போங்கு – விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

bongu-review.jpg1

RATING 2.5/5

”சதுரங்க வேட்டை” படத்தின் வெற்றிக்குப் பிறகு கிட்டத்தட்ட அதே டைப் கதைக்களத்துடன் ஹைடெக் கார்கள் அணிவகுக்க வந்திருக்கும் படம் தான் இந்த ”போங்கு.”

கார் கம்பெனி ஒன்றில் வேலை பார்க்கும் ஹீரோ நட்ராஜ், நாயகி ருஹி சிங், அவர்களது நண்பன் அர்ஜுனன் மூவரும் கார் ஒன்றை டெலிவரிக்குக் கொடுக்கக் கொண்டு செல்கிற வழியில் அந்தக்காரை சிலர் திருடிச்சென்று விடுகிறார்கள்.

இதனால் ஜெயிலுக்குப் போய் தண்டனையை அனுபவித்து விட்டுத் திரும்பும் மூவரும் மீண்டும் வேலை தேடிப்போகும் போது தான் போகிற கம்பெனிகளில் எல்லாம் அவர்களுக்கு ப்ளாக் மார்க் போடப்பட்டிருப்பதை காரணம் காட்டி வேலை மறுக்கப்படுகிறது.

இதனால் வெறுப்படையும் மூவரும் ஜெயிலில் அறிமுகமான ராஜன் மூலம் கார் கடத்தல் தொழிலைச் செய்யும் நந்தகுமாரிடம் வேலைக்குச் சேர்கிறார்கள்.

முதல் கடத்தலை வெற்றிகரமாக முடிக்கும் நட்டி உள்ளிட்ட மூவருக்கும் மதுரையில் பிரபல ரெளடியான வில்லன் ஷரத் லோகித்தஷ்வாவிடமுள்ள 10 விலையுயர்ந்த கார்களை திருடும் வேலையைக் கொடுக்கிறார் நந்தகுமார்.

அந்தக் காஸ்ட்லி கார்களை திருடப்போகும் போதுதான் தாங்கள் ஜெயிலுக்குப் போகக் காரணமாக இருந்த கார் அங்கு இருப்பதை பார்க்கிறார்கள். அதன்பிறகு என்ன நடக்கிறது? என்பதே கிளைமாக்ஸ்.

‘சதுரங்க வேட்டை’ கேரக்டர் போலத்தான் இந்தப்படத்திலும் வாய்த்திருப்பதால் நடிப்பதில் ரொம்ப சிரமப்படவில்லை நட்டி. அதே வழக்கமான ஸ்டைலுடன் பஞ்ச் டயலாக்குகளைப் பேசி அசத்துகிறார். ஆனால் இன்னும் எத்தனை படங்கள் தான் இந்த மாதிரியே நடிப்பார் என்கிற கேள்வியை எழுப்புகிறது. கதைத் தேர்வில் ட்ராக்கை மாத்துங்க ப்ரோ…

நாயகி ருஹி சிங் நட்டி கூடவே வருகிறார், கூடவே போகிறார், கொஞ்சம் கொஞ்சம் டயலாக் பேசுகிறார். அதைத்தாண்டி அவருடைய கேரக்டரில் ஈர்ப்பு இல்லை.

கார் திருட்டுத் தொழிலுக்கு நண்பர்களாக வரும் அர்ஜூன், ராஜன் இருவரும் சரியான தேர்வு. நகைக்கடை வாட்ச்மேனாக வரும் முண்டாசு பட்டி ராம்தாஸ் காமெடியில் கலகலக்க வைக்கிறார்.

வில்லனாக வரும் ஷரத் லோகித்தஷ்வா மதுரை மண்ணுக்கே உரிய கெத்தைக் காட்டி வில்லத்தனத்தில் மிரட்டுகிறார். இடைவேளைக்குப் பிறகு கொலையைப் பற்றி விசாரிக்கும் உயர் அதிகாரியாக வரும் அதுல் குல்கர்னிக்கு இன்னும் கனமாக கேரக்டரை கொடுத்திருக்கலாம்.

மகேஷ் முத்துசுவாமியின் ஒளிப்பதிவில் காஸ்ட்லி கார்களின் சேஸிங் வியக்க வைக்கிறது.

ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்கள் தேவையில்லாத திணிப்பு என்றாலும், பின்னணி இசை விர்… விர்…

கோடிகளை கொடுத்து வாங்கப்படும் விலையுயர்ந்த கார்களை இவ்வளவு எளிதாக திருடு விட்டுச் சென்று விட முடியுமா? என்கிற சந்தேகத்தைக் கிளப்புகிறார் படத்தில் லாஜிக் மீறலான சில காட்சிகளை பட்டி டிங்கரிங் பார்க்காமல் வைத்திருக்கும் அறிமுக இயக்குநர் தாஜ்.

அது மட்டும் கண்களை உறுத்தவில்லை என்றால் காஸ்ட்லி காரை ஹைவேஸில் ஓட்டிப் பார்த்த திருப்தி கிடைத்திருக்கும்!

போங்கு – நட்டிக்கு ஏத்த பீஸ்!