பலூன் – விமர்சனம்
RATING : 2.3/5
நட்சத்திரங்கள் : ஜெய், அஞ்சலி, ஜனனி (ஐயர்), யோகி பாபு, கார்த்திக் யோகி மற்றும் பலர்.
இசை – யுவன் ஷங்கர் ராஜா
ஒளிப்பதிவு – ஆர். சரவணன்
இயக்கம் – சினிஷ்
வகை – ஹாரர், த்ரில்லர்
சென்சார் சர்ட்டிபிகேட் – ‘U/A’
கால அளவு – 2 மணி நேரம் 26 நிமிடங்கள்
காட்டுக்குள் தனியே ஒரு வீடு, அந்த வீட்டுக்குள் போகிற எல்லோரும் கொலை செய்யப் படுவார்கள், விளக்குள் எல்லாம் அணைந்து அணைந்து எரியும், அல்லது அணைந்தே விடும், கண்டிப்பாக பேய்க்கு ஒரு ப்ளாஷ்பேக் இருக்கும்
இந்த பார்மெட்டில் நூத்தி சொச்சம் படங்களை கோலிவுட் ரசிகர்கள் பார்த்து விட்டார்கள். அந்த ரெகுலர் டச்சோடு கொஞ்சம் டெக்னிக்கல் சவுண்ட்டோடும் வந்திருக்கும் படம் தான் இந்த ‘பலூன்.’
முதல் படமே சமூகப் பிரச்சனையை வைத்து தான் எழுதிய கதையைத்தான் படமாக எடுக்க வேண்டும் என்கிற கொள்கையோடு இருக்கிறார் இயக்குநராகும் லட்சியத்தோடு இருக்கும் ஹீரோ ஜெய். அதற்காக தயாரிப்பாளர் ஒருவரை சந்திக்கிறார். அவரோ ”இதெல்லாம் யாருப்பா பார்க்கிறா? இப்போதெல்லாம் பேய் பட சீஸன் தான். அது தான் நல்லா வசூல் ஆகுது. பேசாம ஒரு பேய் கதையோட வாங்க கண்டிப்பா படம் பண்ணலாம்” என்று சொல்லி அனுப்புகிறார்.
மனைவி அஞ்சலி கேட்டுக் கொண்டதற்கிணங்க தனது முதல் படக் கொள்கையை ஒதுக்கி வைத்து விட்டு பேய்ப்படம் இயக்கலாம் என்று முடிவுக்கு வருகிறார். அதற்காக நண்பன் ஒருவன் ஊட்டில் ஒரு பேய் வீட்டைப் பற்றிச் சொன்ன தகவலைக் கேள்விப்பட்டு அந்த வீட்டைப் பற்றி முழுமையாக விசாரித்து கதை எழுத மனைவி அஞ்சலி, அண்ணன் மகன், உதவி இயக்குனர்கள் யோகி பாபு, கார்த்திக் யோகி ஆகியோருடன் அங்கு செல்கிறார்.
அங்கு சென்றதும் அவங்கள் தங்குகிற வீட்டிக்கு அருகில் இருக்கும் அந்த பேய் வீட்டிலிருக்கும் பேய்களில் இரண்டு பேய்கள் அண்ணன் மகன் உடம்புக்குள்ளும், மனைவி அஞ்சலி உடம்புக்குள்ளும் புகுந்து விடுகிறது.
பேய்களின் பிடியில் சிக்கிக் கொண்ட அண்ணன் மகனையும், மனைவி அஞ்சலியையும் ஜெய் எப்படி காப்பாற்றுகிறார் என்பதே கிளைமாக்ஸ்.
வழக்கமான பேய்ப்படக் கதை என்பதால் ஹீரோ ஜெய்க்கு படத்தில் பெரிதாக வேலை இல்லை. நிஜக் காதலி அஞ்சலியுடன் திரையில் நெருக்கமாக ரொமான்ஸ் செய்வது மட்டும் தான் அவருக்குக் கிடைத்த அதிகப்பட்ச இடம். அதைத்தாண்டி ஆக்ஷன், செண்டிமெண்ட் ஆகியவற்றில் பெரிதாக எடுபடவில்லை.
முன்பை விட பார்ப்பதற்கு கொழுக் மொழுக்கென்று அழகில் கிறங்க வைக்கிறார் அஞ்சலி. ஜெய்யின் காதல் மனைவியை வருபவர் பேய் புகுந்த உடன் கத்தி கூப்பாடு போடாமல் அளவாக நடித்திருப்பது ஆறுதல்.
ஜெயின் நண்பராக வரும் யோகி பாபுவும், கார்த்திக் யோகி கூட்டணி சில இடங்களில் சிரிக்க வைக்கிறார்கள். பல இடங்களில் யோகி பாபு பேசும் வசனம் செயற்கைத் தனமாகவும், எரிச்சலையும் தருகிறது.
ப்ளாஷ்பேக் காட்சியில் பாவாடை தாவணியில் அழகுச் சிலையாக ஜொலிக்கிறார் ஜனனி ஐயர். பலூன் விற்பவராக வரும் இன்னொரு ஜெய்யை துரத்தி துரத்தி காதலிக்க அவர் சொல்லும் காரணம் தமாசு… தமாசு…
சாதிக் கொலை, தமிழ்ப்படங்களுக்கு அரசியல்வாதிகள் கொடுக்கும் டார்ச்சர் என திரைக்கதையில் கொஞ்சம் மெனக்கிடவும் செய்திருக்கிறார் இயக்குனர் சினிஷ்.
எந்தெந்த படங்களில் காட்சிகளைப் பார்த்து வைத்திருக்கிறோம் என்று டைட்டில் கார்டில் உண்மையை தெரிவித்த வகையில் இயக்குனர் சினிதை பாராட்டலாம்.
ஆர்.சரவணின் ஒளிப்பதிவும், யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசையும் படத்தின் வேகத்துக்கு ஓரளவுக்கு பலம் சேர்த்திருக்கிறது.
அண்ணே கமல் சார் புதுப்படத்துக்கு பூஜை போட்டிருக்கிறார். அதுல என்னடா பிரச்சனை பண்ண முடியும்? அண்ணே கமல் பூஜை போடுறதே பிரச்சனை தானே? என்பதாக வசனம் வரும்போது தியேட்டரில் சிரிப்புச் சத்தமும், கைத்தட்டல்களும் அள்ளுகிறது. இப்படிப்பட்ட யதார்த்தம் பேசும் வசனங்கள் படத்தில் ஆங்காங்கே உண்டு.
டெக்னிக்கல் விஷயங்களில் அதிக கவனம் செலுத்திய இயக்குநர் சினிஷ் கதை, லொக்கேஷன்கள் , திரைக்கதை ஆகிய விஷயங்களில் பத்தோடு பதினொன்றாக பலூனை ஊதி பறக்க விட்டிருக்கிறார்.