சென்னை 2 சிங்கப்பூர் – விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

RATING – 3/5

நட்சத்திரங்கள் – கோகுல் ஆனந்த், ராஜேஷ் பாலச்சந்திரன், அஞ்சு குரியன், ஷிவ் கேசவ் மற்றும் பலர்

இசை – ஜிப்ரான்

ஒளிப்பதிவு – கார்த்திக் நல்ல முத்து

இயக்கம் – அப்பாஸ் அக்பர்

சென்சார் சர்ட்டிபிகேட் – ‘U’

வகை – காமெடி, நாடகம், ரொமான்ஸ்

கால அளவு – 2 மணி நேரம் 4 நிமிடங்கள்

சினிமாவில் உதவி இயக்குனர்கள் படும் துயரங்கள் கொஞ்ச நஞ்சமில்லை. முதல் பட வாய்ப்பு அமைவதற்குள் ஏழு கடல்கள், ஏழு மலைகளைத் தாண்டிய கஷ்டங்களை அனுபவிக்க நேரும்.

அந்த கஷ்டங்களையெல்லாம் சொல்லி நம்மை கஷ்டப்படுத்தாமல் ”வந்தீங்களா..? விலா நோக சிரிச்சுட்டுப் போங்க…” என்கிற ஃகாமெடி பார்முலாவில் ஓசியில் சிங்கப்பூரைச் சுற்றிப் பார்த்த பேரானந்தத்தையும் தந்திருக்கும் படம் தான் இந்த ”சென்னை டூ சிங்கப்பூர்.”

படம் இயக்கும் முயற்சியில் இருக்கும் ஹீரோ கோகுல் ஆனந்த்தை அவர் நம்பியிருந்த தயாரிப்பாளர் ஒருவர் சென்னையில் ஏமாற்றி விடுகிறார். இதனால் வாழ்க்கையே வெறுத்துப் போன மனநிலையில் இருப்பவரை சிங்கப்பூரில் தனக்குத் தெரிந்த தயாரிப்பாளர் ஒருவரை சந்திக்க அனுப்புகிறார் அவருடைய நெருங்கிய நண்பர்.

உற்சாகமாக சிங்கப்பூருக்குச் செல்லும் ஹீரோ அங்கு கால் வைத்த நேரம் அவர் தேடிப்போன தயாரிப்பாளர் கார் விபத்தில் கோமாவுக்கே சென்று விடுகிறார்.

கூடவே தான் வைத்திருந்த பாஸ்போர்ட் உள்ளிட்ட இத்யாதிகளையும் தொலைத்து விட்டு நடு ரோட்டில் நிற்கிறார். ஊருக்கும் திரும்ப முடியாமல் படமும் எடுக்க முடியாமல் கையறு நிலையில் இருக்கும் அவருடைய படம் இயக்கும் கனவு நனவானதா இல்லையா? என்பதே கிளைமாக்ஸ்.

ஆரம்பக் காட்சிகளில் அமெரிக்கா ரிட்டர்ன் மாப்பிள்ளைப் போன்ற லுக்கில் வந்தாலும் நேரம் செல்லச் செல்ல அவர் படும் கஷ்டங்களைப் பார்க்கும் போது நமக்கே பரிதாபம் வந்து விடுகிறது. அவர் படுகிற கஷ்டங்களைப் பார்த்து வயிறு வலிக்க சிரிப்பு வந்தாலும், இதயத்தின் ஒரு ஓரத்தில் கடவுளே ஏம்ப்பா இந்தப் புள்ளையை இப்படி சோதிக்கிற என்று கேட்கவும் வைக்கிற நடிப்பை கொட்டி விடுகிறார்.

அவரது நண்பராக வரும் ராஜேஷ் பாலச்சந்திரனும் அறிமுகக் காட்சியில் லோட லொடவென்று பேசிக்கொண்டிருப்பது ”ஆஹா… இது கடுப்பு ரக கேரக்டரோ?” என்று பயப்பட வைத்தாலும் அடுத்தடுத்த சீன்களில் ஹீரோ கோகுலோடு சேர்ந்து அவர் செய்யும் அலப்பறைகள் மொத்த தியேட்டரும் கைத்தட்டி ரசிக்க வைக்கும் ”ஹை பிட்ச் கெக்கே பிக்கே..” காமெடி ரகம்!

அழகு தேவதையாக வருகிறார் நாயகி அஞ்சு குரியன்! பாடல் காட்சிகளில் கூட கண்களை கூச வைக்காத மேக்கப், நடிப்பிலும் தேவையான நிறைவு.

‘டான்’ ஆக வரும் வில்லன் ஷிவ் கேசவ் க்ளைமாக்சில் துப்பாக்கி முனைக் காட்சிகளில் குனிந்து கொண்டே நடித்திருப்பது, முகம் சுளிக்க வைக்காத சிரிப்புக்கு கூடுதல் கியாரண்டி.

பிரபல இசையமைப்பாளர் ஜிப்ரான் தான் படத்தின் தயாரிப்பாளரும் கூட! விஸ்வரூபத்திலேயே ரசிகர்களை கதகளி ஆட வைத்தவர் சொந்தப் படமென்றால் சும்மாவா இருப்பார்.பாடல்களும்ப, ரபரவென்ற பின்னணி இசையும் படத்தின் விறுவிறுப்புக்கு எக்ஸ்ட்ரா எனர்ஜி.

கார்த்திக் நல்லமுத்துவின் ஒளிப்பதிவில் சிங்கப்பூரின் மொத்த அழகையும் அலுப்பில்லாமல் அள்ளிப் பருகலாம்!

”நம்ம எவ்வளவு தான் கஷ்டப்பட்டாலும் நம்மளை விட இந்த உலகத்துல கஷ்டப்படுறவங்க இருக்கத்தான் செய்வாங்க.” ”நம்பிக்கை வாழ்க்கை இல்லை.  தன்னம்பிக்கை தான் வாழ்க்கை.” போன்ற வாழ்க்கையின் யதார்த்தம் சொல்லும் வசனங்களில் அப்ளாஸ் வாங்குகிறார் அப்பாஸ்.

உதவி இயக்குனரின் தேடல், ஹீரோயினுக்கு கேன்சர் என பழைய ஃபார்முலா கதையாக இருந்தாலும், அதை காமெடியான திரைக்கதையாக்கி,  சீன் பை சீன் விறுவிறுப்பு குறையாத படமாகத் தந்திருக்கிறார் இயக்குநர் அப்பாஸ் அக்பர்.

”சிங்கப்பூர்” பெயரைக் கேட்டாலே மனசு உற்சாகத்தில் துள்ளிக் குதிக்குமல்லவா? அதே லெவல் உற்சாகம் இந்தப்படத்திலும் கிடைக்கும்!