“ஃபௌசி” படம் குறித்து இயக்குநர் அப்டேட்!

ரெபெல் ஸ்டார் பிரபாஸ், இயக்குநர் ஹனு ராகவபுடி இணையும் பான் இந்திய படமான “ஃபௌசி” படத்தின், அதிராகரபூர்வ டைட்டில் லுக் சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபாஸ் போர்விரனாக காட்சி தரும் ஃபௌசி பட ஃபர்ஸ்ட் லுக்கின் பின்னணி குறித்து, ரசிகர்கள் இணையம் முழுக்க விவாதித்து வருகின்றனர்.
இந்நிலையில் இயக்குநர் இயக்குநர் ஹனு ராகவபுடி படம் குறித்தான பல கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.
சமஸ்கிருத ஸ்லோகங்கள் மற்றும் பகவத்கீதையைச் சேர்ந்த குறிப்புகள் ஃபர்ஸ்ட் லுக்கில் பயன்படுத்தப்பட்டுள்ளதே ஏன் ?
நாங்கள் திட்டமிட்டு தான் சமஸ்கிருத ஸ்லோகங்களை பயன்படுத்தினோம், போர்வீரனைப் பற்றிய இந்தக் கதைக்கு அவை ஆழமான பொருள் தருகிறது மற்றபடி இது புராணக் கதையை அடிப்படையாகக் கொண்ட படம் அல்ல. பகவத்கீதையிலிருந்து நாங்கள் எடுத்துக் கொண்டது வெறும் தத்துவ ரீதியான ஊக்கம் மட்டுமே. ஃபௌசி என்பது மனித உணர்வுகள், தேசப்பற்று மற்றும் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இருந்த சமூக-அரசியல் பதற்றங்களை மையமாகக் கொண்ட ஒரு அழுத்தமான அதிரடி டிராமா. இன்றும் உலகளவில் அதேபோல் எதிரொலிக்கும் உண்மைகளை இப்படம் பேசும்.
ஃபௌசி டைட்டில் போஸ்டரில் அர்ஜுனன், கர்ணன் போன்ற புராண வீரர்களின் பெயர்கள் இருக்கிறதே அதற்கான அர்த்தம் என்ன?
ஃபௌசியில் பிரபாஸ் ஒரு மிகப்பெரிய வீரராக நடிக்கிறார். அவருடைய கதாப்பாத்திரத்தின் குணாதிசயத்தில் புராண வீரர்களின் சிறப்புகளை கலந்து காட்ட விரும்பினேன். அர்ஜுனன், கர்ணன், ஏகலைவன் ஆகியோர் திறமை, தியாகம், பக்தி என சக்திவாய்ந்த பரிமாணங்களைக் குறிக்கிறார்கள் அதை தான் டைட்டில் பயன்படுத்தினேன். “கர்ணன் பாண்டவர்களுடன் சேர்ந்து இருந்தால் மகாபாரதப் போர் எப்படி மாறியிருக்கும்?” என்ற சிந்தனை தான் இந்தக் கதையின் மையக் கரு. இப்போதைக்கு கதை பற்றி அதிகமாக சொல்ல முடியாது, ஆனால் இப்படம் 1940களின் காலனித்துவ பின்னணியில் நடக்கும் அதிரடி டிராமாவாக இருக்கும்.
ஃபௌசி பல மொழிகளில் உருவாகும் உலகளாவிய படமா?
பிரபாஸ் முன்னணி கதாபாத்திரமாக இருக்கும்போது, படம் தானாகவே உலகளாவியதாகி விடுகிறது. அவருக்கு எல்லைகளைத் தாண்டி ரசிகர்கள் உள்ளனர். எங்கள் கதை இந்திய மண்ணில் வேரூன்றியிருந்தாலும், அதன் உணர்ச்சி மற்றும் மனிதநேயம் எல்லா மக்களையும் தொடும் வகையில் அமைந்துள்ளது. பிரபாஸ் உலகளவில் படத்தை எடுத்துச் செல்லுவார், ஆனால் உண்மையில் இதயத்தைத் தொடும் கதையும் உலகளாவிய வகையிலான உணர்வுகளுமே அனைவரையும் இணைக்கும்.
நீங்கள் உணர்ச்சி மிகுந்த காதல் கதைகள் செய்வதில் வல்லவர், இப்படத்தில் ரொமான்ஸ் இருக்கிறா?, இமான்வியின் பாத்திரம் எப்படி இருக்கும் ?
“அந்தால ராக்ஷசி” முதல் “சீதா ராமம்” வரை என் காதல் கதைகள் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. ஃபௌசியிலும் காதல் இருக்கிறது. அது வேறுவிதமான வகையில், தீவிரமான, உணர்ச்சிகரமான வடிவில் இருக்கிறது. பிரபாஸ் மற்றும் இமான்வி இடையேயான காதல் உங்கள் இதயத்தைத் தொட்டுவிடும். இமான்வி “பாகிஸ்தானைச் சேர்ந்தவர் ” என பரவி வரும் வதந்திகளை முற்றிலுமாக மறுக்கிறேன். அவர் உண்மையில் லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்தார். அவரது தந்தை அங்கு ஹோட்டல் துறையில் பணியாற்றுகிறார். ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர், அவர் முழுமையான அர்ப்பணிப்புடன் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். மக்கள் அவரை ஆதரிக்க வேண்டும். ஆதாரமற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம்.
பிரபாஸுடன் பணிபுரியும் அனுபவம் எப்படி இருக்கிறது? அவர் உங்களுக்கு முழு சுதந்திரம் கொடுக்கிறாரா ?
பிரபாஸ் எல்லோராலும்“டார்லிங்” என்று அழைக்கப்படுவதற்குக் காரணம் இருக்கிறது. அவர் தனது இயக்குநர்களுக்கு முழு சுதந்திரத்தையும் வழங்குகிறார். அவர்களின் கற்பனைக்கு முழு ஆதரவு தருகிறார். அவரது மிகப்பெரிய நட்சத்திர அந்தஸ்தினையும் மீறி, அவர் எளிமையானவர், கடினமாக உழைப்பவர், மிகுந்த பணிவுடன் இருப்பவர். என் முழு திரை வாழ்க்கையிலும் இப்படிப் பட்ட படைப்புச் சுதந்திரம் கிடைத்ததில்லை. பிரிட்டிஷ் காலத்தின் பின்னணியில் நடக்கும் இந்தக் கதையில் அவர் பல பரிமாணங்களுடன் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். அவருடன் மீண்டும் இணைந்து பணியாற்றுவதற்கு நான் ஆவலாக இருக்கிறேன்.
ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க, T-Series நிறுவனத்தின் குல்ஷன் குமார் வழங்குகிறார்.