பம்பர்- விமர்சனம்
தமிழில் சமீபகாலமாக அறிமுக இயக்குநர்கள் நல்ல படங்களால் கவனிக்க வைக்கிறார்கள். அந்த வகையில் இந்தவார வரவு பம்பர் படம். இயக்குநர் செல்வகுமார்
ஹீரோ வெற்றி தூத்துக்குடியில் திருட்டு வழிப்பறி என வாழ்ந்து வருபவர். அவருக்கு தன் மாமன் மகளை மணமுடிக்க வேண்டும் என்ற ஆசை! வெற்றியின் நடத்தைகளே அதற்கு தடையாக இருக்கிறது. இந்நிலையில் வெற்றியை ஜெயிலுக்குள் அடைக்கும் ஒரு சூழல் நிகழ, வெற்றி தன் நண்பர்களுடன் அய்யப்பனுக்கு மாலையைப் போட்டுக்கொண்டு சபரிமலை செல்கிறார். சபரிமலையில் லாட்டரிச் சீட்டு விற்கும் இஸ்லாமியப் பெரியவரான ஹரிஸ்பேரடியிடம் வெற்றி ஒரு லாட்டரிச் சீட்டு வாங்குகிறார். அந்தச் சீட்டுக்குப் பத்துக்கோடி ரூபாய் பம்பர் அடிக்கிறது. அந்தப் பத்துக்கொடிக்குப் பின்னால் இருக்கும் எமோஷ்னல், ஆக்ஷன், அறம் ஆகியன தான் படத்தின் மீதிக்கதை
கதாநாயகன் வெற்றி என்றாலும் கதையின் நாயகன் ஹரிஸ்பேரடி தான். மனிதர் தன் முகபாவங்களாலும் உடல்மொழியாலும் நம் மனதை தனது நடிப்பால் உலுக்கியெடுக்கிறார். அபாரமான நடிப்பு அவரது நடிப்பு. வெற்றி ஒருசில இடங்களில் ஸ்கோர் செய்கிறார். ஹீரோயின் கேரக்டர் ஓகே ரகம் தான். தங்கதுரை உள்ளிட்ட வெற்றியின் நண்பர்களாக வருபவர்கள் கவனிக்க வைக்கிறார்கள். இவர்களை எல்லாம் தாண்டி தூத்துக்குடி மண்ணின் அசல் முகங்கள் அசத்துகிறார்கள். சூழ்ச்சி நிறைந்த ஏட்டய்யாவாக கவிதாபாரதி நன்றாக நடித்துள்ளார்
கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை பாடல்கள் இரண்டுமே ரசிகனுக்கு பம்பர் பரிசு. கார்த்திக் நேத்தாவின் ஆழமான பாடல் வரிகளும் ரசிக்க வைக்கின்றன. வினோத் ரத்னசாமியின் ஒளிப்பதிவு படத்தின் அழகியலை கூட்டியுள்ளது. படத்தில் ஹரிஸ்பேரடிக்கு வைத்துள்ள லாஸ்ட் ஷாட் அறம் நிறைந்த கவிதை.
நல்ல கருத்தாக்கம் கொண்ட படத்திற்கு முன்பாதியில் இன்னும் வலிமை சேர்த்திருக்கலாம். முன்பாதியில் படம் ஒரு ஸ்டேட்மெண்டாகவே இருக்கிறது. படத்தின் நீளத்தையும் கொஞ்சம் குறைத்திருக்கலாம். ஆழமான பின்பாதியும் அறம் நிறைந்த படத்தின் க்ளைமாக்ஸும் படத்தை காப்பாற்றி விடுகிறது..மதம் தாண்டிய மனிதமே நல்ல வாழ்வுக்கான அடையாளம் எனச் சொல்லும் பம்பருக்கு நிச்சயமாக டிக்கெட் வாங்கலாம்
3.25/5
#BUMPER #பம்பர்