துப்பாக்கி 2 இல்லை; இது வேற… : விஜய்யின் 62வது படம் பற்றி மனம் திறந்த ஏ.ஆர்.முருகதாஸ்!
விஜய் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த ‘மெர்சல்’ படத்தின் டீசர் வருகிற செப்டம்பர் 21-ம் தேதி அட்லி பிறந்தநாளில் ரிலீசாக உள்ளது.
படம் தீபாவளி விருந்தாக வர உள்ளது. இந்த இரட்டிப்பு சந்தோஷமே விஜய் ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தைக் கொடுத்திருக்கும் நிலையில் நேற்று இன்னொரு சந்தோஷ தகவலை வெளியிட்டார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்.
மெர்சல் படத்துக்குப் பிறகு விஜய்யின் 62-வது படத்தை இயக்கப் போவது யார்? என்கிற கேள்விக்கு உறுதியான பதில் கிடைக்காமல் இருந்தது. இந்த நிலையில் ஸ்பைடர் படம் ரிலீசானதும் விஜய்யின் 62-வது படத்தை நான் தான் இயக்கப் போகிறேன் என்று அறிவித்திருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.
இதுகுறித்து பேசிய அவர் “ஸ்பைடர் பட வேலைகளைப் பார்த்துக் கொண்டே, விஜய்யின் 62 வது படத்திற்கான பணிகளையும் தொடங்கி விட்டேன். இது துப்பாக்கி படத்தின் இரண்டாவது பாகமாக இருக்காது. இது வேறொரு புத்தம் புதுக்கதைக்களத்துடன் இருக்கும். முழுக்கதையையும் தயார் செய்து விட்டேன். படப்பிடிப்பை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் தொடங்க திட்டமிட்டுள்ளோம். ‘ஸ்பைடர்’ படம் ரிலீஸ் ஆனதும் விஜய் 62 படம் பற்றிய முழுமையான தகவல்களை வெளியிடுவேன் என்று தெரிவித்திருக்கிறார்.