இலை – விமர்சனம்
‘அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு?’ என்று கேட்டுக் கொண்டிருந்த காலகட்டமான 91களில் நடக்கும் கதை தான் இந்த ‘இலை.’
அந்த கால கட்டத்தில் பெண்களை பள்ளிகளில் படிக்கச் செல்வதே அபூர்வம். அதற்காக அவர்கள் பல இடைஞ்சல்களையும், போராட்டங்களையும் சந்திக்க வேண்டியிருக்கிறது. அப்படித்தான் இப்படத்தின் நாயகி ஸ்வாதியும் படிப்பதில் ரொம்பவும் ஆர்வமாக இருக்கிறார்.
தமிழக – கேரள எல்லையில் இருக்கும் திருநெல்லி என்கிற குக்கிராமத்தில் விவசாய வாழ்க்கையை வாழ்ந்து வரும் ஸ்வாதிக்கு அவருடைய அப்பாவும் படிப்பதற்கு முடிந்தளவுக்கு உதவி செய்கிறார்.
ஆனால் அவரது அம்மாவோ மகள் படிப்பதை விரும்பவில்லை. அதோடு மகளின் படிப்பை நிறுத்தி விட்டு தன் தம்பிக்கு கட்டி வைக்கவும் முடிவு செய்கிறாள். இருந்தாலும் அப்பாவின் ஆதரவில் தனது படிப்பைத் தொடர்கிறார் ஸ்வாதி.
இதற்கிடையே அதே ஊரைச் சேர்ந்த பண்ணையாரின் மகள் மாநிலத்தில் முதலிடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக ஸ்வாதியை பரீட்சை எழுத வர விடாமல் தடுக்க சில சதி வேலைகளைச் செய்கிறார். இன்னொரு பக்கம் எங்கே தன் மாமன் மகள் அதிகம் படித்து விட்டால் தன்னை திருமணம் செய்யாமல் போய் விடுவாளோ? என்கிற கோபத்தில் அவனும் பண்ணையாருடன் கைகோர்த்துக் கொண்டு ஸ்வாதியின் அப்பாவை வீழ்த்துவதற்கான வேலைகளில் இறங்குகிறான்.
இப்படி தன்னைச் சுற்றி வரும் சிக்கல்களை எல்லாம் உடைத்தெறிந்து ஆண்டு இறுதித் தேர்வை எப்படி எழுதுகிறார்? அப்பாவின் படிப்புக் கனவை நிறைவேற்றுகிறார் என்பதே கிளைமாக்ஸ்.
பெண் கல்விக்கு எதிராக சமூகத்தில் இருந்த எதிர்ப்பு நிலையை பதிவு செய்யும் படமாகத் தந்திருக்கிறார் இயக்குநர் பினிஷ்ராஜ்.
இலை என்கிற கேரக்டரில் வரும் நாயகி ஸ்வாதி படத்தின் மொத்த கதையையும் தன் தோள் மேல் தூக்கி சுமந்திருக்கிறார். பெண் கல்வியைப் பற்றிய கதை என்பதால் கிளைமாக்ஸ் வரை காட்சி முழுக்க அவர் தான் நிரம்பியிருக்கிறார். 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கான தோற்றமும் அவரது உடல் மொழிகளும் மிகச் சரியாகப் பொருந்துகிறது.
தனது அப்பா அடிபட்டி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த போதும் எப்படியாவது இறுதித் தேர்வை எழுதி விட வேண்டுமே? என்கிற அவருடைய வேகமும், அதை தடுக்கும் விதமாக வருகிற அத்தனை சோதனைகளையும் தாண்டி பள்ளியை நெருங்கிற போது தியேட்டர் கைதட்டல் சத்தத்தால் அதிர்கிறது.
வயக்காடு, மேடு, பள்ளம், காடு, பாறை, ஒத்தயடிப்பாதை என எல்லா இடங்களிலும் காலில் செருப்பே போடாமல் வெற்றுக் கால்களுடன் ஓடிவதும், மூச்சு வாங்குவதுமாக தனக்கு கொடுக்கப்பட்ட கேரக்டருக்கு தன் உழைப்பால் உயிரூட்டியிருக்கிறார்.
