மெர்சல் படத்துக்காக புதிய முயற்சி! : ரஜினி, அஜித்துக்கு கிடைக்காத பெருமை விஜய்க்கு கிடைத்தது!

புத்தம் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி திரைப்படங்கள் எடுப்பது வாடிக்கையான ஒன்று தான். ஆனால் இன்றைய நவீன யுகத்தில் அப்படி எடுக்கின்ற படங்களை விளம்பரப்படுத்தி மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும் புத்தம் புதிய தொழில்நுட்பங்களை கையாள வேண்டியிருக்கிறது.
குறிப்பாக இதற்கு முன்பு வெளியான விஜய் எந்தப் படத்துக்கும் இல்லாத வகையில் ‘மெர்சல்’ படத்துக்கு கடந்த சில வாரங்களாகவே புதுமையான முறையிலும், இளவட்டங்களை குறி வைத்து அவர்களிடம் சென்று சேருகிற வகையிலும் சமூகவலைத்தளங்களில் விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது.
மெர்சல் டீஸர், மெர்சல் பர்ஸ்ட் ட்ராக், செகண்ட் ட்ராக் என அடுத்தடுத்து ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன் உச்சக்கட்டமாக இன்று புதிய முயற்சியாக மெர்சல் படத்துக்காக ஸ்பெஷல் எமோஜி Emoji ட்விட்டர் சமூக வலைத்தளத்தோடு இணைந்து இன்று வெளியிடப்பட்டது. ‘மெர்சல்’ என்று டைப் செய்தால் விஜய்யின் கெத்தான புகைப்படம் இடம்பெறும் இந்த எமோஜி தான் தற்போது ட்விட்டர் உலகில் ட்ரெண்ட்டிங்.
இதற்கு முன் தமிழ் சினிமாவில் ‘கபாலி’ படத்திற்கு இப்படி ஒரு முயற்சியை செய்ய திட்டமிடப்பட்டு அது முடியாமல் போனது. விஜய்யின் சக போட்டியாளரான அஜித் சமூகவலைத்தளங்களில் அதிக எண்ணிக்கையிலான ரசிகர்களை வைத்திருந்தும் அவருடைய படங்களில் இப்படி ஒரு முயற்சி மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில் தற்போது தென்னிந்திய சினிமாவிலேயே முதல் முறையாக விஜய்க்கு இப்படி ஒரு பெருமை ‘மெர்சல்’ படம் மூலம் கிடைத்திருக்கிறது.
மேலும் மெர்சல் படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை மறுநாள் 20ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மிகப்பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. அதற்கான பிரம்மாண்ட மேடைகள் அமைக்கும் பணி சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் இரவு, பகலாக நடைபெறுகிறது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் ஏற்கனவே வெளியிடப்பட்ட படத்தின் டீஸரும், இரண்டு பாடல்களின் டீஸர்களும் ரசிகர்களிடையே மகத்தான வரவேற்பைப் பெற்றுள்ளது.
அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யாமேனன் மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் மிக அதிக பொருட்செலவில் தயாரித்திருக்கிறது.