இளையராஜா விவகாரம் : பிரச்சனைக்கு பிள்ளையார் சுழி போட்டதே எஸ்.பி.பி தான்!
‘இனி என் அனுமதியில்லாமல் நான் இசையமைத்த பாடல்களை கச்சேரிகளில் பாடக்கூடாது, முறையாக அனுமதி பெற்றுத்தான் பாட வேண்டும்’ என்று எஸ்.பி.பிக்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
இளையராஜாவின் இந்த சட்ட நடவடிக்கைக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்ற நிலையில், இந்தப் பிரச்சனைக்கு முதன்முதலில் பிள்ளையார் சுழி போட்டதே பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியன் தான் என்கிற தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது.
இதுநாள் வரை எஸ்.பி.பி பங்கேற்று வந்த எந்த மேடைக் கச்சேரிகளுக்கும் காப்புரிமையோ? அல்லது தன்னிடம் அனுமதி வாங்கியோ பாடல்களைப் பாட வேண்டும் என்று இளையராஜா கேட்டதே இல்லை. ஆனால் அவரை இப்படி ஒரு நிலைக்கு தள்ளிக் கொண்டு வந்ததே எஸ்.பி.பி தான்.
சில வருடங்களாகவே இளையராஜா பல மேடைக் கச்சேரிகளை தனது மூத்த மகன் கார்த்திக் ராஜாவின் துணையோடு பல வெளிநாடுகளில் நடத்தி வந்தது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான்.
அப்படித்தான் ஒரு மேடைக் கச்சேரியை நடத்த ஒப்புக் கொண்ட இளையராஜா அதில் எஸ்.பி.பியை பாட வைப்பதற்காகக் கேட்ட போது சுமார் 1 கோடிக்கும் மேலான தொகையைக் கேட்டிருக்கிறார்.
எஸ்.பி.பி இந்த தொகையை கேட்டவுடன் ஏதோ விளையாட்டாகத்தான் கேட்கிறார் என்று நினைத்து ”யோவ், நீ 10 லட்சம் தானே வெளியில வாங்குறே. அதுக்கும் மேல கொஞ்சமா கேளு. ஆனால் நீ மொத்த நிகழ்ச்சியோட பட்ஜெட்டையே கேக்குறீயே?” என்று எஸ்.பி.பிக்கு போன் மூலமாக குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறார் இளையராஜா.
அதற்கு ”நான் கேட்கிற இந்தத் தொகையைக் கொடுத்தால் நிகழ்ச்சிக்கு வருகிறேன், இல்லையென்றால் வரவில்லை” என்று கட் அண்ட் ரைட்டாகச் சொல்லி விட்டாராம் எஸ்.பி.பி
பண விஷயத்தில் எஸ்.பி.பியின் இந்த பிடிவாதம் இசைஞானி இளையராஜாவுக்கு பெரும் மன வருத்தத்தைக் கொடுத்திருக்கிறது.
”வரமுடியவில்லை என்று நாசுக்காக சொல்லி இருந்தா கூட பரவாயில்லை. அதைவிட்டு விட்டு பண விஷயத்தில் எஸ்.பி.பி இப்படி செய்வது சரியில்லை”என்று விட்டு விட்டார்.
அன்று எஸ்.பி.பி நடந்து கொண்ட விதம் தான் இன்று இளையராஜாவுக்கு ஒரு சந்தர்ப்பமாக அமைந்து எஸ்.பி.பிக்கு அவரது 50வது ஆண்டு சினிமா வாழ்க்கையிலேயே ஒரு பாடமாக அமைந்திருக்கிறது.
இத்தனைக்கும் எஸ்.பி.பிக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ் என்பது இளையராஜா அனுப்பியது இல்லை. அவரது அலுவலக நிர்வாகம் அனுப்பியது. சொல்லப் போனால் இந்த நோட்டீஸ் சென்றபோதும், நேற்று இளையராஜா சென்னையில் இல்லை. திருவண்ணாமலை சென்று விட்டார்.
அதோடு எஸ்.பி.பிக்கு நோட்டீஸ் தரப்படவில்லை. அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனத்துக்குத்தான் தரப்பட்டிருந்தது.
முன்பு இளையராஜாவுக்கு எப்படி மன வருத்தத்தை எஸ்.பி.பி கொடுத்தாரோ? அதுவே இப்போது அவருக்கு எதிராகத் திரும்பியிருக்கிறது. ஆக இந்தப் பிரச்சனைக்கு முதலில் பிள்ளையார் சுழி போட்ட பெருமை எஸ்.பி.பியையே சாருமே தவிர துளி கூட இளையராஜாவைச் சாராது என்பதே நிதர்சனமான உண்மை.