விளையாட்டு ஆரம்பம் – விமர்சனம்
RATING 2/5
பாலாவின் இயக்கத்தில் காய்ந்து கொண்டிருக்கும் ஸாரி… நடித்துக் கொண்டிருக்கும் சாட்டை யுவனின் டைம் பாஸ் கேம் தான் இந்த ”விளையாட்டு ஆரம்பம்.”
ஐ.டி கம்பெனி ஒன்றில் வேலை செய்யும் ஹீரோ யுவன் மற்றும் அவரது நண்பர்களுக்கு திடீரென்று வேலை பறி போகிறது. இதனால் தன் காதலியும் நாயகியுமான ஸ்ராவியாவின் ஆலோசனைப்படி மல்டிலெவல் மார்க்கெட்டிங் கம்பெனி ஒன்றில் வேலைக்குச் சேர்கிறார்.
அதில் நேர்மையான முறையில் வேலை செய்து முன்னுக்கு வரும் யுவனுக்கும், அசிஸ்டெண்ட் கமிஷனரான நாயகி ஸ்ராவியாவின் அண்ணன் ரியாஸ்கானுக்கும் பார்ட்டி ஒன்றில் மோதல் ஏற்படுகிறது. அன்று முதல் இருவருமே பார்க்கிற இடங்களில் எல்லாம் கீரியும், பாம்புமாக சண்டை போட்டுக் கொள்கிறார்கள்.
தன் தங்கையை யுவன் காதலிக்கிறார் என்பதை தெரிந்து கொள்ளும் ரியாஸ்கான் தன் தங்கையிடமிருந்து யுவனைப் பிரிக்க அவர் செய்யும் எம்.எல்.எம் தொழில் ஒரு மோசடித் தொழில் என்பது போல மற்றவர்களை நம்ப வைத்து அந்த விவகாரத்தில் யுவனை ஜெயிலுக்கு அனுப்புகிறார்.
ஜெயிலுக்குப் போன யுவன் ரியாஸ்கானின் சதியை முறியடித்து தான் செய்து வந்த தொழில் நேர்மையான தொழில் என்கிற உண்மையையும் இந்த உலகத்துக்கு எப்படி நிரூபிக்கிறார்? என்பதே கிளைமாக்ஸ்.
காதல், பழி வாங்கல் என்கிற பல படங்களில் பார்த்து பார்த்து சலித்துப் போன கதையோடு எம்.எல்.எம் என்கிற மார்க்கெட்டிங் தொழிலையும் இணைத்து படமாகத் தந்திருக்கிறார்கள்.
ஹீரொ யுவனின் திரையுலக திருப்புமுனைக்கு பாலாவே கிடைத்திருக்கும் போது இப்போதும் இது போன்ற கதைகளை ஏன் தேர்ந்தெடுக்கிறார் என்று தெரியவில்லை. அதே சமயம் ஆக்ஷன், எமோஷனல், ரொமான்ஸ் என நடிப்பில் தன் வேலையை நிறைவாகச் செய்திருக்கிறார்.
நாயகி ஸ்ராயாவின் கண்கள் மட்டுமே கொள்ளை அழகு, ஒட்டடைக் குச்சிக்கு மாடர்ன் ட்ரெஸ் போட்டு விட்டது போல காட்சியளிப்பவர் இன்னும் கொஞ்சம் வெயிட் போட்டால் கோடம்பாக்கம் கண்டு கொள்ள வாய்ப்பிருக்கிறது.
சாதாரண ஒரு விஷயத்தில் சண்டை எழுகிற போது அதை ஒரு அசிஸ்டெண்ட் கமிஷனர் லெவலில் இருக்கும் ரியாஸ்கான் இவ்வளவு தூரத்துக்கு சீரியஸாக எடுத்துக் கொள்வாரா? என்பது ஆச்சரியம் தான். அதோடு கமிஷனரே அவர் மோசமான ஆளுய்யா… என்று தனக்கு கீழ் உள்ளவர் மீது புகார் வரும் போது அதற்கான ஆக்ஷனை எடுக்காமல் அவரே பயப்படுவது போலப் பேசுவதெல்லாம் அப்பட்டமாகத் தெரியும் லாஜிக் மீறல்கள்.
பவர் ஸ்டாரையெல்லாம் ஓரங்கட்டி விட்டு அவருக்குக் கொடுத்த காசில் யோகிபாபுவை நான்கைந்து சீன்களில் நடிக்க விட்டிருந்தால் சிரிப்புக்கு கியாரண்டி கொடுத்திருப்பார். இன்னும் எத்தனை படங்களில் காமெடிங்கிற பேர்ல பல்லை க்ளோசப்ல காட்டி கடுப்பேத்துவாரோ புவர்ஸ்டார்?
படத்துக்கு ஸ்ரீகாந்த் தேவா தான் இசையாம், நிஜமாலுமே நம்ப முடியலீங்க!
எந்த தொழிலைச் செய்தாலும் அதில் நேர்மையாக இருந்தால் வெற்றி நிச்சயம் என்கிற கருத்தைச் சொல்ல நினைத்த இரட்டை இயக்குநர்கள் விஜய் ஆர் ஆனந்த் – ஏ.ஆர்.சூர்யன் இருவரும் இது திரைப்படமா? அல்லது விளம்பரப்படமா? என்று சந்தேகம் வருகிற அளவுக்கு எம்.எல்.எம் என்கிற மல்டி லெவல் மார்க்கெட்டிங் தொழிலுக்கு வக்காலத்து வாங்குகிற படமாக இயக்கித் தந்திருக்கிறார்கள்.
விளையாட்டு ஆரம்பம் – விறுவிறுப்பு கம்மி!