”ஒரு பைசா சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுத்தார்..” – சமுத்திரக்கனியின் பெருந்தன்மை!
‘கோலி சோடா’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து ரஃப் நோட் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் படம் ‘கோலி சோடா 2’.
சமுத்திரகனி, பரத் சீனி, வினோத், எசக்கி பரத், சுபிக்ஷா, கிரிஷா குரூப் நடித்துள்ள இந்த படத்துக்கு அச்சு இசையமைத்திருக்கிறார். வரும் ஜூன் 14ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
சந்திப்பில் விஜய் மில்டன் பேசியதாவது, ‘கோலி சோடா’ மாதிரி இது இல்லைன்னு மக்கள் சொல்லிடக் கூடாதுன்னு நினைச்சி தான் இந்த படத்தை எடுத்திருக்கோம். ‘கோலி சோடா’வுக்கு உதவிய பாண்டிராஜ், லிங்குசாமிக்கு நன்றி.
‘கோலி சோடா’ படத்தில் ஒவ்வொரு மனிதனுக்கும் குறைந்த பட்சம் அடையாளம் கிடைக்கணும் என்பதை பற்றி பேசியிருக்கிறோம். இதில் அவர்களுக்கு கிடைத்த அடையாளம் அடுத்த நிலைக்கு போக விடாமல் தடுப்பதை பற்றி பேசியிருக்கிறோம். நான் கதை சொல்லிய, 4 மணி நேரத்தில் அச்சு ‘பொண்டாட்டி’ பாடலை போட்டுக் கொடுத்தார். படத்தின் பின்னணி இசையும் மிகவும் சிறப்பாக இருக்கும்.
அடுத்து சண்டைக்காட்சிகளை அமைத்த சுப்ரீம் சுந்தர் சிறப்பாக பேசப்படுவார். சமுத்திரகனி ரியல் லைஃபில் நெஞ்சை நிமிர்த்தி, துணிச்சலாக இருப்பவர். ஆனால், படத்தில் தோல்வியடைந்த ஒரு மனிதராக, வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்தார். இதுவரை ஒரு பைசா சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுத்தார். கௌதம் சார் நடித்த காட்சிகளை பார்த்து நானே மிரண்டு போனேன். மிகச்சிறப்பாக வந்திருக்கிறது.
விளம்பரம் செய்யும் செலவை விட்டு விட்டு, ‘ஜிஎஸ்டி வண்டி’ என்ற ஒரு விஷயத்தை ஆரம்பித்தோம். அந்த வண்டியில் மோர், இளநீர், உணவு என மக்களுக்கு தேவையான விஷயங்களை கொடுப்போம் என முடிவு செய்தோம். சென்னையில் சூர்யா அதனை தொடங்கி வைத்திருக்கிறார். சென்னை உட்பட 6 ஊர்களில் 12 வண்டிகள் ஓடுகிறது. மதுரை காந்திமதி அம்மா, கோவையில் ராஜா சேது முரளி ஆகியோரை இந்த விழாவுக்கு அழைத்திருக்கிறோம்” என்றார் இயக்குனர் விஜய் மில்டன்.
சந்திப்பில் நடிகர்கள் சமுத்திரக்கனி, இசக்கி பரத், நாயகிகள் சுபிக்ஷா, கிரிஷா குரூப், கிளாப் போர்ட் புரொடக்ஷன்ஸ் சத்தியமூர்த்தி, ‘பசங்க’ கிஷோர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.