ஆறு நாள் வசூல் போச்சே… : தவித்துப் போன செங்கல்பட்டு தியேட்டர் முதலாளிகள்
கடந்த ஏப்ரல் 14-ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசான ‘தெறி’ திரைப்படம் செங்கல்பட்டு ஏரியாவில் மட்டும் ரிலீசாகவில்லை. தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அதிக விலை மற்றும் எம்.ஜி கேட்டதாக சில விநியோகஸ்தர்கள் போர்க்கொடி பிடித்தது தான் இந்தப் பிரச்சனைக்கு முக்கிய காரணம்.
விநியோகஸ்தர்களின் தொடர் பிடிவாதம் காரணமாக ‘தெறி’ ரிலீசாகாததால் தியேட்டர் முதலாளிகளாலும் ‘தெறி’ படத்தை தங்கள் தியேட்டரில் திரையிடவில்லை. இதனால் கடுப்பான விஜய் ரசிகர்கள் பல தியேட்டர்களின் முன்பு ஆர்ப்பாட்டம் செய்த காட்சியெல்லாம் அரங்கேறியது.
ஆனால் படம் பக்கா கமர்ஷியலாக ரசிகர்களை கவர்ந்ததால் இன்றுவரை வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது.
குறிப்பாக படம் ரிலீசான 6 நாட்களில் உலகம் முழுவதும் சுமார் 100 கோடியை வசூல் செய்து சாதனை படைத்தது.
இந்தத் தகவலை தயாரிப்பாளர் தாணு அதிகாரப்பூர்வமாக அறிவித்ததும் செங்கல்பட்டு தியேட்டர் தவித்துப் போய் விட்டனர்.
எந்தப் பிரச்சனையும் இல்லாமல் படத்தை முதல் நாளே ரிலீஸ் செய்திருந்தால் 6 நாட்களில் நாமும் நல்ல வசூலை பார்த்திருக்கலாமே? என்று யோசிக்க ஆரம்பித்து விட்டார்கள். இதனால் இதற்கு மேலும் தாமதிப்பது சரியாகாது என்று நினைத்ததால் முறுக்கிக் கொண்டு நின்ற விநியோகஸ்தர்கள் சென்ற வாரம் தானாக முன் வந்து தயாரிப்பாளர் தாணுவிடம் சமாதானம் பேசியிருக்கிறார்கள்.
ஒரு வழியாக 2 வாரங்களை கடந்த பிறகு இனி எம்.ஜி அடிப்படையில் படத்தை திரையிடாமல் விகிதாச்சார அடிப்படையில் தான் படத்தை திரையிடுவோம் என நிபந்தனையோடு செங்கல்பட்டு ஏரியாவில் படத்தை ரிலீஸ் செய்திருக்கிறார்கள்.
இதனால் செங்கல்பட்டு ஏரியாவில் ‘தெறி’ ரிலீஸ் பிரச்சனை முடிந்து விட்டாலும் முதல் வார வசூலை முழுமையாக இழந்து விட்டதால் ரொம்பவே அப்செட்டாகி கிடக்கிறார்களாம் தியேட்டர் முதலாளிகள்.
இனிமேலாவது அவசரப்பட்டு முடிவெடுக்காதீங்கப்பா…