எலி – விமர்சனம்
ஹீரோவாக ஒரு ஹிட் கொடுத்த பிறகு தான் மற்ற படங்களில் காமெடி ட்ராக் செய்வேன் என்று அடம்பிடித்துக் கொண்டிருந்த வடிவேலு ‘தெனாலிராமன்’ படத்தை இயக்கிய யுவராஜ் தயாளனுடன் மீண்டும் கை கோர்த்திருக்கும் இரண்டாவது படம்.
வடிவேலுவின் சரித்திரப் படங்களில் வரும் காமெடிகளைப் பார்த்து சிரித்ததை விட ‘வின்னர்’, ‘தலைநகரம்’, ‘மருதமலை’ உள்ளிட்ட படங்களில் அவருடைய காமெடி ட்ராக்குளைப் பார்த்து வயிறு வலிக்க சிரித்தவர்கள் தான் அதிகம். அப்படிப்பட்ட ஒரு ஜனரஞ்சக வடிவேலுவைத்தான் இந்தப் படத்தின் காட்டியிருக்கிறேன் என்று ரிலீசுக்கு முன்பு ரசிகர்களுக்கு உத்தரவாதம் கொடுத்திருந்தார் இயக்குனர். அதனாலேயே படத்துக்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பு.
போலீசாக ஆசைப்பட்டு திருடனாகி விடும் வடிவேலு போலீசால் பிடிக்க முடியாத ஒரு கடத்தல் கும்பலுக்குள் உளவாளியாக சென்று போலீசிடம் பிடித்துக் கொடுக்கிறார். அதன்பிறகு அவர் ஆசைப்பட்டபடி போலீஸ் வேலை கிடைக்கிறது.
இதற்கு இடைப்பட்ட காட்சிகள் தான் திரைக்கதை, கதை, வசனம் மிச்சம் மீதி எல்லாமே…!
படம் ஆரம்பிப்பதற்கு முன்பு ‘புகைப்பிடிப்பது உடல் நலத்துக்கு கேடு’ என்று ஹெல்த் அட்வைஸரியை டைட்டில் கார்டில் வடிவேலுவின் குரலில் கேட்கும் போதே மொத்த தியேட்டர் சிரிக்க ஆரம்பித்து விடுகிறது. அப்பாடா…அப்போ ஒரு ரெண்டரை மணி நேரம் காமெடிக்கு கேரண்டி இருக்கு என்று நிமிர்ந்து உட்கார்ந்தால் போகப் போக ”படம் எப்பத்தாம்பா முடியும்?” என்கிற எண்ணம் இயற்கையாகவே வருகிறது.
அந்த ‘புகை எச்சரிக்கை’ டைட்டில் கார்டைத் தவிர பெரும்பாலான காட்சிகளில் வடிவேலு தொண்டை தண்ணி வத்தும் அளவுக்கு டயலாக்குகளை பேசிக் கொண்டிருக்கிறார். சிரிப்பு தான் வந்தபாடில்லை.
முழுப்படமும் வடிவேலுவைச் சுற்றித்தான் நகர்கிறது. அவர் இல்லாத காட்சிகளே இல்லை. நிஜ எலியைப் போல கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி உட்பட பல காட்சிகளில் ரியாக்ஷன் காட்டுவதற்கு வடிவேலுவின் உடல்மொழிகள் ரொம்பவே கை கொடுத்திருக்கிறது. ”அடடா இப்படிப்பட்ட காட்சிகளை அகன்ற திரையில் சிரிக்க சிரிக்க ரசித்து எத்தனை நாட்களாகி விட்டது?” என்கிற ரசிகர்களின் ஏக்கத்துக்கு நிறைவைத் தருகிறார் வைகைபுயல்.
அதே சமயம் ”இதைக் கேட்டால் ரசிகர்கள் தியேட்டரில் விழுந்து விழுந்து சிரிப்பார்கள் என்று நினைத்து பேசும் டயலாக்குகள்” எல்லாமே விழலுக்கு இறைத்த நீர் போல ஆகி விடுவது தான் சோகம்.
1960-ல் நடக்கும் கதை என்று படத்தின் ஆரம்பத்திலேயே டைட்டில் போட்டு நம்மை தயார் படுத்தும் டைரக்டர் அந்த காலகட்டங்களை யதார்த்தமாக காட்ட பிரம்மாண்டமான செட்டுகளை எல்லாம் போட்டு காட்டுவதில் ஆர்ட் டைரக்டர் தோட்டாதரணியை கடுமையாக வேலை வாங்கியிருக்கிறார். அந்த அக்கறையை நிறையவே அவர் எழுதிய திரைக்கதையிலும் காட்டியிருந்திருக்கலாம்.
ஹீரோயின் என்று சொல்ல முடியாவிட்டாலும் கிளப் டான்ஸர் போல ‘கொள்ளை அழகு கொட்டிக்கிடக்க’ இரண்டாம் பாகத்தில் வருகிறார் சதா. அவர் எதற்கு அங்கு வந்தார். கடத்தல் கும்பல் தலைவனின் ரூமுக்குள் என்னத்த தேடுகிறார்? என்பதற்கு விடையே இல்லை.
வடிவேலுவுடன் ஒரு டூயட் பாடல், ஒரு கிளப் டான்ஸ் என இரண்டு பாடல்களோடு எந்த ஸ்கோப்பும் இல்லாமல் போய் விடுகிறார். இருந்தாலும் அம்மணியை இம்மியளவு அழகு குறையாமல் காட்டிய ஒளிப்பதிவாளருக்கு ஒரு பொக்கே!
எம்.ஜி.ஆர், ஜெய்சங்கர் காலகட்டத்தில் வந்த படங்களைப் போல நல்ல விறுவிறுப்பான துப்பறியும் கதைக்குள் வடிவேலுவை வைத்து காமெடிப் படமாக தர ஆசைப்பட்ட இயக்குனர் வடிவேலுவின் அப்பாவித்தனம், வெகுளித்தனம், அவருக்கே உரிய உடல்மொழிகள் இவற்றையெல்லாம் எந்த காட்சிகளில் எப்படி பயன்படுத்தலாம் என்று யோசித்ததில் தடுமாறியிருக்கிறார்.
இதனாலேயே சரித்திரப்படமோ, பீரியட் படமோ இவற்றையெல்லாம் மூட்டை கட்டி வைக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறார் வடிவேலு.
ஆகையால் ‘மணந்தால் மகாதேவி’ என்கிற ‘ஹீரோயிஸ’ பிடிவாதத்தை எல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு மீண்டும் ‘கைப்புள்ள’ ‘வண்டுமுருகன்’ ‘நாய் சேகர்’ மாதிரியான காமெடி கேரக்டர்களில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது!
இந்த உடனடி மாற்றம் வைகைபுயலுக்கு மட்டுமல்ல.., அவர் காமெடிக்கு அடிக்ட்டான ரசிகர்களுக்கும் இனிப்பான செய்தியாக இருக்கும் என்பது மட்டும் நிதர்சனமான உண்மை.
சீக்கிரம் ஒரு நல்ல முடிவுக்கு வாங்க எலி..!