர்’ ஆக ரிட்டர் ஆகியிருக்கிறார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்திருந்தாலும் ரசிகர்களை எச்சரிக்கை செய்யும் ஒரு நல்ல சமூக கருத்துள்ள உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்ட படத்தோடு தான் ரிட்டர்ன் ஆகியிருக்கிறார் ஜீவன்.
சரி கதைக்கு வருவோம்.
கனடா வாழ் தமிழரான ஜீவன் சொந்த நாடான இந்தியாவுக்கு வருகிறார். ( கனடாவிலும், இலங்கையிலும் நடந்த சம்பவங்களை கனடா – இந்தியா என்று கதைக்காக மாற்றியிருக்கிறார்கள்.) வந்த இடத்தில் தான் சம்பாதித்த எல்லா பணத்தையும் போட்டு ஒரு கட்டுமான நிறுவனத்தை ஆரம்பிக்கிறார்.
அதற்கு இங்குள்ள வக்கீலான ரஞ்சித்தை சட்ட ஆலோசகராக நியமிக்கும் ஜீவன் மக்கள் மத்தியில் அவருக்கு இருக்கும் நல்ல பேரைப் பார்த்து அந்த நம்பிக்கையில் அவரை முழுமையாக நம்பி தொழிலை ஆரம்பிக்கிறார்.
ஆனால் ரஞ்சித்தோ ஜீவன் பெயரில் சில மோசடிகளைச் செய்து பணத்தை சுருட்டுவதோடு தனது செல்வாக்கைப் பயன்படுத்தி அவருக்கு விடுதலைப்புலிகளுடன் தொடர்பு இருக்கிறது என்று பொய்யான குற்றச்சாட்டை கிளப்பி ஜெயிலுக்கு அனுப்புகிறார்.
அதிலிருந்து ஜீவன் எப்படி மீண்டு வருகிறார் என்பதே கிளைமாக்ஸ்.
அதே சுருட்டைத் தலைமுடியுடன், உதட்டோரம் லேசான புன்னகையுடன் வரும் ஜீவன் இதில் அமைதியான ஹீரோவாக நடித்திருக்கிறார். நடிப்பை விட சண்டைக்காட்சிகளில் சிலிர்க்க வைக்கிறார்.
ஆரம்பத்தில் பயங்கர வில்லனாக காட்டப்படும் நந்தா அடுத்த சீனிலேயே நண்பனாக மாறுவதோடு, முழுமையாக நல்லவனாக மாறுவது ஆச்சரியம்.
கதையின் வீரியம் குறைந்து விடக்கூடாது என்பதாலோ என்னவோ கதாநாயகி வித்யாவுக்கு ஜீவனோடு டூயட் கூடுதலாக சில காட்சிகள் அவ்வளவு தான்.
காமெடிக்கு தம்பி ராமையாவை போட்டுருக்கிறார்கள். அதற்கென்று மெனக்கிடாமல் அவரது மகனையே அவரை வாடா, போடா என்று கூப்பிட வைத்து கலகலப்பூட்டுகிறார்கள்.
வில்லனாக வரும் ரஞ்சித்துக்கு ஒட்டு தாடி, மீசையுடன் சிம்பிளான கெட்டப். இன்னும் கொஞ்சம் வித்தியாசம் காட்டியிருக்கலாம்.
உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட கதைக்கு திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய இயக்குநர் சூரிய பிரகாஷ் கட்டுமானத் துறையில் நடக்கும் தில்லு முல்லுகளையும், நட்புக்குள் நடக்கும் நம்பிக்கைத் துரோகத்தையும் தோலுரித்துக் காட்டும் படமாக தந்திருக்கிறார்.
அந்த சமூகப் பொறுப்புக்காகவே இந்த அதிபருக்கு ஒரு பொக்கே…!