சிவப்பு மஞ்சள் பச்சை – விமர்சனம்
RATING – 3/5
”மலை ஏறப்போனாலும் மச்சான் துணை வேண்டும்” என்பார்கள். அந்தளவுக்கு குடும்ப உறவுகளில் மாமன், மச்சான் உறவு என்பது என்றுமே பிரிக்க முடியாத பந்தமாக இருக்கும்.
அப்படி தன் கணவனைப் பிடிக்கவே இல்லை என்று கோபிக்கும் தம்பியை எப்படியாவது அவரோடு பகை மறந்து ஒன்று சேர்த்து விட வேண்டும் என்று முயற்சிக்கும் அக்காவுக்கு வெற்றி கிடைத்ததா? இல்லையா? என்பதே இந்த ”சிவப்பு மஞ்சள் பச்சை”.
தமிழ்சினிமாவின் பெருமை பேசும் படங்களைத் தரக்கூடிய இயக்குனர்களை லிஸ்ட் போட்டால் அதில் இயக்குனர் சசிக்கும் இடமுண்டு. மனித வாழ்வியலின் உண்மைகளை படம் பார்ப்பவர்களின் மனசு வலிக்க காட்சிப்படுத்துவதில் கை தேர்ந்தவர்.
மாமன் மச்சான், அக்கா, தம்பி செண்டிமெண்ட்டோடு கூடவே பைக் ரேஸ் தவறு என்கிற பாடத்தையும் இப்படத்தில் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் சசி.
ஹீரோவாக தொடர்ந்து புதுப்பட வாய்ப்புகள் கிடைத்தாலும், அதில் ஒன்றாவது தன் பேர் சொல்லும்படி வெற்றிப்படமாக அமைந்து விடாதா? என்று ஏங்கிக் கொண்டிருக்கும் ஜி.வி பிரகாஷுக்கு இந்தப்படம் கண்டிப்பாக பேர் சொல்லும் படமாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
அக்காவுடனான செண்டிமெண்ட் காட்சிகள், மாமன் உடனான சண்டைக் காட்சிகள் என இரண்டிலும் காட்டுகிற வித்தியாசம் அவருடைய நடிப்பின் இன்னொரு பரிமாணம்!
அவருடைய மாமனாகவும், டிராபிக் போலீசாகவும் வருகிறார் சித்தார்த். அவருடைய தோற்றம் இன்னும் காவியத் தலைவனையே ஞாபகப்படுத்துகிறது. இருந்தாலும் அவருடைய கேரக்டரை கொண்டு சென்ற விதத்தில் நம்மை ரசிக்க வைப்பதில் ஜெயித்திருக்கிறார் இயக்குனர் சசி.
இப்படி ஒரு பாசக்கார அக்கா தனக்கும் கிடைக்க மாட்டாளா? என்று தம்பிமார்களை ஏங்க வைத்து விடுகிறார் லிஜோமோல் ஜோஸ். தமிழ்நாட்டுக்கு ஒரு தமிழிசை அக்கா மாதிரி, தமிழ்சினிமாவுக்கு ஒரு அக்கா கிடைத்திருக்கிறார். தம்பியை எப்படியாவது தன் கணவன் சித்தார்த்துடன் பேச வைத்து விட வேண்டும் என்று எடுக்கிற முயற்சிகளும், தன்னிடம் பேச மாட்டானா? என்று ஏங்குகிற காட்சிகளும் படம் பார்ப்பவர்களின் மனதை உருக்கி விடுகின்றன.
வெறுமனே ஹீரோவுடன் லவ், டூயட் என்று வழக்கமான தமிழ்சினிமா ஹீரோயின் போல வந்து போகாமல் தன் பங்குக்கு கவனம் ஈர்க்கிறார் ஜி.வி பிரகாஷின் ஜோடியாக வரும் கஷ்மீரா பர்தேசி.
பிரசன்ன குமாரின் ஒளிப்பதிவும், சித்து குமாரின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் விறுவிறுப்புக்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.
முக்கால் வாசி படம் சரியான திசையில் போய்க் கொண்டிருக்க, திடீரென்று யு-டர்ன் அடித்தாற் போல ரத்தம், வன்முறை என கிளைமாக்ஸ் காட்சிகள் வழக்கமான கமர்ஷியல் பார்முலாவுக்குள் போய் நிறைவடைவது சசி படத்தில் நாம் எதிர்பார்க்காதது. அதுவே நமக்கு பெருத்த ஏமாற்றமும் கூட.
இருந்தாலும் வெறுமனே மாமன் மச்சான், அக்கா தம்பி செண்டிமெண்ட்டோடு காட்சிகளை நகர்த்தாமல், சென்னை போன்ற பெருநகரங்களில் இளைஞர்களுக்கிடையே நடக்கும் ”பைக் ரேஸ்” என்கிற சமூகக் குற்றத்தையும் தவறு என்று கோடிட்டு காட்டிய விதத்தில் சசியின் சமூக அக்கற்றைக்கு ஒரு பொக்கே!
சிவப்பு மஞ்சள் பச்சை – குடும்பத்தோடு பார்த்து ரசிக்க ‘க்ரீன் சிக்னல்’.