மணிரத்னம் , ஷங்கர் மாதிரி வருவீங்க தம்பி! : ரிலீசுக்கு முன்பே பாராட்டுகளை குவித்த இளம் இயக்குநர்!

Get real time updates directly on you device, subscribe now.

dhruvangal-16-2

டந்த இரண்டு வார காலமாகவே தமிழில் தயாராகியிருக்கும் ‘துருவங்கள் 16’ படத்தை தான் இப்படி மூச்சு முட்ட பாராட்டிக் கொண்டிருக்கிறது ஒட்டுமொத்த தமிழ்சினிமாவும்!

இதுதான் தமிழ்சினிமாவின் வழக்கமான ஃபார்முலா, இதைத்தாண்டி இந்தப் படத்தில் என்ன புதிதாக இருக்கப் போகிறது என்கிற எண்ணத்தோடு ‘துருவங்கள் 16’ படத்தை பார்க்கப் போகிற திரையுலக பிரபலங்கள் அத்தனை பேரும் படம் முடிந்து வெளியே வரும்போது அப்படத்தின் இயக்குநர் கார்த்திக் நரேனை தேடிப்பிடித்து பாராட்டுகளை தெரிவிக்காமல் வருவதில்லை. அது மட்டுமா, இந்தப்படம் ரிலீசாகும் போது மிஸ் பண்ணாமப் பாருங்க என்று தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கும், தெரிந்தவர்களுக்கும் பரிந்துரை செய்கிறார்கள். அந்தளவுக்கு வித்தியாசமான திரைக்கதையை அமைத்து படத்தை இயக்கியிருக்கும் இயக்குநர் கார்த்திக்குக்கு வயசு 21 தான். இந்த வயதில் இப்படி ஒரு நேர்த்தியான திரைக்கதை அமைக்கிற அளவுக்கு அபார திறமையா என்று ஆச்சரியம் விலகாமல் செல்கிறார்கள்.

அப்படி என்ன இந்தப் படத்தில் ஸ்பெஷல்?

வழக்கமாக நாம் பார்க்கும் தமிழ்ப் படங்களில் இந்த காட்சியில் ஆரம்பித்து இந்தக் காட்சியில் படம் முடியும் என்கிற ரெகுலர் ஃபார்முலா இருக்கும். அதை ரசிகர்களும் ஈஸியாக யூகித்து விடுவார்கள். ஆனால் இந்தப்படத்தைப் பொருத்தவரை படம் ஆரம்பிக்கிற விதமும், அது முடிகிற விதமும் புதிதாக இருக்கும். அது படம் பார்க்கிற ரசிகர்களுக்கு எளிமையாக ரசிக்கும் விதமாக இருக்கும் என்பதே ஹைலைட்.

இப்படத்தின் இயக்குநர் கார்த்திக் நரேனுக்கு சொந்த ஊர் கோயம்புத்தூர். மெக்கானிக்கல் இன்ஞ்சினியராக படிப்பைத் தொடர்ந்தவருக்கு படிப்பா? சினிமாவா என்று வந்த போது சினிமாவை டிக் செய்து விட்டு சென்னைக்கு வந்து விட்டார். வந்தவருக்கு சித்தார்த்தின் ‘ஜில் ஜங் ஜக்’ படத்தில் உதவி இயக்குநராக வேலை கிடைக்க அதில் கிடைத்த அனுபவங்களோடு, ஏற்கனவே சில குறும்படங்களையும் இயக்கிய அனுபவங்களோடும் இந்தப்படத்தை எடுத்திருக்கிறார்.

முன்னதாக இந்தப்படத்தின் கதையை கோடம்பாக்கத்தில் பல தயாரிப்பாளர்களிடம் சொல்லச் சென்ற போது கதையைச் சொல்லுங்க என்று கேட்டவர்களை விட முதல்ல உங்க வயசென்ன தம்பி என்று கேட்டவர்கள் தான் அதிகமாம். அனுபவம் பத்தாது என்று அவர்கள் முடிவு செய்ய, கிடைத்த அனுபவத்தோடு அப்பாவின் ஒத்துழைப்போடு படத்தை இயக்கி தயாரித்திருக்கிறார். படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் ரகுமானும் இளைஞர்கள் மீது முழு நம்பிக்கை வைத்து படப்பிடிப்புக்கு முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறார்.

17 நாட்களில் படப்பிடிப்பை முடித்து விட்டாலும், படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளுக்கு மட்டும் சுமார் 6 மாதங்கள் எடுத்துக் கொண்டு செய்திருக்கிறார்கள். எல்லாவற்றையும் முடித்து படத்தை திரையுலகில் உள்ள சில முக்கியமான பிரபலங்களுக்கு போட்டுக் காண்பித்திருக்கிறார். படத்தை பார்த்து விட்டு வந்தவர்கள் அத்தனை பேரும் மணிரத்னம், ஷங்கர் மாதிரி வருவீங்க தம்பி என்று மனசார வாழ்த்தி விட்டுப் போயிருக்கிறார்கள். ஹீரோ ரகுமானோ என்னோட கேரியர்லேயே இதுதான் பெஸ்ட் படமென்று இயக்குநர் கார்த்திக் நரேனை கட்டித் தழுவி பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்திருக்கிறார்.

கோபமோ? சந்தோஷமோ? மனுஷனோட ஒவ்வொரு குணத்துக்கும் ஒரு எக்ஸ்ட்ரீம் இருக்கும். அந்த எக்ஸ்ட்ரீம்ல ஒரு செயலைச் செய்றப்போ என்ன நடக்கும்கிறது இந்த ‘துருவங்கள் 16’ படமாம்.

வரும் டிசம்பர் 30-ம் தேதி ரிலீசாகப் போகும் இப்படத்தை ட்ரீம் பேக்டரி நிறுவனமும், வீனஸ் இன்பொடெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து பிரம்மாண்டமாக வெளியிடுகிறார்கள்.

வெற்றியும் அப்படியே அமையட்டும்!