டிமான்ட்டி காலனி – விமர்சனம்
கோடம்பாக்கத்தின் உச்சிமுடியைப் பிடித்து கிறங்கி விழுகிற அளவுக்கு ஆட்டிக் கொண்டிருக்கும் பேய் பட சீஸனுக்கு புதுவரவாக வந்திருக்கும் படம் தான் இந்த ”டிமான்ட்டி காலனி.”
அருள்நிதி, ரமேஷ் திலக், ஷனத், அபிஷேக் ஜோசப் நான்குபேரும் சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள கடற்கரையோர அடுக்குமாடி குடியிருப்பில் பேச்சுலர்ஸ்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலை. அதில் ஹீரோ அருள்நிதிக்கு ‘ஜில்லு’வாக வரும் மதுமிதாவுக்கு கம்பெனி(?) கொடுக்கும் வேலை. ஒருவர் அசிஸ்டெண்ட் டைரக்டர். இப்படி நாலு பேருக்கும் நாலு வேலைகள்.
அவரவர் வேலைகள் முடிந்தவுடன் வழக்கமாக சாயங்காலமானால் டாஸ்மாக்கில் கூடுவார்கள். அன்றும் ஒன்று கூடி குடிக்கிறார்கள். டாஸ்மாக்கை விட்டு வெளியே வந்தால் இடிமின்னலுடன் சரியான மழை.
”இந்த மழையில வீட்டுக்கு போக வேணாம் வேற எங்கையாவது ரவுண்ட்டு அடிச்சிட்டு வரலாம்” என்கிறான் நான்கு பேர்களில் ஒருவன். அதில் உதவி இயக்குனராக இருப்பவர் ”அப்படியானால் ஆழ்வார்ப்பேட்டையிலுள்ள ‘டிமான்ட்டி காலனி’க்கு போகலாம். அங்குள்ள ஒரு பங்களாவில் பேய் இருப்பதாக சொல்கிறார்கள். நான் எழுதியிருக்கும் பேய் படக்கதைக்கு அங்கு நிறைய நிஜ ஆதாரங்கள் கிடைக்கலாம்” என்கிறான். அதில் ஒருவன் மட்டும் பயந்து வர மறுக்க, விரும்பமில்லாமலேயே அவனை வம்படியாக டூவீலரின் பின்பக்கத்தில் உட்கார வைத்துக் கூட்டிப் போகிறார்கள்.
தூரத்தில் இருந்து பார்க்கும் போதே பயமுறுத்தும் பாழடைந்த ஒரு பெரிய பங்களா. உஷ் உஷ் சத்தங்கள்… பயங்கர இருட்டுக்குள் மெல்ல நகர்ந்து போவது, ஜில்லென்று காற்றடிப்பது, திரைச்சீலைகள் அசைவது என சில நிமிடங்கள் பேய் படங்களுக்கே உரிய இத்யாதிகளை காட்டி அவர்களும் பயந்து, ரசிகர்களையும் பயமுறுத்தி விட்டு அங்கிருந்து வெளியேறி வீடு திரும்புகிறார்கள். வரும்போது சும்மா இல்லாமல் அங்குள்ள ஒரு விலை உயர்ந்த ஆபரணத்தை எடுத்துக் கொண்டு வந்து விடுகிறார் உதவி இயக்குனரான நண்பர்.
அந்த நெக்லஸ் அவர்கள் தங்கியிருக்கும் வீட்டுக்கு வந்ததும் நடப்பதெல்லாம் திக் திக் திகிலைக் கிளப்பும் நிமிடங்களாக போகிறது.
பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இருந்த ‘டிமான்ட்டி’ என்ற வெள்ளையர் தன் மனநோயாளியான மனைவி யாரோ ஒருவன் கற்பழித்து விட்டான் என்கிற செய்தி கேட்டு மன உளைச்சலுக்கு ஆளாகிறார். அந்த வெறுப்பில் அங்குள்ள வேலை ஆட்களில் சிலரை சுட்டுக் கொன்று விட்டு தானும் அங்கேயே தீயில் இறந்து ஆவியாக இருக்கிறார் என்று ‘டிமான்ட்டி காலனி’ டைட்டிலுக்கு சரித்திரக் கதை ப்ளாஸ்பேக்குடன் படத்தை முடித்திருக்கிறார் இயக்குனர் அஜய் ஞானமுத்து.
