இப்பவும் 6 மிஸ்டு கால்ல 3 பேர் கடன்காரங்க தான் : லிங்குசாமி பரபரப்பு பேச்சு!
இயக்குநர் லிங்குசாமி எழுதிய ‘செல்ஃபி எடுத்துக் கொள்கிறது மரம்’ என்கிற ஹைக்கூ கவிதைகள் என்ற கவிதை நூல் வெளியீட்டு விழாவில் மனம் திறந்து பேசினார். படம் தயாரிப்பு, அது தொடர்பான கடன், அதைத் தொடர்ந்து அவர் மீது எழுப்பப்படும் விமர்சனங்கள் என் எல்லாவற்றுக்கும் பதில் கொடுப்பது போல் இருந்தது அவரது குமுறல் நிறந்த பேச்சு.
விழாவில் இயக்குநர் லிங்குசாமி பேசியதாவது : ”நான் எப்போதும் கவிதையுடன் இருப்பதாகவே உணர்கிறேன். எனக்குள் ஆதியில் தோன்றியது கவிதையாகவே இருந்திருக்ககிறது. பிறகு தான் கதை எல்லாம் வந்தது என்பேன்.
ஊரிலிருந்து சென்னை வந்தபோது ரெண்டு மூணு கவிதைகளும் கொஞ்சம் நம்பிக்கையுடன் தான் இங்கு வந்தேன். கையில் காசு பணம் வேண்டாம் கவிதை போதும் பிழைத்துக் கொள்ள்ளலாம் என்றிருப்பேன். எதுவுமே இல்லைன்னாலும் கவிதை இருக்கிறது பார்த்துக் கொள்ளலாம் என்றிருப்பேன். அப்போதே அப்படி இருந்தேன். இப்போது இவ்வளவு பேர் கிடைத்திருக்கிறீர்கள் எனக்கென்ன கவலை?
கவிதை சொல்வது என்பது என்னைச் சுற்றித் தொற்றுநோய் போல வந்து கொண்டிருக்கிறது என் டிரைவர் முதல் ஆபீஸ் பாய் வரை இப்போதெல்லாம் கவிதை சொல்கிறார்கள். .
நான் எப்போதும் கவிதை ரசிக்கும் மனசோடு இருப்பவன், எவ்வளவு சோதனை வந்தாலும் எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் கவிதைகளுக்கு முன்னால அதெல்லாம் உண்மையிலேயே பெரிதாகத் தெரியாது. அந்த மனசு மட்டும் இருந்தால் போதும். எவ்வளவு சோதனை வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம்.
இப்போது கூட வருகிற மிஸ்டு காலில் 6 காலில் 3 கால் பணம் திருப்பித்தரக் கேட்கும் பைனான்சியராகக் கூட இருக்கலாம். கடன் இருக்கிறது கவலை இல்லை. காரணம் நான் யாரையும் ஏமாற்ற மாட்டேன். நான் உதவி இயக்குநராக சிரமப்பட்ட காலத்தில் கூட எல்லாக் கடையிலும் கடன் இருக்கும் 4 மாதம் கழித்து ஊர் போய்விட்டு வந்து எல்லாருக்கும் திருப்பிக் கொடுப்பேன். எங்கள் குடும்பம் ஊரு விட்டு வேறு ஊர் வந்த போது கூட ஆயிரம் ரூபாய் கடன் கொடுப்பதற்காக மாட்டை விற்றுக் கொடுத்து விட்டு வந்தவர் எங்கள் அப்பா. அந்த நேர்மை என் ரத்தத்திலேயே இருக்கிறது. எனக்கு பொறுப்பும் கடமையும் இருக்கிறது.
இந்த மனநிலையோடு அடுத்த படத்தை தொடங்குகிறேன். நீங்கள் எல்லாம் இருக்கிற போது எனக்கு எதுவுமே பிரச்சினை இல்லை. எல்லா கஷ்டங்களும் கடந்து போய் விடும். இதுவும் கடந்து போகும். எல்லாம் கடந்து போகும். இதை என் தனிப்பட்ட விழாவாக நினைக்கவில்லை. எல்லாரையும் சந்திக்கிற ஒரு வாய்ப்பாக நினைக்கிறேன். அதற்காகவே நானாக ஏற்படுத்திக் கொண்ட சந்தர்ப்பமே இது. இங்கு வந்த அனைவருக்கும் நன்றி.நாம் தொடர்ந்து சந்திப்போம்..” என்றார்.