கட்சி ஆரம்பிக்கிறார் தங்கர்பச்சான்! : சின்னம் என்ன ‘கொய்யாப்பழமா’ சார்?
குடும்ப உறவுகளின் சிக்கல்களை தனது படங்களில் யதார்த்தமாக காட்சிப்படுத்தும் ஒரு சில இயக்குநர்களில் தங்கர்பச்சானும் ஒருவர்.
அழகி, சொல்ல மறந்த கதை படங்களே அதற்கு சான்றாகும்.
காலப்போக்கில் பட வாய்ப்புகளே இல்லாமல் போய் விட்டதால் மக்கள் பிரச்சனைகளில் அவ்வப்போது தன்னுடைய கருத்துகளை துணிச்சலாக தெரிவித்து வந்தார்.
அதோடு ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகு சமீபகாலமாக தமிழகத்தில் நடக்கும் பல்வேறு போராட்டங்கள், விவசாயிகளுக்கு ஆதரவாக பொதுமேடைகளில் கலந்து கொண்டு பேசி வருகிறார். குறிப்பாக ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது மாணவர்களிடம் தனிக்கட்சி தொடங்க இருப்பதாக ஏற்கனவே அறிவித்து இருந்தார்.
அதன்படி இப்போது தீவிர அரசியலில் ஈடுபடும் விதமாக தனி இயக்கம் ஒன்றை ஆரம்பிக்கப் போவதாக அறிவித்திருக்கிறார் தங்கர்பச்சான்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது :
இவ்வளவு காலம் நாம் அனுபவித்த அத்தனைத் துயர்களுக்கும், சுரண்டல்களுக்கும், அநீதிகளுக்கும் காரணம், நமது வாக்குரிமையை சரியாக பயன்படுத்தத் தவறியது தான்.
அதனால்தான் மீண்டும் மீண்டும் அரசியலைப் பிழைப்பாக்கி நம் வாழ்வை அழிக்க அவர்கள் களம் இறங்குகிறார்கள்.வாக்குகளை விலைக்கு விற்காமல் சரியாக பயன்படுத்தியிருந்தால் இந்தியாவில் தமிழ்நாடுதான் முதலிடத்தில் இருந்திருக்கும்,
திருடர்களிடமும், குற்றவாளிகளிடமும் நாட்டைக்கொடுத்துவிட்டு இப்படி நடுத்தெருவில் நின்று புலம்பி கொண்டிருக்க மாட்டோம்! இப்படி தினசரி கண்ணுக்கெதிரே விவசாயிகள் செத்து மடிந்து கொண்டிருக்க மாட்டார்கள்.
எனது 30 ஆண்டுகால அனுபவத்தில் திரைப்படம், எழுத்து, பொதுவாழ்க்கை, மக்களுக்கான போராட்டம் என இவற்றை எல்லாம் கடந்து வந்த பாதையில் நான் கற்றுக்கொண்டதைத் தான் தொடர்ந்து உங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.
தற்போது தமிழக மக்களை காக்க அதற்கான நேரம் வந்து விட்டது. அந்த இயக்கத்திற்கான பெயரை நான் தேர்வு செய்வதைவிட மாணவர்களாகிய, இளைஞர்களாகிய, நம் குடிமக்களாகிய நீங்கள் தேர்வு செய்வதுதான் பொருத்தமாக இருக்கும்.
முக்கியமாக, பொருளீட்ட வேண்டி எல்லைகளைக் கடந்தும், கடல் கடந்தும் நெடுந்தொலைவில் இருந்துகொண்டு தமிழ் நிலத்தையும், இம்மக்களையும் பற்றி அக்கறையும், கவலையும் கொண்டிருக்கின்ற நம் இளைஞர்களும் இந்த இயக்கத்தில் இணைந்து வழி நடத்தும்படி கேட்டுக்கொள்கின்றேன்.
அரசியலை வியாபாரமாக கொண்டவர்களை அகற்றுவோம். மக்கள் பணியே என்றும் நமது முதன்மைப்பணி. தமிழகத்தின் முன்னேற்றமே நமது முன்னேற்றம். நமக்காக ஒரு இயக்கம். இன்றே இணைந்திடுவோம் இளைய தலைமுறைகளே! அழைக்கின்றேன் தங்கர் பச்சான். ஆகையால் மாணவர்கள் எனக்கு ஆதரவு தரவேண்டும். எனக்கு உரிய ஆலோசனைகளை வழங்கலாம். இவ்வாறு தங்கர்பச்சான் தெரிவித்திருக்கிறார்.
அப்போ சின்னம் கண்டிப்பா ‘கொய்யாப்பழம்’ தான்.