சக்ரா- விமர்சனம்
கொள்ளை கும்பலை வேட்டையாட ராணுவ வீரரான விஷால் போலீஸ் டீமோடு சேர்ந்து வகுக்கும் வியூகமே இந்த சக்ரா.சுதந்திர தினம் அன்று காவல்துறை அனைத்தும் அரசியல் வாதிகளின் கொடியேற்றம் பின்னாடி செல்ல..அன்று பார்த்து இருவர் பைக்கில் சென்று வசதியான பெரியவர்கள் வசிக்கும் வீடுகளில் கொள்ளையடித்துச் செல்கிறார்கள். கொள்ளைபோன வீடுகளில் விஷாலின் வீடும் ஒன்று. குறிப்பாக அவர் உயிராக நேசிக்கும் அவர் அப்பாவின் அசோக சக்ராவும் கொள்ளைபோகிறது. வெகுண்டெழும் விஷால் தன் காதலியான ஷரத்தாவோடு இணைந்து களம் இறங்க..முடிவில் விஷாலின் வியூகம் எப்படி வென்றது என்பதே மீதிக்கதை.
நடிப்பதை விட அடிப்பதன் மூலமாக பக்கா ஆக்ஷன் மேளாவை அள்ளித் தெளித்து ஈர்க்கிறார் விஷால். அப்பாவின் அசோக சக்ரா செண்டிமெண்ட் பாட்டி செண்டிமெண்ட் எல்லாம் படத்தில் பெரிதாக எடுபடவில்லை என்பதால்..விஷாலின் செண்டிமெண்ட் காட்சிகளும் எடுபடவில்லை. அப்படியே ஷரத்தா விஷால் காதல் மேட்டரும் பெரிதாக ஒட்டவில்லை. படத்தில் வெட்டவேண்டிய காட்சிகளும் ஏராளதாராளம். ரோபோசங்கர் ஆறுதலாக இல்லாமல் இருப்பது நமது சோகம்.
ரெஜினா கசண்ட்ராவின் கேரக்டர் ஸ்கெட்ச் நச் ரகம். அவரும் அசராமல் அசத்தி இருக்கிறார்.
படத்தின் ஒளிப்பதிவு ஆக்ஷன் காட்சிகளில் அசால்டாக மிரட்டுகிறது. திரைக்கதையில் இல்லாத சுவராசியத்தை பின்னணி இசை மூலமாக கொடுக்க ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார் யுவன்! இரும்புத்திரை படத்தில் பேசப்பட்ட பிரச்சனை நம்மோடு ஈசியாக கனெக்ட் ஆனது. இந்தப்படத்தில் நம்மோடு கனெக்ட் ஆகக்கூடிய பிரச்சனையைத் தான் பேசி இருக்கிறார்கள். ஆனால் ஆழமான எழுத்து வொர்க்கில் கோட்டை விட்டு விட்டதால் நாம் படத்தோடு ஒட்டாமல் விலகி நிற்கும் சூழலுக்குத் தள்ளப்பட்டு விடுகிறோம்.
கார்ப்பரேட் கம்பெனிகளிடம் இஷ்டத்திற்கு நாம் நமது டேட்டாக்களை கொடுத்து வைத்துள்ளோம். அதற்குப் பின்னால் இப்படியான ஆபத்தும் நேரலாம் என்ற விசயத்தை கச்சிதமாக சொன்ன விசயத்திற்காக மட்டும் சக்ராவை பாரட்டலாம்!
3.25/5