”ஆயிரம் ராஜாக்கள் வந்தாலும் இளையராஜாவை மிஞ்ச முடியாது!” : இயக்குநர் பேரரசு புகழாரம்

Get real time updates directly on you device, subscribe now.

rani

‘கபாலி’ படத்துக்குப் பிறகு ரஜினியின் அடுத்த படம் என்னவாக இருக்கும் என்கிற கேள்விக்கு பதில் கிடைத்து விட்டது. மீண்டும் ரஞ்சித் இயக்கத்திலேயே நடிக்க கால்ஷீட் கொடுத்திருக்கிறார் ரஜினி.

அதேபோல அப்படத்தில் ரஜினிக்கு மகளாக நடித்த தன்ஷிகாவின் அடுத்த படம் என்னவாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பரவலாக கிடக்கிறது. அந்தக் கேள்விக்கும் நேற்று பதில் கிடைத்தது.

ஆமாம், இசைஞானி இளையராஜாவின் இசையில் எங்க அம்மா ராணி என்ற படத்தில் கதையின் நாயகியாக அவதாரம் எடுத்திருக்கிறார் தன்ஷிகா.

நேற்று மாலை சென்னையில் நடந்த இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இசைஞானி இளையராஜா, தன்ஷிகா, இயக்குநர் பாணி, தயாரிப்பாளர் முத்து கிருஷ்ணன், இயக்குநர் சமுத்திரகனி, நடிகர் நமோ நாராயணன், இயக்குநர்கள் கரு,பழனியப்பன், பேரரசு, நடிகர் மனோஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Posts
1 of 14

விழாவில் பேசிய ‘ராணி’ தன்ஷிகா ”இத்திரைப்படத்தில் இசை ஞானி இளையராஜா அவர்கள் இசையில் நடிப்பது பெருமையாக உள்ளது. நான் இப்படத்தில் நடிப்பதற்கு மிக முக்கியமான காரணம் இயக்குநர் சமுத்திரகனி அவர்கள் தான். அவர் கூறியதால் தான் நான் இப்படத்தில் நடித்தேன். என்னை அறிமுகபடுத்திய இயக்குநர் ஜனநாதன் முதல் கபாலி இயக்குநர் ரஞ்சித் மற்றும் ராணி திரைப்படத்தின் இயக்குநர் பாணி ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்” என்றார்.

விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் கரு.பழனியப்பன் ”நான் யாரிடமும் இதுவரை கோரிக்கைகள் ஏதும் வைத்ததில்லை. ஏனென்றால் கோரிக்கைகள் வைத்தால் ஏதாவது பிரச்சனை வரும் அதனால் தான் வைப்பதில்லை. இப்போது முதன் முறையாக இசைஞானி இளையராஜா அவர்களிடம் கோரிக்கை வைக்க போகிறேன். அவர் யுவன் ஷங்கர் ராஜா போன்று ஒரு படத்துக்கு முழுமையாக இசையமைக்க வேண்டும். ஏனென்றால் பல வருடங்களுக்கு முன் அவர் இசையமைத்த படங்களின் பாடல்களையே நாம் இன்றுவரை கேட்கிறோம். அப்படி இருக்கும் போது அவர் இந்த காலகட்டத்துக்கு ஏற்றவாறு இசையமைக்கும் போது அதை பல ஆண்டுகள் தாண்டிய பிறகும் அனைவரும் ரசிப்பார்கள் என்பது உறுதி.

எனக்கு கார்த்திக் ராஜா அவர்களிடமும், யுவன் ஷங்கர் ராஜாவிடம் ஒரு கோரிக்கை உண்டு ஒன்று இசைஞானி இளையராஜா அவர்கள் இதுவரை இசையமைத்த படங்களின் லிஸ்டை உருவாக்க வேண்டும் மற்றொன்று ஒட்டு மொத்த திரையரங்கத்தையும் ஒன்று திரட்டி அவருக்கு மிகப்பெரிய அளவில் பாராட்டு விழா நடத்த வேண்டும் என்பது தான். இசைஞானிக்கு பாராட்டு விழா என்றால் ஒட்டு மொத்த ரசிகர்கள் அனைவரும் கண்டிப்பாக அதை கொண்டாடி ரசிப்பார்கள். 40 வருடங்களாக சாதனை புரிந்து வரும் அவரை நிச்சயம் கொண்டாட வேண்டும். கண்டிப்பாக அவர் இதற்கும் மறுப்பு தெரிவிப்பார் நான் யுவனிடம் பேசிக்கொள்கிறேன்” என்றார் இயக்குநர் கரு,பழனியப்பன்.

”நான் வாழ்நாளில் இரண்டே இரண்டு பேரை பார்த்து தான் பொறாமைப்பட்டுள்ளேன். ஒன்று என்னுடைய முன்னாள் காதலியின் கணவன், மற்றொன்று இசைஞானி இளையராஜா அவர்கள் இசையில் படம் இயக்கும் இயக்குநர்கள். அந்த விதத்தில் எனக்கு இயக்குநர் பாணி மீது மிகப்பெரிய பொறமை உண்டு. நான் இசைஞானி இளையராஜா அவர்களை கவரும் வகையில் கதையை தயார் செய்து நிச்சயம் அவருடைய இசையில் ஒரு படத்தை இயக்குவேன். நாம் எல்லோரும் பயணத்தில் கேட்கும் பாடல்கள் அனைத்தும் இசைஞானி இளையராஜா அவர்களுடைய பாடல்கள் தான். அவருடைய பாடல்களை கேட்டால் 2,000 கிலோ மீட்டர் தாண்டி கூட பயணிக்கலாம். இயக்குநர் பாணியின் பாணி எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இப்படத்தில் எனக்கு அனைத்து பாடல்களும் மனதை கவரும் வகையில் உள்ளது.

இப்படிப்பட்ட சிறந்த பாடல்களை இசைஞானி இளையராஜா அவர்களால் தான் உருவாக்க முடியும். எனக்கு இசைஞானி இளையராஜா அவர்களிடம் ஒரு கோரிக்கை அவர் இதை போல பாடல்களை தான் உருவாக்க வேண்டும் என்பது தான் அது. கரு. பழனியப்பன் கூறியது போல் அவர் யுவன் ஷங்கர் ராஜா போன்று பாடல்களை உருவாக்க வேண்டாம். என்றும் உலகத்தில் ஒரே ஒரு இளையராஜா தான். ”ஆயிரம் யுவன் ஷங்கர் ராஜாக்கள் வந்தாலும் ஒரு இசைஞானி இளையராஜாவை மிஞ்ச முடியாது” என்பது தான் உண்மை. என்றார்.