2.0 – விமர்சனம்
RATING – 3.8/5
நடித்தவர்கள் – ரஜினிகாந்த், எமி ஜாக்சன், அக்ஷய் குமார் மற்றும் பலர்
ஒளிப்பதிவு – நீரவ் ஷா
இசை – ஏ.ஆர்.ரஹ்மான்
இயக்கம் – ஷங்கர்
வகை – ஆக்ஷன், சை-பை, த்ரில்லர்
சென்சார் பரிந்துரை – ‘U/A’
கால அளவு – 2 மணி நேரம் 26 நிமிடங்கள்
தொழில்நுட்ப ரீதியாக தமிழ்சினிமாவை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் முயற்சியில் முன்னணியில் இருப்பவர் இயக்குனர் ஷங்கர். பிரம்மாண்டத்துக்குப் பெயர் போன அவருடைய இயக்கத்தில் பலத்த எதிர்பார்ப்புக்கிடையே வெளியாகியிருக்கும் படம் தான் இந்த ‘2.0’.
ஷங்கர் படம் என்றாலே புதிய புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தப்படும். அதோடு ஏதேனும் சமூகப் பிரச்சனையையும் கதையாக கையாண்டிருப்பார். இந்தப் படத்திலும் 4-டி சவுண்ட் என்கிற புதிய ஒலி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியவர் கூடவே தனக்கே உரிய பாணியில் தற்போதையை சமூகத்துக்கு பெரும் பிரச்சனையாக இருக்கும் ஒன்றையும் சொல்லியிருக்கிறார்.
இன்றைய நவீன யுகத்தில் சோறு இல்லாத மனிதர்களைக் கூட பார்த்து விடலாம். ஆனால் கையில் செல்போன் இல்லாதவர்களை பார்க்கவே முடியாது. அந்தளவுக்கு ஒவ்வொருவரின் கையிலும் செல்போன் என்பது முக்கியமாகி விட்டது.
ஆனால் அந்த செல்போன்கள் வெளியிடும் கதிர் வீச்சுகள் எந்தளவுக்கு மனித இனத்துக்கு பேரழிவை தரக்கூடியதாக இருக்குமென்றும், அதனால் சாகக்கூடிய பறவை இனங்களை பாதுகாத்தால் தான் மனித இனம் உயிரோடு இருக்குமென்கிற உண்மையை தொழில்நுட்பத்தின் மிரட்டலோடு தந்திருக்கிறார் இயக்குனர் ஷங்கர்.
வசீகரன், சிட்டி ஆகிய இரண்டு கேரக்டர்களைத் தவிர இன்னும் இரண்டு எக்ஸ்ட்ரா கேரக்டர்களிலும் தரிசனம் தருகிறார் ரஜினி. வசீகரனிடம் இருக்கும் ஸ்டைல், சிட்டியிடம் இருக்கும் வேகம் மற்ற இரண்டு கேரக்டர்களிலும் புகுத்தி படம் பார்ப்பவர்களை மிரள வைக்கிறார்.
அவருடைய உதவியாளராக ரோபோவாக வருகிறார் எமி ஜாக்சன். மனித குணங்களை அவருடைய எந்திரத்துக்குள் புகுத்தி விட வட போச்சே…? நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்லை என்று வசனங்கள் பேசுவது நல்ல கலகலப்பு. அதைத்தாண்டி எமிக்கு படத்தில் பெரிதாக வேலை இல்லை.
படத்தில் ஹீரோ ரஜினியாக இருந்தாலும் வில்லனாக வரும் அக்ஷய் குமார் தான் ரசிகர்களை கவர்கிறார். ப்ளாஷ்பேக்கில் பறவைகளின் காதலனாக வரும் அவருடைய நடிப்பும், பறவை இனங்களை பாதுகாப்பதற்காக தெருவில் இறங்கி போராடுவதும், சட்டப்போராட்டத்தை நடத்துவதுமாக பார்ப்பவர்களை நெகிழ வைக்கிறது.
ஹாலிவுட் படங்களுக்கு இணையாக ஒரு தமிழ்ப்படத்தில் கிராபிக்ஸ் காட்சிகளை கொண்டு வந்த தொழில்நுட்பக் குழுவின் உழைப்பை பாராட்டியே ஆக வேண்டும்.
இடைவேளைக்கு முன்பு வரை விறுவிறுப்பாகச் செல்லும் காட்சிகள், இடைவேளைக்குப் பிறகு திகட்டுகிற அளவுக்கு வரும் கிராபிக்ஸ் காட்சிளாலும், வழக்கமான தமிழ்சினிமா பார்முலா ஹீரோ – வில்லன் சண்டைக் காட்சிகளாலும் கொஞ்சம் அயர்ச்சியைத் தருகிறது.
இதுபோன்ற டெக்னிக்கல் சம்பந்தப்பட்ட படங்களில் பாடல்கள் தேவையில்லை என்றாலும் காட்சிகளுக்கு இடையே ‘புள்ளினங்காள்’ பாடலும் படம் முடிவில் வரும் டைட்டில் கார்டில் ‘எந்திரலோகத்து சுந்தரியே’ பாடலும் வருகிறது. பாலிவுட் படங்களுக்கு இணையான பின்னணி இசையைக் கொடுத்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.
எடுப்பது ஆக்ஷன் படமாகவே இருந்தாலும் அதிலும் ஒரு சோஷியல் மெசேஜ் இருக்க வேண்டும் என்பதை தனது பார்முலாவாக வைத்திருக்கும் இயக்குனர் ஷங்கர் இந்தப் படத்திலும் மனிதனின் அத்தியாவயத் தேவைகளில் ஒன்றான செல்போன் குறித்த எச்சரிக்கையை ரசிகர்களுக்கு தந்த விதத்தில் பாராட்டலாம்.
சில காட்சிகள் பெரியவர்கள் ரசிக்கும்படியாகவும், பல காட்சிகள் குழந்தைகள் ரசிக்கும்படியாகவும் படத்தை இயக்கித் தந்திருக்கிறார் ஷங்கர்.