எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது – விமர்சனம்
RATING : 2.5/5
நக்கல், நையாண்டி, டகால்டி இந்த வார்த்தைகள் எல்லாம் கவுண்டமணிக்கே ஆகப்பொருத்தம்.
78 வயதிலும் அவருடைய குரலோடு கலந்து வருகிற மேற்படி விஷயங்களை இந்தப் படத்தில் முழுமையாக ரசிக்க முடிகிறது.
நகைச்சுவை சக்கரவர்த்தி என்கிற அடைமொழியை இந்தப் படத்தில் கவுண்டமணியின் பெயருக்கு முன்னால் பார்க்க முடிகிறது.
அந்தப் பட்டத்துக்கு கொஞ்சமும் குறை வைக்காமல் படம் பார்க்க வருகிற ரசிகர்களை சலிக்க சலிக்க சிரிக்க வைத்து அனுப்புகிறார் மேதகு கவுண்டர் அவர்கள்.
படப்பிடிப்புகளுக்கு கேரவன்களை வாடகைக்கு விடுகிற பெரும் பணக்காரர் கவுண்டமணி.
ஒரு பக்கம் அந்தத் தொழில் ஓஹோவென்று போய்க்கொண்டிருந்தாலும் இன்னொரு புறம் உண்மையான காதலர்களை சேர்த்து வைக்கும் வேலையையும் செய்து கொண்டு அதை அவ்வப்போது ட்விட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும் ஒரு குழுவை வைத்து அப்டேட்டும் செய்து அப்டேட்டில் இருப்பவர்.
அப்படித்தான் மதுரையில் பிரபல அரசியல்வாதியின் மகளான ரித்விகா செளந்தர் ராஜனுடன் வீட்டை விட்டு வெளியேறி ஓடி வர, தன்னிடம் வேலை செய்பவர்களுக்காக தனது கேரவனில் சுற்றுலா செல்லும் வழியில் அந்தக் காதல் ஜோடிகளுக்கு கேரவனில் அடைக்கலம் கொடுக்கிறார்.
மகளைத் தேடி அரசியல்வாதி ஒரு ரெளடிக் கும்பலை அனுப்ப, கவுண்டமணியோ அந்த அரசியல்வாதியின் வீட்டுக்கே காதல் ஜோடியைக் கூட்டிச் செல்கிறார்.
அந்த அரசியல்வாதியை ஒற்றை ஆளான கவுண்டமணி எப்படி சமாளித்தார்? காதல் ஜோடி ஒன்று சேர்ந்ததா? என்பதே கிளைமாக்ஸ்.
அதே நக்கலு, அதே நையாண்டி என்று சொல்கிற அளவுக்கு சினிமாக்காரர்கள், அரசியல் பெரும் புள்ளிகள், ஏன் இன்போசீஸ் நாராயணமூர்த்தியைக் கூட தனக்கே உரிய ஸ்டைலில் கவுண்டர் கலாய்க்கத் தவறவில்லை. அந்த நேரங்களில் தியேட்டரில் கிளாப்ஸ் அள்ளி ஸ்க்ரீனை அலற விடுகிறது.
“ஓய்ப் இல்லாமக் கூட வாழுந்திடுவானுங்க… ஆனா வைஃபை இல்லாம வாழவே மாட்டானுங்க… என்கிற இந்தக் கால இளவட்டங்களை கலாய்க்கிற டயலாக்கில் ஆரம்பித்து “டேய்… அதென்னடா எவன கேட்டாலும் மதுரை என்னுது… மதுரை எனக்குன்னே சொல்றான். ஏன்… நார்த் ஆற்காடு, தருமபுரியெல்லாம் என்ன பாவம் பண்ணுச்சு. அதையும் என்னுது சொல்ல வேண்டியதுதானேய்யா…?” என்று அரசியல் வாதிகளையும் பிடிபிடியென்று பிடிக்க…
அண்ணே கவுதம் மேனன் படத்துக்கு கேரவேன் கேட்கிறாங்கண்ணே…
ஈசிஆர்ல இருக்கிற காபி ஷாப்தானே? அனுப்பு.
அண்ணே… விஷால் படத்துக்கு கேரவேன் கேட்கிறாங்கண்ணே…
பின்னி மில்லுக்குதானே, அனுப்பு….
அண்ணே எப்படிண்ணே, ஆளை சொன்னா ஷுட்டிங் ஸ்பாட்டை சொல்றீங்க, ஷுட்டிங் ஸ்பாட்டை சொன்னா ஆளு யாருன்னு சொல்றீங்க? என்று கேட்கிற அசிஸ்டென்டிடம், டேய்… எனக்கு மட்டுமில்லடா. தமிழ்நாட்டு ஜனங்களுக்கே இது தெரியும்டா… என்று சினிமாக்காரர்களையும் தனக்கே உரிய நையாண்டி நக்கலோடு காமெடியில் தியேட்டரை அதிர விடுகிறார் கவுண்டர்!
இப்படி கவுண்டமணி வருகிற காட்சிகளில் எல்லாம் காமெடிக்கு கியாரண்டி கொடுத்திருக்கிறார் இயக்குநர் கணபதி பாலமுருகன்.
சாலைகளில் கட்-அவுட் வைத்து பொதுமக்களுக்கு இடைஞ்சல் தருவது போன்ற சமூக அவலங்களை தட்டிக் கேட்கும் துடிப்பான இளைஞனாக வருகிறார் செளந்தர்ராஜன். அதற்காக லவ் சீன்களில் கூட முகத்தை அப்படியே விரைப்பாக வைத்துக் கொண்டிருப்பதை தவிர்த்திருக்கலாம்.
அவருக்கு ஜோடியாக ரித்விகா. கலைராணியை ஜெராக்ஸ் எடுத்த மாதிரி நடிக்கும் அவருக்கும், செளந்தர் ராஜனுக்குமான காதலில் கொஞ்சம் கூட துள்ளல் இல்லை. மாறாக கடுப்பு தான் வருகிறது. அதை விடக் கடுப்பு கவுண்டமணியிடம் அவர்கள் காதல் மலர்ந்த கதையைச் சொல்லும் ப்ளாஷ்பேக்.
பின்னணிப் பாடகர் வேல்முருகனுக்கு இதில் நடிகராக புரமோஷன் கிடைத்திருக்கிறது. கவுண்டமணிக்கு உதவியாளராக வரும் அவர் அடக்கி வாசித்திருக்கிறார்.
எஸ்.என்.அருணகிரியின் இசையில் பாடல்கள் மனசில் ஓட்டவில்லை. பின்னணி இசையில் பாஸ்மார்க் வாங்குகிறார்.
”அட்வான்சை அப்புறமா வாங்கிக்கிறோம்… முதல்ல பேலன்ஸை கொடு” என்று காமெடி செய்யும் வில்லன் கோஷ்டியில் ஆரம்பித்து படத்தில் வருகிற அத்தனை கேரக்டர்களும் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
சினிமாவில் அதிகமாக பயன்படுத்தப்படும் கேரவன் என்கிற வண்டியை மட்டும் வைத்துக் கொண்டு கவுண்டமணிக்கே உரிய அக்மார்க் காமெடி பாணியில் ரசித்துச் சிரிக்கிற விதமாக படத்தை இயக்கித் தந்திருக்கிறார் இயக்குநர் கணபதி பாலமுருகன்.
‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’ – கூட்டம் கூட்டமாப் போய் சிரிச்சுட்டு வரலாம்!