ஸ்வாதியின் முறை மாமனாக நடித்துள்ள சுஜித் ஸ்டெபனோஸ், வில்லன் போலக் காட்சியளித்தாலும் இடைவேளைக்குப் பிறகு மனசு மாறி அக்கா மகளின் படிப்புக்காக உதவ முன் வருவது எதிர்பாராத திருப்பம்.
ஸ்வாதியின் அப்பாவாக வரும் கிங் மோகன், அம்மாவாக வரும் ஸ்ரீதேவி அனில் மல்லி, நாயகியின் தம்பி அன்பாக வரும் அஸ்வின் சிவா, குட்டித் தங்கை பேபி ஜினியா என படத்தில் வரும் படத்தில் வருகிற மற்ற கதாபாத்திரங்களும் தங்களது கேரக்டரை உணர்ந்து அதற்கேற்ற நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
“உலகத்தின் இருள் எல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஒரு சின்ன தீக்குச்சியின் வெளிச்சத்தை மறைக்க முடியாது”
”சட்டத்துக்கிட்ட மறைச்சா தப்பிக்க முடியாது. ஆனா ஒத்துக்கிட்டா தப்பிச்சிடலாமே” போன்ற அர்த்தமுள்ள வசனங்கள் படத்தை சுவாரஷ்யத்துக்கு கூடுதல் பலம்.
மலை மற்றும் அதைச் சார்ந்த பகுதிகளை பச்சை பசேல் என்று தனது கேமராவின் படமாக்கி வியக்க வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் அஞ்சல். படத்தில் விஷூவல் சம்பந்தப்பட்ட காட்சிகள் அதிகம் இடம்பெற்றிருந்தும் அது பெரிதாகத் தெரியாத வண்ணம் காட்சிகளை படமாக்கியிருப்பது சிறப்பு.
விஷ்ணு வி. திவாகரனனின் பின்னணி இசையும், பாடல்களும் மோசமில்லை.
பரீட்சை எழுதுவதற்காக ஸ்வாதி வயல், காடு, மேடு எல்லாவற்றையும் கடந்து ஓடிச்செல்லும் காட்சிகளை ஜவ்வாக இழுத்துக் கொண்டு போகும் இடங்கள் நம்மை ரொம்பவே பொறுமையை சோதிக்கிறது.
பச்சைக் குழந்தையின் கையில் நாட்டு வெடிகுண்டு கிடைப்பதும், அதே குழந்தையைப் பார்த்துக்கொள்ள பாசக்கார கிராமத்து மக்களின் ஒருவர் கூட கிடைக்காமல் போவதும் கொஞ்சம் கூட நம்பும்படியாக இல்லை. ஒருவேளை அப்படி கிடைக்கவில்லை என்றாலும் பள்ளிக்கு அந்தக் குழந்தையை கொண்டு அங்கு தனக்கு ஆதரவாக இருக்கிற வாத்தியாரிடமே பார்த்துக் கொள்ளச் சொன்னால் கண்டிப்பாக பார்த்திருப்பார் என்று சொல்லத் தோன்றாமல் இல்லை.
இன்றைய சூழலில் கல்வியில் ஆண்டுதோறும் பெண்கள் முதலிடத்தில் இருந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் 15 வருடங்களுக்கு முன்னால் இந்தக் கல்வியை பெண்கள் பெறுவதென்பது அவ்வளவு எளிதாக இருந்து விடவில்லை. அதற்கெதிரான சிரமங்களையெல்லாம் தாண்டி எப்படி பெண் பிள்ளைகள் தங்களுக்கான கல்வியைப் பெற முடிந்தது என்பதை சுவாரஷ்யமான காட்சியமைப்புகளோடு, கிராமத்தின் பின்னணியில் மிக எளிமையான, யதார்த்தமான படமாகத் தந்திருக்கிறார் இயக்குநர் பினீஷ்ராஜ்.