மாறி மாறி புகழ்ந்து கொண்ட சூர்யா – ஜோதிகா!
‘ராட்சசி’ படத்தைத் தொடர்ந்து ரேவதியுடன் இணைந்து நடித்திருக்கும் படம் ‘ஜாக்பாட்’.
குலேபகாவலி படத்தை தொடர்ந்து கல்யாண் இயக்கியிருக்கும் இப்படத்தை தனது 2டி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் தயாரித்திருக்கிறார் சூர்யா.
விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு சூர்யா பேசியதாவது, “என்னோட ஜோ தான் என்னோட ஜாக்பாட். 100 சதவிகிதம் 200 சதவிகிதம் எந்த காம்ப்ரமேஸும் இல்லாமல் சரியாகச் செய்கிற அம்மா தான் ஜோதிகா. அவர் தேர்ந்தெடுக்கிற படங்கள் எல்லாவற்றையும் மிகவும் யோசித்து யோசித்து தான் செய்வார்.
தமிழ்நாட்டுப் பெண்கள் ஒவ்வொருவரும் அவர்களைப் பற்றி, சமூகத்தைப் பற்றி மிகச் சரியான மதிப்பீட்டை வைத்திருப்பார்கள். ஜோதிகாவுக்கு இந்தப்படம் சரியான படம். சில ஆக்ஷன் காட்சிகளைப் பார்த்து எப்படி இதையெல்லாம் செய்திருப்பார் என்று ஆச்சர்யப்பட்டேன். ஆறுமாதம் சிலம்பம் கத்துக்கிட்டார். மீண்டும் நான் ஜோதிகாவிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன்” என்றார்.
பின்னர் பேசிய ஜோதிகா, ”என் கணவர் தான் என்னோட எல்லா முயற்சிகளுக்கும் கை கொடுப்பவர். அவர் இல்லை என்றால் நான் இல்லை. என்னோட ஜாக்பாட் சூர்யா தான். பெரும்பாலும் நடிகைகள் நடித்த படங்களை அந்தந்தப் படங்களின் ஹீரோக்களோடு தான் ஒப்பிட்டுப் பேசுவார்கள். ஆனால் நான் பெரிய பெரிய ஹீரோயின்களோடு நடிக்கும் வாய்ப்பினைப் பெற்றிருக்கிறேன். அதைப் பெருமையோடு சொல்லிக் கொள்கிறேன்” என்றார்.