கோலி சோடா 2 – விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

RATING : 3/5

நடித்தவர்கள் – சமுத்திரக்கனி, கெளதம் மேனன், ரோகிணி, செம்பன் வினோத் ஜோஸ், பாரத் சீனி, வினோத், இசக்கி பரத், சுபிக்‌ஷா, கிரிஷா குரூப், ரக்‌ஷிதா மற்றும் பலர்

இசை – அச்சு ராஜாமணி

ஒளிப்பதிவு, இயக்கம் – எஸ்.டி.விஜய் மில்டன்

வகை – ஆக்‌ஷன், காமெடி, நாடகம்

சென்சார் பரிந்துரை – ‘U/A’

கால அளவு – 2 மணி நேரம் 10 நிமிடங்கள்

டையாளமற்ற நான்கு சிறுவர்களின் வாழ்க்கையை கோயம்பேடு மார்க்கெட் பின்னணியில் விறுவிறுப்பாக சொன்ன படம் தான் ‘கோலி சோடா’. அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்கத்தில் வந்திருக்கும் படம் இந்த ‘கோலி சோடா 2’.

‘கோலி சோடா’வில் எப்படி பெரிய மனிதர் ஒருவரை எதிர்த்து நான்கு சிறுவர்கள் போராடுவார்களோ? அதேபோல இதில் மூன்று இளைஞர்கள் மூன்று செல்வாக்கு மிக்க மனிதர்களை எதிர்த்துப் போராடுகிறார்கள்.

இது முந்தைய படத்தின் தொடர்ச்சி இல்லை. ஆனால் அந்தப் படத்தின் அடையாளங்களில் சில இந்தக் கதையிலும் இருந்ததால் ‘கோலி சோடா 2’ என்ற டைட்டிலை வைத்தாராம் விஜய் மில்டன்.

பாரத் சீனி, வினோத் இசக்கி பரத் என ஒருவருக்கொருவர் முன்பின் அறிமுகமில்லாத மூன்று இளைஞர்கள். எப்படியாவது வாழ்க்கையில் முன்னேறி விட வேண்டுமென்று போராடுகிறார்கள். மூவரின் முயற்சிக்கு தன்னால் ஆன உதவிகளைச் செய்கிறார் மெடிக்கல் ஷாப் வைத்திருக்கும் சமுத்திரக்கனி.

தங்கள் லட்சியத்தை நோக்கி பயணிக்கும் மூவருமே சமூகத்தில் மூன்று செல்வாக்கு மிக்க மனிதர்களால் ஏமாற்றப்படுகிறார்கள். எல்லாவற்றையும் இழந்து நிற்கும் அவர்கள் தங்களை ஏமாற்றியவர்களை பழி வாங்க ஒரே நேர் கோட்டில் பயணிக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கைப் போராட்டம் ஜெயித்ததா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

Related Posts
1 of 47

படத்தில் இவர் தான் ஹீரோ என்று யாரையும் தனித்துச் சொல்லி விட முடியாது. பாரத் சீனி, வினோத், இசக்கி பரத் ஒவ்வொருவரும் நம் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் இளைஞர்களைப் போல தனித்துவமான நடிப்பில் தனித்தனியாக ஸ்கோர் செய்கிறார்கள்.

எளிய மனிதர்களின் வாழ்க்கை எப்படி அதிகாரமிக்கவர்களால் அடக்கி ஆளப்படுகிறது என்ற கருத்தை சொல்ல நினைத்த விஜய் மில்டன் அதற்காக கதாபாத்திரங்களின் தேர்வில் கச்சிதம் காட்டியிருக்கிறார்.

சுபிக்‌ஷா, கிரிஷா குருப், ரக்‌ஷிதா என மூன்று நாயகிகளும், மூன்று நாயகர்களுக்கும் பொருத்தமானவர்களாக வந்து போகிறார்கள்.

சமுதாயத்தில் ஒரு சாதாரண மனிதராக, எந்த வம்பு தும்புக்கும் போக விரும்பாதவராக வரும் சமுத்திரக்கனியின் யாருக்கும் உதவும் மனப்பான்மை கேரக்டர் மனதைக் கவர்கிறது. அதற்காக திரையில் தோன்றும் போதெல்லாம் அட்வைஸ் மழை பொழிவது எரிச்சலூட்டுகிறது.

விசாரணை போலீஸ் அதிகாரியாக வரும் டைரக்டர் கெளதம் மேனன் அதிகம் அலட்டல் இல்லாத நடிப்பில் கண்களாலேயே மிரட்டுகிறார். அதிலும் கிளைமாக்ஸ் காட்சி சூப்பரோ சூப்பர். படத்தின் விறுவிறுப்புக்கு மிகப்பெரிய பலமே சமுத்திரக்கனி மற்றும் கெளதம் மேனன் இருவருடைய கேரக்டர்கள் தான்.

‘கோலி சோடா’வை ஒப்பிடும் போது அந்தப் படத்தில் இருந்த யதார்த்தம் இந்தப் படத்தில் மிஸ் ஆகியிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. காட்சிகளை நகர்த்துவதில் இருக்கிற வேகம், திரைக்கதையின் அமைப்பில் மட்டுப்படுகிறது. அந்த வகையில் படத்தின் இடைவேளை வரையிலுமான காட்சிகளில் இருக்கும் விறுவிறுப்பு இடைவேளைக்குப் பின்பான இரண்டாம் பாதி காட்சிகளில் இல்லை.

முதல் பாதியில் அடி வாங்கும் இளைஞர்கள் இரண்டாம் பாதியில் திருப்பி அடிப்பார்கள் என்பது சரிதான். அதற்காக 100 பேர் இருக்கும் கூட்டத்திலிருந்து எளிதாக தப்பித்துச் செல்வது, கிளைமாக்சில் 300 ரெளடிகளை அசால்ட்டாக புரட்டியெடுப்பது என்பதெல்லாம் ‘டூ டூ மச்’!

அச்சு ராஜாமணியின் பின்னணி இசை காட்சிகளின் நகர்வுக்கு கூடுதல் பலத்தைச் சேர்க்கிறது, ‘பொண்டாட்டி’ பாடல் மனதுக்கு இதம். விஜய் மில்டனின் கழுகுப் பார்வை ஒளிப்பதிவு சில இடங்களில் படத்தை பிரம்மாண்டமாகக் காட்டுகிறது.

”நாலு காசும் கூட நாலு பேரும் இருந்தா இவன் என்ன கடவுளாய்யா?”

”நான் என்ன பண்ணனும், என்ன பண்ணக்கூடாதுன்னு முடிவு பண்றதுக்கு நீ யாரு?”

என அதிகாரத்தில் இருப்பவர்களை கேள்வி கேட்கும் வீரியமான வசனங்கள் செம! செம!!

எளிய மனிதர்களின் உரிமைக்குரலாக ‘கோலி சோடா 2’ வை ஒலிக்க விட்டிருக்கிறார் விஜய் மில்டன்!