நண்பன் அழைத்து வராமல் இருக்க முடியுமா? சஞ்சு சாம்சன்!

இயக்குநர் அருண் அனிருதன் இயக்கத்தில் டொவினோ தாமஸ், பசில் ஜோசப், வினீத் ஸ்ரீனிவாசன், ரியா ஷிபு மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் “அதிரடி.” பசில் ஜோசப் மற்றும் அனந்து எஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு அருண் அனிருதன் மற்றும் பால்சன் ஸ்கரியா இணைந்து எழுதியுள்ளனர். கடந்த வாரம் மலையாளத்தில் வெளியான இந்த படம் வரும் 22 ஆம் தேதி தமிழில் வெளியாக இருக்கிறது. தமிழில் இப்படத்தை பைவ் ஸ்டார் செந்தில் வெளியிடுகிறார். இந்த நிலையில் அதிரடி படத்தின் பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினருடன், இந்திய அணி கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் பேசும் போது, “அனைவருக்கும் வணக்கம், திரைப்பட நிகழ்வில் கலந்து கொள்வது புதிய அனுபவமாக இருக்கிறது. நண்பர் அழைக்கும் போது வந்தே ஆக வேண்டும். மிக்க மகிழ்ச்சி மற்றும் சுவாரஸ்யமாக இருக்கிறது. இந்தப் படத்தில் நடிக்க சிறிய கதாபாத்திரமாக இருந்ததால் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டேன். நடித்தால் கொஞ்சம் பெரிய கதாபாத்திரமாக இருக்க வேண்டும். எனக்கு எந்த மாதிரியான கதாபாத்திரம் கொடுக்க வேண்டும் என்பதை இயக்குநர்கள் முடிவு செய்வர். பசில் பார்க்க எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பார், ஆனால் வேலை என்று வந்துவிட்டால் அவர் மிகவும் சீரியசாக இருப்பார். நண்பர்கள் டின்னருக்கு அழைத்தால் கூட முன்கூட்டியே சொல்லியிருக்கலாமே என்பார். கிட்டத்தட்ட ஒருவாரத்திற்கான அட்டவணையுடன் செயல்படக்கூடியவர். அவர் கமிட் செய்யும் எந்தவொரு விஷயத்திற்கும் அதீத உழைப்பை கொடுப்பார். இந்த நிகழ்வுக்கு அழைக்கும் போதும், அவர் கொடுத்திருக்கும் உழைப்பு, அதற்கு ஏற்ற பலன் கிடைக்க வேண்டும் என்றுதான் இங்கு வந்திருக்கிறேன். சி.எஸ்.கே. அணிக்கு வந்த பிறகு அதிக பொறுப்பு கூடியிருக்கிறது. பெரிய ஃபிரான்சைஸ், அதிக கோப்பைகள் வென்ற அணியில் இருக்கும் போது அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். கிரிக்கெட்டை தாண்டி வெளியில் செல்லும் போது ரசிகர்கள், சேட்டா அடுத்த போட்டி ஜெயிங்கள், கோப்பையை வெல்லுங்கள், தட்றோம், தூக்குறோம் என்ற வார்த்தைகள் மகிழ்ச்சியாக இருக்கிறது. பொது மக்கள் அளிக்கும் அன்பு அளவுக்கு அதிகமாக இருக்கிறது. ரசிகர்கள் மனதில் இருந்து கொடுக்கும் அன்பை எளிதில் புரிந்து கொள்ள முடிகிறது. மிக அழகான பயணத்தை சென்னையில் துவங்கி இருப்பதாக நினைக்கிறேன். சிறு வயதில் நிறைய தமிழ் படங்களை பார்த்தே வளர்ந்து இருக்கிறேன். தற்போது தமிழ் நாடு மற்றும் சென்னை அணிக்காக விளையாடுவது எனக்கு தமிழகம் தற்போது இரண்டாவது வீடாக மாறி இருக்கிறது. சென்னையில் கிடைக்கும் உணவு எனக்கு அதிகம் பிடித்திருக்கிறது. கடந்த வாரம் நாயர் மெஸ்ஸில் சாப்பிட்டேன், உணவு அற்புதமாக இருந்தது, என்றார்.