இனிமே இப்படித்தான் – விமர்சனம்
‘வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்’ படத்தைத் தொடர்ந்து சந்தானம் சோலோ ஹீரோவாக களமிறங்கியிருக்கும் ரெண்டாவது படம் தான் இந்த ‘இனிமே இப்படித்தான்.’
சுமார் 100 படங்களுக்கும் மேல் காமெடியனாக மட்டுமே வந்து போன சந்தானத்துக்கு இந்தப்படம் ஹீரோவாக ஒருபடி மேலே போக கை கொடுத்திருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும்இல்லை.
வழக்கம் போல பல படங்களில் நாம் பார்த்து ரசித்து விட்ட கதை தான். ஆனால் அதில் காமெடி, லவ், செண்டிமெண்ட் ஆகியவற்றை மிக்ஸ் பண்ணி போரடிக்காமல் கொண்டு சென்றதில் ஜெயித்திருக்கிறார்கள் புதுமுக இரட்டை இயக்குனர்களாக முருகன் – ஆனந்த் ( முருகானந்த் ).
சரி கதைக்கு வருவோம்…
எந்த வேலைக்கும் போகாம நண்பர்களோட ஊர் சுத்துறவர் சந்தானம். அவருக்கு 3 மாசத்துக்குள் திருமணம் செய்தால் எல்லா வளமும் பெற்றும் பெரு வாழ்வு வாழ்வார். அப்படி 3 மாசத்துக்குள் திருமணம் செய்யவில்லை என்றால் அப்புறம் திருமணமே நடக்காது. ஏன்? சாமியாராககூட போய் விட வாய்ப்பிருக்கிறது என்று சொல்கிறார் ஜோசியர்.
உடனே சந்தானத்துக்கு திருமணம் செய்து வைக்க அப்பா நரேனும், அம்மா பிரகதியும் பொண்ணு பார்க்க ஆரம்பிக்கிறார்கள்.
இந்த விஷயத்தை கேள்விப்படும் சந்தானத்தின் நண்பர்களோ ”நிச்சயித்த திருமணம் எல்லாம் வேஸ்ட் மச்சான், லவ் பண்ணி கல்யாணம் பண்றது தான் செம கிக்கா இருக்கும்” என்று அவரை உசுப்பேத்துகிறார்கள்.
அடுத்த நாளிலிருந்து கண்ணில் படும் பெண்கள் பின்னாடியெல்லாம் காதலிக்க அலைகிறார் சந்தானம். அப்படி அலைந்ததில் ஹீரோயி ஆஷ்னா சாவேரி சிக்குகிறார். சந்தானம் துரத்தினாலும் ஆஷ்னா அவரை கண்டுகொள்வதாக இல்லை.
ஒரு கட்டத்தில் வீட்டில் பார்க்கும் பெண்ணாக அகிலா கிஷோரையே சந்தானத்துக்கு நிச்சயம் செய்கிறார்கள். அவரும் அம்மா, அப்பாவுக்காக சம்மதம் சொல்கிறார். நிச்சயம் நடந்த கையோடு ஆஷ்னா சாவேரியும் சந்தானத்தின் காதலுக்கு க்ரீன் சிக்னல் கொடுக்கிறார்.
ஆக ஒரே நேரத்தில் கிடைக்கும் இரண்டு பெண்களில் யாரை சந்தானம் திருமணம் செய்கிறார் என்பதேயே சென்டிமெண்ட்டான ட்விட்ஸ்டுடன் முடித்திருக்கிறார்கள்.
காமெடி செய்யும் போது ஏனோதானோவென்று இருக்கலாம். ஆனால் ஹீரோவாகி விட்டால் அதற்கென்று சில விஷயங்களை செய்ய வேண்டுமல்லவா? அந்த விஷயங்களை எல்லாம் இந்தப்படத்தில் சரியாகச் செய்திருக்கிறார் சந்தானம்.
