‘கபாலி’ டீமுக்கு டைரக்டர் ரஞ்சித் திடீர் கண்டிஷன்!
மாஸ் ஹீரோக்களின் படங்கள் என்றாலே ஒரே பரபரப்பு தான்.
அதிலும் ரஜினி மாதிரியான கோடிக்கணக்கான ரசிகர்களை தன்னகத்தே பெற்றிருக்கும் ஹீரோ என்றால் அவர் நடிக்கின்ற படங்களுக்கு ஏற்படுகிற எதிர்பார்ப்பே தனி.
எந்தளவுக்கு ரஜினியின் படத்தை ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்களோ? அதே அளவுக்கு கொஞ்சமும் குறைவில்லாமல் அந்தப் படத்தைப் பற்றி ஏதாவது செய்தி கிடைக்காதா என்று மீடியாக்களும் துலாவ ஆரம்பித்து விடும்.
தப்பித் தவறி அந்தப் படக்குழுவில் யாராவது சிக்கினால் படத்தைப் பற்றிய பல ரகசியங்களை கறக்க ஆரம்பித்து விடுவார்கள். அவர்களும் பேச்சு வாக்கில் ஏதாவது ரகசியத்தை மீடியாக்களிடம் சொல்லி விடுவார்கள்.
அப்படித்தான் ரஜினி நடித்து வரும் ‘கபாலி’ படத்தைப் பற்றியும் ஏதாவது சீக்ரெட்ஸ் கிடைக்காதா? என்று மீடியாக்கள் மத்தியில் தேடல் அதிகரிக்க ஆரம்பித்திருக்கிறது.
சில வாரங்களுக்கு முன்பு வெளியான ‘கபாலி’ படத்தின் பர்ஸ்ட் லுக் டீசர் யூ-டியூப்பில் மிகப்பெரிய சாதனையை படைத்தது.
ரசிகர்கள் கொடுத்த அமோக வரவேற்பு அப்படத்தின் இயக்குநர் ரஞ்சித்துக்கு நிம்மதியைக் கொடுத்திருந்தாலும் படம் ரிலீசாகும் வரை படக்குழுவினர் அமைதியாக இருக்க வேண்டுமே என்கிற கவலையும் இப்போது அவரை ஆட்கொண்டுள்ளதாம்.
ஆமாம், ஏற்கனவே மலேசியாவில் படப்பிடிப்பு நடந்த போது ரஜினியின் விதவிதமான கெட்டப் ஸ்டில்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானதால் அதிர்ச்சியடைந்த ரஞ்சித் படப்பிடிப்பு நடக்கின்ற இடங்களில் ரசிகர்கள் வர தடை போட்டதோடு, படக்குழுவினரே படப்பிடிப்பு தளத்தில் செல்போன் பயன்படுத்தவும் தடை விதித்து ஒருவழியாக படப்பிடிப்பை நடத்தி விட்டு வந்தார்.
இப்போது படம் ரிலீசுக்கு முழு வீச்சில் தயாராக உள்ள நிலையில் ரிலீஸ் வரை படத்தின் கதை, கேரக்டர் உள்ளிட்ட எந்த ரகசியமும் இம்மியளவும் கூட மீடியாக்களில் கசிந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்.
இதற்காக கபாலியில் நடித்த நடிகர் நடிகைகள் முதல் டெக்னீஷியன்கள் வரை எல்லோரையும் அழைத்து ”கபாலி ரிலீசாகும் வரை எந்த மீடியாவுக்கும் பேட்டி தர வேண்டாம்” என்று அன்புக் கட்டளை போட்டிருக்கிறாராம்.
என்னமோ ஸ்பெஷலா இருக்குது? அது மர்மமா இருக்குது!!