ஹீரோ அருள்நிதி தொடர்ந்து தனது இயல்பான நடிப்புக்கு தீனி போடும் கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கிறார். அந்த வகையில் இந்தப் படத்தையும் அவரது ‘குட் லிஸ்ட்’டில் சேர்த்துக் கொள்ளலாம். ரெண்டாம் பாதி முழுக்க முகத்தில் பயத்தை வரவழைத்துக் கொண்டு தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அவர் கூடவே வரும் நண்பர்களான ரமேஷ் திலக், ஷனத், அபிஷேக் ஜோசப் மூவரும் தங்களது கேரக்டரில் முழுமை காட்டியிருக்கிறார்கள்.
சில நிமிடங்களே நாடி ஜோதிடராக வந்தாலும் எம்.எஸ்.பாஸ்கர் சொல்லும் ஒரு ரகசியம் தான் படத்தின் விறுவிறுப்புக்கு அடித்தளமாக அமைகிறது. ”தம்பி உங்க ப்ரெண்ட் சதீஷ் இறந்து ரெண்டு நாளாச்சு… இப்போ உங்ககூட இருக்கிறது யாருன்னே தெரியல..” என்று தகவலைச் சொல்லவும் பரபரப்பு தொற்றிக்கொள்ள படம் பார்க்கும் ரசிகர்கள் சீட்டின் நுனிக்கு வந்து விடுகிறார்கள்.
ரெண்டரை மணி நேரத்துக்கும் குறைவாகவே ஓடுகிறது படம். ஆனாலும் திரைப்படம் மெதுவாக நகர்கிறது.
தயாரிப்பாளராக வரும் சிங்கம் புலி, ஜில்லுவாக வரும் மதுமிதா ஆகியோரின் கேரக்டர்கள் பேசப்படும் அளவுக்கு இல்லை என்றாலும் மதுமிதாவின் கேரக்டரை காமெடி கேரக்டராக்கி இன்னும் கொஞ்சம் கூடுதல் காட்சிகளில் உலவ விட்டிருக்கலாம்.
வீட்டில் உள்ள டிவியில் பேய் படம் பார்த்துக் கொண்டிக்கும் போது இவர்கள் முகங்களே டிவிக்குள் தெரிவது மாதிரியான காட்சிகள் எல்லாமே ஏற்கனவே ரிலீசான படங்களின் சாயல் தான்.
கேபாஜெர்மியாவின் பின்னணி இசை அப்பட்டமான ஹாலிவுட் த்ரில்லர் படங்களை ஞாபகப்படுத்துகிறது. சில காட்சிகளில் வரும் ஓவர் சத்தங்கள் தியேட்டர் ஸ்க்ரீனோடு நம் காதுகளையும் சேர்த்து கிழி கிழியென்று கிழித்தெடுக்கின்றன.
ரெண்டாம் பாகம் முழுவதையும் அடுக்குமாடிக் குடியிப்பிலுள்ள ஒரேஒரு வீட்டை பேய் வீடாக மாற்றி திரைக்கதையை நகர்த்தியிப்பது இயக்குனரின் புத்திசாலித்தனம்.
பேய்ப் படங்கள் என்றாலே காமெடிப்படங்கள் தான் என்கிற மனநிலையில் இருக்கிற ரசிகர்களை நிஜமாகவே மிரண்டு போகும் அளவுக்கு பயமுறுத்த நினைத்து ஒரு ஹாலிவுட் ஹாரர் படத்தைப் பார்த்த திருப்தியோடு தியேட்டரை விட்டு அனுப்புகிறார் அறிமுக இயக்குனர் அஜய் ஞானமுத்து.
”இதை இந்த ஹாலிவுட் படத்துல இருந்து தான் சுட்டுருக்காங்க…” என்று யாராவது ஒரு சமூகவலைத்தளத்தில் ஆதாரம் காட்டாமல் இருந்தாலே அது இந்தப் படத்தின் வெற்றி தான்.