ஒரு ஹீரோவுக்காக ஆக்ஷன், லவ், ஆக்டிங், ரொமான்ஸ் லுக், டான்ஸ் என எல்லாவற்றிலும் முதிர்ச்சி தெரிகிறது. பல இடங்களில் ரொம்ப ஸ்மார்ட்டாக இருக்கிறார் சந்தானம்.
சந்தானத்துக்கு ஜோடியாக படத்தில் இரண்டு ஹீரோயின்கள். ஒருவர் ஆஷ்னா சாவேரி இன்னொருவர் அகிலா கிஷோர். பார்ப்பதற்கு கிங்க்பிஷர் மாடல் போல இருக்கும் ஆஷ்னா வருகிற சீன் எதுவாக இருந்தாலும் புல் மேக்கப்போடு தான் வருகிறார். பாடல் காட்சிகளில் குட்டைப்பாவாரை, டவுசர் என கவர்ச்சிக்கும் வஞ்சனை செய்யவில்லை. அகிலா கிஷோர் கொஞ்சமான சீன்களில் வந்தாலும் நிறைவாகச் செய்திருக்கிறார்.
சந்தானத்தின் அப்பாவாக வரும் நரேன், அம்மா பிரகதி, மாமனாராக வரும் பெப்சி விஜயன் என எல்லா கேரக்டர்களும் தங்கள் கேரக்டரில் மிளிர்கிறார்கள்.
”என்ன லவ் பண்ண வந்தியா?” ”பின்னே லாண்டரிக்கு துணி போடவா வந்தேன். டிரஸ் பண்ணி வந்திருக்குறதைப் பார்த்தா தெரியல…”
”எம்ஜிஆருக்கு பிடிச்சது அண்ணா… இந்த காலத்துல இப்படி ஒரு பொண்ணா…”
”இப்போ எதுக்கு அவார்ட் பங்ஷனுக்கு வந்த மாதிரி தேம்பி தேம்பி அழுவுறீங்க..?” என படம் முழுக்க சந்தானத்தின் பஞ்ச் காமெடி ஒருபக்கம் தோரணம் கட்டி ஆட, இன்னொரு பக்கம் தனது பங்குக்கும் காமெடியில் கலகலக்க வைக்கிறார் தம்பிராமையா.
வி.டி.வி.கணேஷ், சிங்கமுத்து, புஜ்ஜிபாபு, லொள்ளுசபா மனோகர் என பல காமெடியன்களுக்கு சின்ன சின்ன சீனைக் கொடுத்து ரசிகர்களை சிரிக்க வைக்கவும் தவறவில்லை.
சந்தோஷ்குமார் தயாநிதி பாடல்களில் மட்டுமில்லாமல் பின்னணி இசையிலும் மெனக்கிட்டிருக்கிறார். கோபி ஜெகதீஸ்வரனின் ஒளிப்பதிவில் முழுப்படத்தையும் எகப்பட்ட கலர்களோடு ப்ரெஸ்ஸாக பார்த்து ரசிக்க முடிகிறது.
கே.பாக்யராஜின் சின்னவீடு, பாமா ருக்மணி ஆகிய படங்களையும் நம் ஞாபகத்துக்கு வந்து போவதை தவிர்க்க முடியவில்லை.
கிளைமாக்ஸ் ட்விஸ்ட் காட்சியில் மட்டும் தான் வந்தாலும் மனதை விட்டு விலகாதவராக கலங்க வைத்து விட்டுப் போகிறார் வித்யூராமன்.
கதை, திரைக்கதை இதையெல்லாம் விட்டுவிடுங்கள். வந்த ரசிகர்கள் ஒரு ரெண்டரை மணி நேரம் மனம்விட்டு சிரித்து விட்டுப் போக வேண்டும் என்பதை மட்டுமே மனதில் கொண்டு ஃபுல் காமெடி, லவ், ஜாலி எண்டர்டெயினராக கொடுத்திருக்கிறார்கள் இரட்டை இயக்குனர்கள் முருகானந்த்.