அதே கண்கள் – விமர்சனம்
RATING : 3.5/5
பார்வையற்ற செஃப் ஒருவரின் காதலும், அதன் பின்னணியில் இருக்கின்ற மோசடியும் தான் இந்த ‘அதே கண்கள்.’
15 வயதில் கண் பார்வையை இழக்கும் நாயகன் கலையரசன் துவண்டு விடாமல் தன்னம்பிக்கையுடன் சமயற்கலையைப் பயின்று ரெஸ்ட்ண்டாரண்ட் ஒன்றை நடத்தி வருகிறார்.
விகடன் நிறுவனத்தில் நிருபராக பணிபுரியும் ஜனனி ஐயர் கலையரசனுக்கு சிறு வயதிலிருந்தே தோழி. ஒரு கட்டத்தில் கலையரசனுக்கு கண்பார்வை என்கிற குறையையும் பொருட்படுத்தாமல் அவரை திருமணம் செய்யத் தயாராகிறார்.
இந்த சூழலில் தன்னுடைய ரெஸ்ட்டாரண்ட்டுக்கு கஸ்டமராக வரும் ஷிவதா நாயரை காதலிக்க ஆரம்பிக்கிறார் கலையரசன். காதல் நகர்ந்து கொண்டிருக்கும் போதே ஒருநாள் கவலையான முகத்தோடு ரெஸ்ட்டாரண்ட்டுக்கு வரும் ஷிவதா தனக்கு சில லட்சங்கள் கடன் இருப்பதாகவும், அதைக் கேட்டு கடன்காரர்கள் மிரட்டுவதாகவும் கண்ணீர் விடுகிறார்.
கலையரசனோ கவலைப்படாதே நாளைக்கு நான் பணத்தோடு வருகிறேன். நீ வீட்டுக்குப் போ என்று தைரியம் சொல்லி அனுப்புகிறார்.
சொல்லி விட்டு போகிற வழியில் சாலை விபத்தில் சிக்கிக் கொள்ள, கிட்டத்தட்ட 3 வாரங்கள் மருத்துவமனையிலேயே அட்மிட் ஆகி சிகிச்சை எடுக்கிறார். அதோடு அவருக்கு கண் பார்வையும் கிடைத்து விடுகிறது.
கண் பார்வை கிடைத்து விட்டது என்கிற சந்தோஷத்தை விட தன்னை நம்பியிருந்த தன் காதலியின் நிலைமை என்னவாகியிருக்கும்? என்கிற பதபதப்பில் அவளைத் தேடிப்போகும் போது தான் பெரிய அதிர்ச்சி அவருக்கு காத்திருக்கிறது.
அது என்ன? கலையரசன் – ஜனனி ஐயர் திருமணம் நடந்ததா? இல்லையா? என்பதே கிளைமாக்ஸ்
ஹீரோவாக வரும் கலையரசனின் நடிப்பு தீனி போடுகிற சரியாக கேரக்டர். பார்வையற்ற ஒரு மாற்றுத்திறனாளி கேரக்டரை மிக எளிதாக உள்வாங்கி நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கண்பார்வை கிடைத்தும் சந்தோஷப்பட முடியாமல் தன்னை நம்பியிருந்த காதலியை ஏமாற்றி விட்டோமே என்கிற குற்ற உணர்ச்சியில் அவர் மனம் தவிப்பதும், இடைவேளைக்குப் பிறகு தன் காதலி எப்படிப்பட்டவள் என்கிற விஷயம் தெரிய வரும் போது அதிர்ச்சியடைவதுமாக சிறப்பான நடிப்பு.
கதையை நகர்த்திக் கொண்டு செல்வதில் பெரும்பங்கு ஷிவதா நாயருக்குத் தான்! இரண்டு விதமான சூழல்களில் அதற்குரிய முழுப்பரிமாணத்தையும் வெளிப்படுத்தி தனி முத்திரை பதிக்கத்தான் அவருடைய ஒல்லியான தேகம் எவ்வளவு அழகாக ஒத்துழைக்கிறது! ஆள் பார்ப்பதற்கு ஒல்லியாக இருந்தாலும் அந்த புன்னகை ததும்பிய வசீகரமான முகத்தில் தான் என்ன ஒரு வில்லித்தனம்! இது போன்ற தேர்ந்தெடுத்த படங்களில் நடித்தால் திருமணத்துக்குப் பிறகும் பாலிவுட்டில் முன்னணி ஹீரோயினாக வலம் வரும் நித்யாபாலன் போல ஆக வாய்ப்பிருக்கிறது.
ஜனனி ஐயருக்கு நடிப்பை கொட்டித் தீர்ப்பதற்கான கேரக்டர் அமையவில்லை. என்றாலும் கொடுத்த கேரக்டரை முழுமையாக்கியிருக்கிறார். கூடவே இருக்கும் நம்மை விட்டு விட்டு ஷிவதாவை காதலிக்கிறாரே என்கிற எரிச்சலை சட் சட்டென்று கலையரசன் மீது காட்டினாலும் அவருக்காக நிஜத்தை புரிந்து கொண்டு மாறுவது அற்புதம்.
எரிச்சல் தராத, ஓவர் டோஸும் இல்லாத அளவான வசனங்களை உச்சரித்து காமெடியில் கலகலப்பூட்டியிருக்கிறார் கான்ஸ்டபிளாக வரும் பாலசரவணன். ஊமை விழிகள் பட இயக்குநர் அரவிந்த் ராஜ் சில காட்சிகளில் தலை காட்டுகிறார்.
ரவிவர்மன் நீலமேகத்தின் ஒளிப்பதிவும், ஜிப்ரானின் இசையும் படத்தின் வேகத்தை நிதானமாக காட்சிப்படுத்தி ரசிக்க வைப்பதில் துணை நிற்கின்றன.
ஜிப்ரானின் இசையில் தந்திரா பாடல் ரிப்பீட் ரகம். பின்னணி இசையும், அவ்வப்போது எட்டிப்பார்க்கும் மென்மையான விசில் சத்தமும் இதம்.
கட் செய்ய வேண்டிய இடத்தில் கத்தரியைப் போட்டு கச்சிதம் காட்டியிருக்கிறது லியோ ஜான்பாலின் எடிட்டிங்!
அன்பை வெளிபடுத்தி நம்பிக்கைத் துரோகம் செய்கிற பல கேரக்டர்களை நிஜ வாழ்க்கையில் எல்லோரும் கடந்து தான் செல்கிறார்கள். அப்படி ஒரு கட்டமைப்பில் மிக எளிதான கதையை தனக்கே உரிய புத்திசாலித்தனத்துடன் கூடிய திரைக்கதை அமைத்து த்ரில்லர் படமாக சுவாரஷ்யம் கூட்டித் தந்திருக்கிறார் இயக்குநர் ரோஹின் வெங்கடேஷன்.
ஒரு குடும்பத்தை சேர்ந்த இரண்டு பேர், அவர்களுடன் ஒருவர் என வெறும் மூன்று பேரால் இவ்வளவு பெரிய மோசடியை அவ்வளவு ஈஸியாக செய்து விட முடியுமா? என்கிற சந்தேகம் எழுந்தாலும் காட்சிகளின் நகர்வில் அந்தக் குறையைக் கடந்து ரசிக்க வைக்கிறது இந்த அதே கண்கள்.
அதே கண்கள் – வசீகரம்!