கெளதம் மேனனை நடிகராக்க ஒரு வருடம் காத்துக்கிடந்த டைரக்டர்!
‘ஸ்டைலிஷ் இயக்குனர்’ என்று கோலிவுட்டில் பெயரெடுத்த டைரக்டர் கெளதம் மேனன் அடுத்து ஸ்டைலிஸ் நடிகர் என்று பெயரெடுக்க புறப்பட்டு விட்டார்.
துல்கர் சல்மான் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் ”கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்க சம்மதம் சொல்லியிருக்கிறார் கெளதம் மேனன்.
ஆனால் அவரை நடிக்க வைக்க சம்மதம் வாங்குவதற்கு சுமார் ஒரு வருடம் காத்துக் கிடந்தாராம் டைரக்டர் தேசிங் பெரியசாமி.
இது பற்றி கூறும்போது, “எங்கள் படத்தில் ஒரு உற்சாகமான கதாபாத்திரத்தில் கெளதம் சார் நடித்து வருகிறார். அந்த கதாபாத்திரத்தில் நடிக்க அவர் தான் பொருத்தமாக இருப்பார் என நினைத்து, ஒரு வருடத்திற்கும் மேலாக அவருக்கு மெசேஜ் அனுப்பி, அவரை நடிக்க கேட்டு வந்தேன். ஒரு கட்டத்தில் அவர் நடிக்க மாட்டாரோ என்று நம்பிக்கை இழந்த போது ஒருநாள் நேரில் அழைத்தார். அப்போது படத்தின் கதையைத் தவிர்த்து வாழ்க்கையைப் பற்றி நிறைய பேசினோம். ஆனால் கடைசியாக, அவர் திரைப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார்” என்றார்.
இந்தப்படம் இப்போதைய இளம் தலைமுறையிடம் இருந்து எடுக்கப்பட்ட ஒரு கதை, அதில் இளைஞர்கள் நடிக்க, அவர்களுக்கு அர்ப்பணிக்கப்படும் ஒரு படம். நடிகர் துல்கர் சல்மான் மற்றும் நடிகை ரிது வர்மா ஜோடியாக நடிக்க, இந்த படத்தில் ‘கலக்கப் போவது யாரு’ புகழ் ரக்ஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, நிரஞ்சனி அகத்தியன் நடிகையாக அறிமுகமாகிறார். ஆண்டோ ஜோசப் ஃபிலிம் கம்பெனி சார்பில் ஆண்டோ ஜோசப் தயாரிக்கிறார்.